பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த் துறை, தமிழ் விக்கிப்பீடியாவுடன் இணைந்து நடத்தும் கல்வியாளர்களுக்கான தமிழ் விக்கிப்பீடியாப் பயிலரங்கம்
மார்ச் 1, 2 - 2024 நாடகளில் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் நடக்கிறது.
அனைத்துத் துறை சார்ந்த பேராசிரியர்களும் பங்கேற்கலாம்.
பதிவுக் கட்டணம் ஏதுமில்லை.
பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறையும் தமிழ் விக்கிப்பீடியாவும் இணைந்து கல்லூரிக் கலையரங்கில் கல்வியாளர்களுக்கான விக்கிப்பீடியா குறித்த பயிற்சியினை 01.03.2024, 02.03.2024 ஆகிய இரு நாட்கள் நடத்துகின்றன. தமிழ், ஆங்கிலம், இயற்பியல், தொல்லியல், வேதியியல், உயிரியல் போன்ற அனைத்துத் துறைப் பேராசிரியர்களும் இப் பயிலரங்கில் பங்குகொள்ளலாம். உலகின் 322 மொழிகளில் வெளியாகும் இணையக் கலைக் களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இந்திய மொழிகளில் அதிக விக்கிப் பக்கங்களைப் பெற்று தமிழ் இரண்டாமிடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டில் தமிழ் விக்கிப்பீடியாவில் ஒன்றரை லட்சம் தமிழ்த் தொகுப்புகள் பதிவாயின. தமிழ் விக்கிப்பீடியாவின் இருபதாமாண்டு நிறைவைச் சிறப்பிக்கும் வகையில் இப்பயிலரங்கைத் தமிழ் விக்கிப் பீடியாவுடன் இணைந்து சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறை இரு நாட்கள் நடத்துகிறது. அனைத்துத் துறை சார்ந்த 50 கல்வியாளர்கள் இப்பயிலரங்கில் பங்கேற்றுப் பயிற்சி பெறுகிறார்கள். தமிழ் விக்கிப்பீடியா ஒருங்கிணைப்பாளர் செல்வ சிவகுருநாதன் தலைமையில் தொடர்ந்து பங்களிப்பு செய்யும் 9 விக்கி பங்களிப்பாளர்கள் கலந்து கொண்டு, தமிழ் விக்கிப்பீடியா குறித்தும், விக்கி ஊடகத் திட்டங்கள் குறித்தும், இணையவழிக் கட்டுரைகளைத் தொகுப்பது குறித்தும், கணினியில் நேரடிப் பயிற்சிகள் வழங்க உள்ளனர். இரு நாட்களும் கலந்து கொள்ள விரும்பும் பேராசிரியர்கள் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சௌ. மகாதேவன் (9952140275) அவர்களை வாட்ஸ் அப் எண்ணில் 27.02.24 செவ்வாய்க்கிழமைக்குள் தொடர்பு கொள்ளுமாறு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர் ஏ.சாகுல் ஹமீது அவர்களும், தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் சௌ. மகாதேவன் அவர்களும் செய்தியறிக்கை மூலமாகத் தெரிவித்துள்ளனர். இரு நாட்களும் கலந்து கொள்ளும் கல்வியாளர்களுக்கு மதிய உணவு, பங்கேற்பு மற்றும் வருகைச் சான்றிதழ் ஆகியன வழங்கப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக