முன்னணி கட்டுமான நிறுவனங்களின் 500க்கும் மேற்பட்ட
புதிய திட்டங்களுடன் சென்னையில் ‘பேர்ப்ரோ 2025’ கண்காட்சி: முதல்வர்
ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்
கண்காட்சியின் விளம்பர தூதராக
நடிகை திரிஷா நியமனம்
சென்னை, 06 பிப்ரவரி 2025- இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான கிரெடாய் 17வது ‘பேர்ப்ரோ 2025’ FAIRPRO 2025 சொத்து விற்பனை கண்காட்சியை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த கண்காட்சியை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.வரும் 14-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை 3 நாட்கள் சென்னை வர்த்தக மையத்தில் இந்த கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த ஆண்டு கண்காட்சியானது பிரமாண்டமாகவும் சிறப்பு வாய்ந்ததாகவும் இருக்கும் என்று கிரெடாய் உறுதி அளித்துள்ளது. ஏனெனில், வீடு வாங்குபவர்களுக்கு 32.5 மில்லியன் சதுர அடி குடியிருப்புகள், 0.25 மில்லியன் சதுர அடி வணிக இடம் மற்றும் 325 ஏக்கர் வீட்டு மனைகள் என 500க்கும் மேற்பட்ட திட்டங்கள் இந்த கண்காட்சியில் இடம்பெற உள்ளது. 3 நாள் நடைபெறும் இந்த கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். ‘பேர்ப்ரோ 2025’ கண்காட்சியின் விளம்பர தூதராக நடிகை திரிஷா உள்ளார். இந்த கண்காட்சியில் கிரெடாய் உறுப்பினர்களான 80க்கும் மேற்பட்ட முன்னணி கட்டுமான நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. அத்துடன், 5 முக்கிய வங்கிகள் பங்கேற்று, இவை வாடிக்கையாளர்களுக்கு வீட்டு கடன் திட்டங்கள் குறித்தும், அதன் சலுகைகள் குறித்தும் தெளிவாக விளக்கிக் கூற உள்ளன. மேலும் இதற்கு 15க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஸ்பான்சர்களாக உள்ளன.
கண்காட்சி குறித்து ஸ்டேட் வங்கியின்
சென்னை மண்டல பொது மேலாளர் எம். வி. ஆர். முரளி கிருஷ்ணா கூறுகையில், அடுக்குமாடி
குடியிருப்பு அல்லது வீட்டு மனை வாங்க இதுவே சரியான தருணம் ஆகும். இதில் 80க்கும் மேற்பட்ட
புகழ்பெற்ற கட்டுமான நிறுவனங்களின் குடியிருப்பு மற்றும் வீட்டு மனை திட்டங்கள் இடம்
பெற உள்ளது. எனவே சொத்து வாங்க விரும்புபவர்கள் தங்களுக்கு விருப்பமானதை தேர்வு செய்வதோடு,
அதற்கான கடன் ஒப்புதல் கடிதங்களைப் எங்கள் வங்கி மூலம் உடனடியாக பெறலாம். இந்த ஆண்டு,
நடைபெறும் கண்காட்சியில் எங்கள் வங்கி சார்பில் பொதுமக்களின் வீடு மற்றும் மனை சம்பந்தமான
சட்டப்பூர்வ கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் ஒரு சட்ட வல்லுனர் குழு எங்கள்
அரங்கில் இருக்கும் என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில்,
"நாட்டின் மொத்த உள்நாட்டு
உற்பத்தியில் சென்னை 8.8% பங்களிக்கிறது, மேலும் இது இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரம்
மற்றும் உற்பத்தி மையமாக உள்ளது. வரும் 2030–ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் பொருளாதாரத்தை
அடைய வேண்டும் என்ற மாநில அரசின் தொலைநோக்குப் பார்வை, நகரமயமாக்கல் மற்றும் தொழில்மயமாக்கலை
மேலும் துரிதப்படுத்தி வருகிறது, இது மாநிலத்தில் வீட்டுவசதித் துறைக்கு மிகுந்த பயனளிக்கும் என்றும்
அவர் தெரிவித்தார்.
