பொது மக்களுக்குக் குறைந்த வட்டியில் கடன் (Loan) தருவது வங்கிகளின் வேலை. வங்கிகள் கடன் தர மறுப்பவர்களுக்குத் துணிந்து கடன் தருவதுதான் பி டு பி (P2P - Peer-to-Peer ) என்கிற அடிப்படையில் இயங்கும் 'என்.பி.எஃப்.சி' (NBFC-Non-Banking Financial Companies) நிறுவனங்களின் வேலை. பல வகைகளிலும் முதலீடுகளை ஈர்க்கும் இந்த நிறுவனங்கள், உடனடிக் கடன் தேவைப்படுகிறவர்களுக்கு அதிக வட்டிக்கு கடன் தந்து, லாபம் சம்பாதிக்கின்றன.. உதாரணமாக, முதலீடு செய்பவர்களுக்கு 10% - 14% வட்டி தந்துவிட்டு, 22% - 24% வரை அதிக வட்டிக்குக் கடன் கொடுத்து லாபம் கண்டு வருகின்றன.
இந்த பி டு பி நிறுவனங்கள், அதிகம் பணம் வைத்திருப்பவர்களிடமிருந்து தொழில் முதலீடு பெறலாம். ஆனால், மக்களிடமிருந்து டெபாசிட் பெறக் கூடாது என்பது ஆர்பிஐ-யின் விதிமுறை. ஆனால், இந்த விதிமுறையைத் தாண்டி ஃபிக்ஸட் டெபாசிட் வாங்குகின்றன இந்த பி டு பி நிறுவனங்கள். அப்படி வாங்கும் பணத்தை, திரும்ப வேண்டும் என்று கேட்கும்போது தராமல் இழுத்தடிக்கும் வேலையை பல பிடு பி நிறுவனங்கள் செய்து வருகின்றன. இது தொடர்பாகப் பல புகார்கள் ஆர்பிஐ-க்கு வந்ததால்தான், ஆர்பிஐ எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
பணத்துக்கு அதிக வருமானம் வர வேண்டும் என்று நினைப்பது இயற்கைதான். அதிக வட்டிக்கு கடன் தருவதன் மூலம் அதிக வருமானத்தைப் பெற முடியும். ஆனால், கடனாகத் தரும் பணம் நிச்சயமாகத் திரும்ப வரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. இப்படி மிகப் பெரிய ரிஸ்க் இருக்கும் தொழிலில் உள்ள ஒரு நிறுவனம் மக்களிடமிருந்து டெபாசிட் வாங்குவது எவ்வளவு பெரிய தவறு. இது மாதிரி ரிஸ்க் உள்ள தொழிலில் துணிந்து முதலீடு செய்வது வேறு; அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு டெபாசிட் செய்வது வேறு என்பதை மக்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.
அதிக வட்டி தருகிறோம் என்று ஆசை காட்டி மக்களிடமிருந்து டெபாசிட் வாங்கும் இது போன்ற மோசடி பொன்சி நிறுவனங்கள் மீது புகார் வந்த உடனேயே ஆர்பிஐ கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு, தீர விசாரிக்காமல் இது போன்ற நிறுவனங்களிடம் பணத்தை டெபாசிட் செய்ய கூடாது. அப்படி ஆசைப்பட்டால் கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை இழப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது என்பதை மக்கள் அறிவது அவசியம்.
Src: NV
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக