இந்திய சுற்றுச்சூழல் பாதிப்பில்லா இலக்கை அடையவும், போட்டித்தன்மையை அதிகரிக்கவும் சர்வதேச நிதி நிறுவனத்திடமிருந்து ரூ.205 கோடி நிதி திரட்டும் புரோபெக்டஸ் கேபிடல் நிறுவனம்
Profectus Capital Raises $25 Million from International Finance Corporatio
சென்னை, நவ. 7- சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் உதவிகளை வழங்கி வரும் வங்கி அல்லாத நிதி நிறுவனமான புரோபெக்டஸ் கேபிடல் நிறுவனம், உலக வங்கி குழுமத்தின் உறுப்பினரான இன்டர்நேஷனல் பைனான்ஸ் கார்ப்பரேஷனிடம் மாற்ற முடியாத கடன் பத்திரங்களை வழங்கி சுமார் 205 கோடி ரூபாய் நிதி திரட்ட இருப்பதாக அறிவித்துள்ளது.
சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் நிதி சேவை துறையில் இந்தியாவில் இன்டர்நேஷனல் பைனான்ஸ் கார்ப்பரேஷன் முதல் முறையாக இந்த தொகையை முதலீடு செய்ய உள்ளது. இந்த தொகையானது பசுமை சொத்துக்களுக்கு பயன்படுத்தப்பட இருப்பதால், மாற்ற முடியாத கடன் பத்திரங்களுக்கு பசுமை பத்திரங்கள் என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் புரோபெக்டஸ் கேபிடல், சர்வதேச மூலதன சந்தை சங்கத்தின் பசுமைப் பத்திரக் கொள்கைகளுக்கு ஏற்ப கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் உள்ள அவற்றிற்கு தீர்வு காணும் வகையில் இன்டர்நேஷனல் பைனான்ஸ் கார்ப்பரேஷனிடம் இருந்து பெறும் நிதியை அந்த நிறுவனங்களுக்கான ஆற்றல் திறன் இயந்திரங்களுக்கு புரோபெக்டஸ் வழங்க உள்ளது. இதன் ஒரு பகுதியாக, இன்டர்நேஷனல் பைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் ஆற்றல் திறன் சொத்துக்களை அடையாளம் காணவும், அதற்கான செயல்பாட்டுக் குழுக்கள் மற்றும் நிர்வாகத்தின் திறனை உருவாக்கவும், வளர்ச்சித் திட்டத்தை உருவாக்கவும், இந்த நிறுவனங்களில் இருந்து வெளியேறும் காற்று மாசை குறைக்கும் வகையில் பல்வேறு ஆலோசனைகளை வழங்கும்.
இது குறித்து புரோபெக்டஸ் கேபிடல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் முழு நேர இயக்குனர் கே.வி. ஸ்ரீனிவாசன் கூறுகையில், உலக வங்கி குழுமத்தின் உறுப்பினரான இன்டர்நேஷனல் பைனான்ஸ் கார்ப்பரேஷன் உடன் கூட்டு சேருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இன்டர்நேஷனல் பைனான்ஸ் கார்ப்பரேஷன் போன்ற நிறுவனம் எங்கள் மீது நம்பிக்கை வைத்திருப்பது என்பது எங்களுக்கு கிடைத்திருக்கும் மரியாதை என்பதோடு எங்களின் சிறப்பான செயல்பாடுகளையும் அது காட்டுகிறது. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஆற்றல் திறன்மிக்க உபகரணங்களை வாங்குவதற்கு நிதி அளிப்பதற்காக இந்தியாவில் இன்டர்நேஷனல் பைனான்ஸ் கார்ப்பரேஷன் முதல்முறையாக முதலீடு செய்கிறது என்பதால், இந்த கூட்டாண்மை எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது மற்றும் மதிப்புமிக்கது. இது சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சியில் சிறப்பானதொரு மாற்றத்தை ஏற்படுத்தும். கடந்த 2018-ம் ஆண்டு எங்கள் நிறுவனம் துவங்கப்பட்டதில் இருந்து பல்வேறு சவால்களை கடந்து வணிக வளர்ச்சி மற்றும் லாபம் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் நாங்கள் முன்னேறி வருகிறோம். எங்கள் பசுமைப் பத்திரங்களில் இன்டர்நேஷனல் பைனான்ஸ் கார்ப்பரேஷன் முதலீடு செய்வதன் மூலம், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்கு நாங்கள் மேலும் உறுதுணையாக இருப்போம் என்று தெரிவித்தார்.
இந்தியாவில் உள்ள சுமார் 6.5 கோடி சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் 30 சதவீதமும், ஏற்றுமதியில் 40 சதவீதமும் பங்களிக்கின்றன. இந்தத் துறைக்கான கடன் இடைவெளி ரூ.25.8 டிரில்லியன் (சுமார் 311 பில்லியன் டாலர்) என மதிப்பிடப்பட்டுள்ளது. 50 சதவீதத்திற்கும் அதிகமான நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளில் செயல்பாட்டு செலவில் 35 முதல் 40 சதவிகிதம் வரை மின்சாரம் உள்ளிட்ட ஆற்றல் பயன்பாட்டிற்கு செலவிடுகின்றன. 2017-ம் ஆண்டில் இந்த நிறுவனங்களின் 30 மெட்ரிக் டன் கார்பன் டை ஆக்சைடுக்கு சமமான ஆற்றல் நுகர்வானது 2030-ம் ஆண்டில் 72 மெட்ரிக் டன்னாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஆற்றல் சேமிப்பிற்கு, பழைய இயந்திரங்களுக்கு பதிலாக புதிய இயந்திரங்களை மாற்றுவதன் மூலம் ஆற்றலை சேமிக்க முடியும்.
இன்டர்நேஷனல் பைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இந்தியாவிற்கான தலைவர் வெண்டி வெர்னர் கூறுகையில், நாங்கள் செய்யும் இந்த முதலீடானது சிறு வணிக நிறுவனங்களின் ஆற்றல் திறன் சேமிப்பிற்கு உதவும். நாட்டின் காலநிலை இலக்குகளை ஆதரிப்பதன் மூலம், இந்த நிதியானது இதுபோன்ற பிற நடவடிக்கைகளுக்கும், போட்டித்தன்மையை அதிகரிப்பதற்கும், வேலைகளை உருவாக்குவதற்கும், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் உதவும் என்று நாங்கள் நம்புகிறோம். புரோபெக்டஸ் நிறுவனத்துடன் நாங்கள் இணைந்து இருப்பதன் மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் ஆற்றல் திறன், பசுமையை உள்ளடக்கிய வளர்ச்சியில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று தெரிவித்தார்.