SENSEX 2025: முதலீட்டுக்கு ஏற்ற துறைகள் வங்கித் துறை, ரியல் எஸ்டேட், ஃபார்மா
இந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ் (HCC), ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து, 2025 ஜனவரி 6 ஆம் தேதி 'SENSEX 2025' என்ற நிகழ்ச்சியை சென்னையில் நடத்தியது.
சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார வல்லுநர் அர்ஜுன் ஜி நாகராஜன் "பரவலாக உலகப் பொருளாதாரம் மந்தமாக இருப்பதாகக் கருதப்பட்டாலும், உலக அளவில் வர்த்தக செயல்பாடுகளுக்கான தேவை இருக்கும் வரை சந்தைகள் சுழற்சி அடிப்படையில் செயல்பாடுகளைக் கொண்டிருக்கும். அமெரிக்காவின் டாலர் சர்வதேச அரங்கில் மதிப்பு இழந்துவிடுமா என்ற கேள்வியைப் பலர் எழுப்பி வருகின்றனர். இன்னமும் ஒருநாள் சராசரி கச்சா எண்ணெய் உற்பத்தியில் முன்னணி நாடாக அமெரிக்காதான் இருக்கிறது. கச்சா எண்ணெய் வர்த்தகம் டாலரில் தான் நடக்கிறது. எனவே, இப்போதைக்கு அமெரிக்காவின் டாலருக்கு பிரச்சனை வருவதற்கு வாய்ப்பில்லை" என்றார்.
அத்யந்த் கேப்பிட்டல் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ராகுல் சரோகி "உலக நாடுகள் அனைத்துக்குமான சந்தையாக இந்தியாதான் இருக்கிறது. காரணம், இங்கு தேவையும், வளர்ச்சிக்கான வாய்ப்புகளும் அதிகம். மாற்றங்கள் உண்டாவதற்கான வாய்ப்புகள் உள்ள இந்தியா போன்ற சந்தைகள் வளர்ச்சி அடையும். முதலீட்டாளர்களும் பணம் சம்பாதிக்க வாய்ப்புள்ள சந்தையைத்தான் தேர்வு செய்வார்கள். மேலும், இந்தியப் பொருளாதாரத்தின் அடித்தளமாக வலுவான வங்கிக் கட்டமைப்பு உள்ளது. வங்கித் துறை, ரியல் எஸ்டேட், ஃபார்மா போன்ற துறைகள் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய துறைகளாக இருக்கின்றன" என்றார்.
இந்த நிகழ்ச்சிக்கான மீடியா பார்டனராக நாணயம் விகடன் இதழ் செயல்பட்டது.