லாபகரமான முதலீட்டுக்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
மதுரையில், நாணயம் விகடன் மற்றும் இன்டகிரேட்டட் இணைந்து நடத்திய ‘அஸெட் அலொகேஷன்; செல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா’ நிகழ்ச்சி 2025 பிப்ரவரி 23-ம் தேதி நடந்தது
பென்ஷன் விழிப்புணர்வு
இதில் முன்னணி நிதிச் சேவை நிறுவனமான இன்டகிரேட்டட் நிறுவனம் சார்பாகப் பேசிய திரு. எல்.சுதாகர் “பென்ஷன் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் இல்லை. வேலையில் சேர்ந்தவுடன் பென்ஷன் திட்டத்தில் சேமிக்க ஆரம்பித்தால் ஓய்வுக் காலத்தில் ராஜாவாக வாழலாம்” என்றார்.
இந்த நிகழ்ச்சியில் என்.எஸ்.டி.எல் சேவைகள் பற்றி திரு. சூர்ய பிரபாவும், காப்பீடுகள் பற்றி இன்டகிரேட்டட் நிறுவனத்தைச் சேர்ந்த திரு, ஆர்.குருராஜனும் பேசினர்.
நிதி நிபுணர் திரு. சோம வள்ளியப்பன்
அதைத் தொடர்ந்து நிதி நிபுணர் திரு. சோம வள்ளியப்பன் பேசினார்.
“கோவிட் 19 காலத்துக்குப் பிறகு, கடந்த மூன்று ஆண்டுகளில் பங்குச் சந்தையைக் காட்டிலும் தங்கம் மிக அதிக அளவில் முதலீட் டாளர்களுக்கு லாபம் கொடுத்திருக்கிறது. அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் மீண்டும் வந்த பிறகு எடுக்கிற அதிரடி முடிவுகள் பங்குச் சந்தையில் மேலும் நிச்சயமற்றத் தன்மையை அதிகரித்துள்ளது.
இதனால் உலக அளவில் அரசாங்கங்களும் முதலீட்டாளர்களும் தொடர்ந்து தங்கத்தை வாங்குகிறார்கள். அதனால் தங்கம் இப்போது ஒரு முன்னணி முதலீடாக மாறியுள்ளது.
மல்ட்டி அஸெட் மியூச்சுவல் ஃபண்டுகள்..!
தற்போது நிலவும் நிச்சயமற்றத் தன்மை நீங்கும் வரை தங்கத்தின் விலை உயர்வு தொடரலாம். ஆனாலும், முதலீட்டாளர்கள் ஒரு முதலீட்டை மட்டும் தேர்வு செய்யாமல், நிறுவனப் பங்குகள், கடன் சந்தை மற்றும் பங்குச் சந்தை மியூச்சுவல் ஃபண்ட், ரியல் எஸ்டேட் மற்றும் தங்கம், வெள்ளி என முதலீட்டை எல்லா சொத்துகளிலும் பரவலாக்கலாம்.
மல்ட்டி அஸெட் மியூச்சுவல் ஃபண்டுகள் அதைத்தான் செய்கின்றன. மிக அதிக விலையில் இருந்த பங்குகளின் விலை தற்போது குறைந்து இருக் கிறது என்று நினைத்து, இறங்குகிற சந்தையில், பாய்ந்துகொண்டு போய் முதலீடு செய்யக் கூடாது. அப்படி செய்வது, மேலிருந்து கீழே விழுகிற கத்தியைப் பிடிப்பது போன்றது. அதைத் தவிர்த்து, நிலைமை சீரான பிறகு தரமான நல்ல பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கலாம்” என்றார்.