விண்ணில் பறக்கும் காய்கறிகள் விலைவாசி
(The Hindu ஆங்கில இதழில் வெளிவந்த கட்டுரை)
மிகச் சாதாரண காய்கறிகளைக்கூட சாமானியர்கள் வாங்க முடியாத அளவிற்கு விலைவாசி அதிகரித்து வருகிறது.
நான் ஒரு புகழ்பெற்ற தனியார் கல்லூரியில் இளங்கலை சட்டம் பயிலும் கல்லூரி மாணவி.
எந்த வருமானமும் தற்போது ஈட்டவில்லை.
எனது அன்றாடச் செலவுகளுக்கு கிடைக்கும் பணத்தைக் கொண்டு மாத செலவுகளை நிர்வகிக்கிறேன்.
என் வகுப்பறைக்கு அருகில் ஒரு சிறிய உணவகம் உண்டு. அங்கு தவறாமல் வடை மற்றும் சட்னியை சாப்பிடுவேன்.
திடீரென்று ஒரு வாரம் முழுவதும் சட்னியை காணவில்லை. உரிமையாளரிடம் கேட்ட பொழுது அவருடைய பெருமூச்சு ஒன்றே பதிலானது.
வடையுடன் சேர்த்து பரிமாற முடியாத அளவிற்கு வெங்காயத்தின் விலை வானத்தில் பறக்கிறது.
பொருளாதார ரீதியில் சாத்தியமற்றது என்றும் விளக்கினார். அப்போது அதை கேட்டுக்கொண்டு நகர்ந்துவிட்டேன் அதிகம் சிந்திக்கவில்லை.
அளவு குறைந்து விலை உயர்வு சில காலமாகவே வளாகத்தில் உள்ள
ஒவ்வொரு உணவகத்திலும் உணவுப் பொருட்களின் அளவை குறைத்து விலைகளையும் உயர்த்தத் தொடங்கியதை கவனித்தேன்.
ஆர்வம் மிகுதியால், வேறொரு கடைக்காரரிடம் இதற்கான காரணம் குறித்து விசாரித்தேன்.
செலவுகள் அதிகமாகி விட்டன என பொத்தாம் பொதுவாக குறிப்பிட்டார்.
இந்தியாவில் பணவீக்கம் தொடர்ச்சியான
பிரச்சனையாக மாறி வருகிறது என்பது சட்ட மாணவியான எனக்கு தெரியும்.
ஆனால் இது சற்றே மாறுபட்டதாக தெரிகிறது. உணவு பணவீக்கம் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்து வருகிறது.
வீட்டிலும் ஓய்வூதியர்களான எனது பெற்றோர் காய்கறிகளின் விலை அதிகரிப்பது குறித்து அன்றாடம் புலம்பி வருகின்றனர்.
என் தந்தை இரண்டு வெவ்வேறு காய்கறிகளை உண்ணும் பழக்கம் உடையவர். ஆனால் இப்போது ஒன்றை குறைத்து விட்டார். எப்போதுமே பலதரப்பட்ட காய்கறிகளை உட்கொள்ள முன்னுரிமை அளிக்கின்ற ஒரு குடும்பம்.
24 வருடங்களுக்கு பிறகு இப்போது அதை குறைப்பதை தவிர அவர்களுக்கு வேறு வழி இல்லை என்ற நிலை வந்து விட்டது.
என் நண்பர்கள் சத்து நிறைந்த உணவை காட்டிலும் கப் நூடுல்ஸ் மற்றும் சிப்ஸ் போன்ற மலிவான துரித உணவை தேர்ந்தெடுப்பதை கவனித்திருக்கிறேன்.
சமீபத்தில் எங்கள் கல்லூரியில் பட்டமளிப்பு விழாவிற்கு முன்னாள் மாணவர்கள் வருகை புரிந்தனர்.
பெருநகரங்களின் கட்டுக்குள் அடங்காத வாழ்க்கைச் செலவினங்கள் அவர்கள் ஊதியத்தை எப்படி அரித்துத் தின்கிறது என்று தங்கள் விரக்தியை வெளிப்படுத்தினர்.
வளாகத்திற்குள் உணவு விலை வெளியில் உள்ள விலையோடு ஒப்பிடும்போது பரவாயில்லை என்றும் குறிப்பிட்டனர். உணவுப் பணவீக்கமும், அரசின் முன்மொழிவும் சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் பணவீக்கத்தைக் கணக்கிடும் குறியீடுகளிலிருந்து உணவு பணவீக்கத்தை நீக்குவதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவுகளை விளக்கும் ஒரு கட்டுரையை நான் இந்த இந்து பத்திரிகையில் படித்தேன்.
இதற்கு பின்னால் உள்ள முக்கியத்துவம் மேலோட்டமாக படிக்கும் பொழுது புரிய வில்லை.
ஆனால் இப்போது அதன் பரந்த தாக்கங்களை உணர்கிறேன். அங்கீகரிக்கிறேன். இன்னும் ஒரு வருடத்தில் சட்டப்படிப்பை முடித்து தொழில்முறை வாழ்வை துவங்கும் பொழுது ஆரோக்கியம் நிறைந்த உணவை என் ஊதியத்திற்குள் நான் பெற முடியுமா? என்பது குறித்து கவலை கொள்கிறேன்.
_ *தேஜஸ்வினி சுகுமாரன்*
கடலூரைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி
நன்றி: The Hindu Daily (8.12.2024)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக