சிக்கனமும் சேமிப்பும்...! சோம வள்ளியப்பன், நிதி நிபுணர்
சேமிப்புக்கு வித்திட்ட சிட் ஃபண்ட்
சிக்கனமும் சேமிப்பும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் போல தான். பெரும்பாலானவர்கள் ஒவ்வொரு நாளும் பல மணி நேரங்கள் வீட்டுக்கு வெளியேதான் இருக்கிறார்கள். பள்ளி, கல்லூரி, வேலை இடங்கள் அல்லது தொழில், வியாபாரம் செய்யும் இடங்கள் மற்றும் குறைந்தபட்சம் பொழுதுபோக்கும் இடங்களுக்கு என மக்கள் வீட்டை விட்டு வெளியே போய் விடுகிறார்கள். அப்படியெல்லாம் முடியாது. ஒரு நாள் வீட்டிலேயே இருங்கள் என்றால் பயந்து விடுவார்கள். ஆனால், அதெல்லாம் 2019 கொரோனா காலகட்டத்திற்கு முன்பு தான்.
எது அவசியமான செலவுகள்?
கொரோனா காலகட்டத்தில் பல மாதங்களுக்கு வேறுவழியின்றி வீட்டிலேயே அடைந்து கிடந்தார்கள். அதன்மூலம் தங்களால் அப்படியும் இருக்க முடியும் என்று தெரிந்து கொண்டார்கள்.
அதேபோல மழை கொட்டி தீர்த்து வெள்ளம் வருகிறபோது மின்சாரம் இல்லாமல், பால் போன்ற எந்த வேறு எந்த உணவும் வாங்க முடியாமல் சில நாட்கள் வாழ முடியும் என்று தெரிந்து கொண்டார்கள். அப்படித்தான் இன்று பலரும் செய்து கொண்டிருக்கும் செலவுகளின் அளவும்.
அவர்கள் தற்போது செய்வதெல்லாம் அவசியமான செலவுகள் என்றும், அவற்றை கொஞ்சம் கூட குறைக்க முடியாது என்றும். இதுவும் ஒரு மாயைதான். எவரை உதாரணமாக எடுத்துக் கொண்டாலும் அவரை விட குறைவாக வருமானம் பெறுகிறவர்கள் சிறப்பாகவே வாழ்கிறார்கள் என்பதை, முயன்றால் அவர்களால் தெரிந்துகொள்ள முடியும்.
இளமையாக இருக்கும் காலம், உடம்பில் ஆரோக்கியம் இருக்கிற போது, கடுமையாக பிரயாணம் செய்ய முடியும், உழைக்க முடியும். அப்படிப்பட்ட காலங்களில் கூடுதல் வருமானம் கிடைக்கும். அவையெல்லாம் அவ்வப்போதே அந்தக் காலகட்டத்திலேயே செலவு செய்ய வேண்டியவை அல்ல.
பணவீக்கம் என்ற விலைவாசி உயர்வு..!
வாழ்க்கையின் பிற்பகுதி என்று ஒன்று உண்டு. அப்போது உடல் ஆரோக்கியம் குறைந்திருக்கலாம்.
சம்பாதிக்கும் வாய்ப்புகள் குறைந்து போகலாம். அல்லது வேறு காரணங்களுக்காக கூடுதல் பணம் தேவைப்படலாம். அப்போது என்ன செய்வது?
வரவு இல்லை. அல்லது குறைவு எனும் நிலை. செலவைக் குறைக்க முடியாததுடன் பணவீக்கம் என்ற விலைவாசி உயர்வு காரணமாக அதே தேவைகளுக்கே கூடுதல் தொகைகள் தேவைப்படும் நிலை. என்ன செய்ய?
வாழ்க்கை முற்பகுதியில் சம்பாதிப்பதில் ஒரு பகுதியை சேமித்து, அதற்காக சிக்கனமாக வாழ்வது புத்திசாலித்தனம். ஆண்டுகள் ஓட ஓட, முதலீடு செய்த சேமிப்புத் தொகை, பல்கிப் பெருகும்.
அப்படி சேர்த்துவிட்டால், இயலாத நிலையில் சிரமப்பட வேண்டாம். ஏங்க வேண்டாம். எவரிடமும் எதிர்பார்க்க வேண்டாம். தீய மட்டுமல்ல. நல்ல பழக்கங்களை விடுவதும் எளிதல்ல. சேமிப்பைப் தொடர்ந்து செய்ய அது பழக்கமாகிவிடும். சேமிப்பை இயன்ற அளவு சீக்கிரமே தொடங்கி விட வேண்டும்.
சிக்கனமாக செலவு..!
தொடர்ந்து சேமிப்பதற்கு பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன சீட்டுக் கட்டுவது, நகைச் சீட்டு கட்டுவது, ஆர்.டி போடுவது, மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி போடுவது என்று பல வாய்ப்புகள் உள்ளன. சீட்டுக் கட்டுவதால் சேமிக்கும் போதே கசர் தொகை என்ற வழியில் கொஞ்சம் கூடுதல் பணம் சேமிக்கப்படுகிறது. வழிமுறை எதுவாக இருந்தாலும் தொடர்ந்து சிக்கனமாக வாழ்ந்து சேமிக்க வேண்டியது அவசியம். அது நம்முடைய பிற்கால வாழ்க்கையை நிம்மதியாக வாழ உதவும்.
வாழ வேண்டியது இப்போதா? பிறகா? என்று கேட்டால், இரண்டும் என்று சொல்வேன். அதற்கான அடிப்படை வழி, அடிப்படை விதிமுறை, சிக்கனமாக செலவு செய்வதும் தொடர்ந்து சேமிப்பதும் ஆகும்.
திரு. சோம வள்ளியப்பன், நிதி நிபுணர்
Src; NV