இது குறித்து கிரெடாய் தென் மண்டலத் துணைத் தலைவர்
எஸ். ஸ்ரீதரன் கூறுகையில், தென்னிந்தியாவில்
நன்கு வளர்ச்சி அடைந்து வரும் ரியல் எஸ்டேட் துறைக்கு சென்னை முக்கிய மையமாக
உள்ளது. தேசிய அளவிலும் இதன் தாக்கம் பிரதிபலிக்கிறது. அனைத்து விதமான வசதிகளையும்
கொண்ட பரபரப்பு மிகுந்த சென்னை நகரம், வீடு
வாங்குபவர்களையும் முதலீட்டாளர்களையும் தொடர்ந்து வெகுவாக கவர்ந்து வருகிறது.
அதற்கு சான்றாக ‘பேர்ப்ரோ 2025’ உள்ளது, சொத்து
முதலீடுகளுக்கான சிறந்த இடமாக தேசிய வரைபடத்தில் சென்னை உள்ளது என்று
தெரிவித்தார்.
கிரெடாய் சென்னை மண்டலத் தலைவர்
முகமது அலி கூறுகையில், கட்டுமானத்
துறையில் 82.6 சதவீத பங்குடன், கிரெடாய்
உறுப்பினர்கள் நம்பிக்கை, தரம் மற்றும்
புதுமையான திட்டங்களை வழங்கி வருகின்றனர். இந்த கண்காட்சி, வீடு
வாங்குபவர்களுக்கு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் அங்கீகரிக்கப்பட்ட
திட்டங்களையும் சிறந்த சலுகைகளையும் ஒரே இடத்தில் வழங்குகிறது என்று தெரிவித்தார்.
இது குறித்து கிரெடாய் சென்னை மண்டல முன்னாள்
தலைவரும் ‘பேர்ப்ரோ
2025’ ஆலோசகருமான எஸ். சிவகுருநாதன் கூறுகையில், சென்னையில்
கட்டுமான துறை நல்ல நிலையில் உள்ளது. விற்பனையாகாத வீடுகளைப் பொறுத்தவரை கடந்த 7
ஆண்டுகளில் இல்லாத வகையில் வெகு குறைந்த அளவே உள்ளது. மேலும் தேவை அதிகரிப்பு
மற்றும் கட்டுமான பொருட்களுக்கான செலவுகள் காரணமாக சொத்து விலைகள் 6.5 சதவீதம்
உயர்ந்தும் உள்ளன. உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் மெட்ரோ விரிவாக்கத் திட்டங்கள்
சொத்து மதிப்பை மேலும் உயர்த்தி வருகின்றன. இது முதலீட்டிற்கு ஏற்ற நேரமாகும்
என்று தெரிவித்தார்.
‘பேர்ப்ரோ
2025’ கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் பி. கிருதிவாஸ் கூறுகையில், இந்த
கண்காட்சிக்கு ஏராளமான பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். ஆடம்பர
வீடுகளுக்கான தேவையுடன், அடுக்குமாடி
குடியிருப்புகள், வில்லாக்கள், வீட்டு
மனைகளுக்கான தேவைகளும் அதிகரித்து வருகிறது. மேலும், சுற்றுச்சூழலுக்கு
பாதிப்பு இல்லாத மற்றும் ஸ்மார்ட் வீடுகளும் பிரபலமடைந்து வருகின்றன, இது
சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த வீடுகளுக்கான மாற்றத்தைக்
காட்டுகிறது என்று தெரிவித்தார்.
சென்னை நகர மக்களின் மிகவும் நம்பகமான சொத்து
கண்காட்சியாக கடந்த 16 ஆண்டுகளாக
பேர்ப்ரோ இருந்து வருகிறது. எந்தவித ஒளிமறைவின்றி வீடு வாங்குபவர்களுக்கு
வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மைக்கு இது உறுதி அளிக்கிறது. முக்கிய
கட்டுமான நிறுவனங்கள், வங்கிகள்
மற்றும் நிதி நிறுவனங்கள் இதில் பங்கேற்பதால், கண்காட்சி
இடத்திலேயே வீடு வாங்குபவர்கள் தாங்கள் வாங்க விரும்பும் வீட்டிற்கான ஒப்பந்தம்
மற்றும் கடன் ஒப்பந்தங்கள் ஆகியவற்றை மேற்கொள்ளும் வசதியும் உள்ளது.