கிரெடாய் சென்னை சார்பில் 3 நாள் வீட்டுக் கடன் மேளா துவங்கியது
~ 2024 மார்ச் 1 முதல் 3 வரை நடைபெறும் 3 நாள் வீட்டுக் கடன் மேளாவில் தகுதியுள்ள வாடிக்கையாளர்களுக்கு 5 வங்கிகள் சிறப்பு சலுகைகளை வழங்குகின்றன
சென்னை, மார்ச் 1- கிரெடாய் சென்னை மண்டலம் சார்பில் தி.நகர், விஜயா மகாலில் 3 நாள் வீட்டுக் கடன் மேளா இன்று துவங்கியது. நடைபெற உள்ள சொத்து மற்றும் ரியல் எஸ்டேட் கண்காட்சியான 'பேர்ப்ரோ 2024'-ன் முன்னோட்டமாக இந்த கடன் வழங்கும் மேளா நடைபெறுகிறது. 16வது ஆண்டு இந்தக் கண்காட்சி நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வரும் 8-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது. அதில் பங்கேற்று தாங்கள் விரும்பும் சொத்துக்களை வாங்க தங்களுக்கான கடன் தகுதி மற்றும் கடனுக்கான அனுமதி ஆகியவற்றை வாடிக்கையாளர்கள் வங்கிகளிடம் இருந்து பெறுவதற்காக இந்த கடன் மேளா நடைபெறுகிறது.
வீட்டுக் கடன் மேளாவை கிரெடாய் தேசிய துணைத் தலைவர் எஸ். ஸ்ரீதரன், முன்னாள் தலைவர்கள், கிரெடாய் சென்னை மண்டலத் தலைவர் சிவகுருநாதன், பேர்ப்பரோ 2024 ஒருங்கிணைப்பாளர் அஸ்லாம் பக்கீர் முகமது, கிரெடாய் சென்னை செயலாளர் க்ருதிவாஸ் மற்றும் வங்கி மேலாளர்கள் முன்னிலையில் துவக்கி வைத்தார்.
இதில், முன்னணி நிதி நிறுவனங்களின் பரந்த அளவிலான வீட்டுக் கடன் திட்டங்கள், தகுதி அளவுகோல்கள், தேவையான ஆவணங்கள் மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்துதல் உட்பட, வீடு வாங்கும் செயல்முறையின் பல்வேறு அம்சங்களில் அனுபவமுள்ள நிபுணர்களின் வழிகாட்டுதல் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ளலாம். பிரத்தியேக சலுகைகள், தள்ளுபடிகள் ஆகியவையும் இந்த கடன் மேளாவில் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு வீட்டுக் கடன் மேளாவில் எஸ்பிஐ, கனரா வங்கி, எச்டிஎப்சி வங்கி, இந்தியன் வங்கி மற்றும் எல்ஐசி எச்எப்எல் ஆகிய வங்கிகள் பங்கேற்கின்றன.
இது குறித்து கிரெடாய் சென்னை தலைவர் சிவகுருநாதன் கூறுகையில், எண்ணற்ற தனிநபர்கள் மற்றும் குடும்பங்களின் வீட்டுக் கனவை நிஜமாக்குவதை நோக்கமாகக் கொண்ட, அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வீட்டுக் கடன் மேளா துவங்கி இருப்பது குறித்து அறிவிப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இந்த வீட்டுக் கடன் மேளா வருங்கால வீடு வாங்குபவர்களுக்கு சரியான இடமாகும். வாடிக்கையாளர்கள் தங்களுடைய வீட்டுக் கடனை அந்த இடத்திலேயே பெற்றுக் கொள்ளலாம். அதனைத் தொடர்ந்து கிரெடாய் பேர்ப்ரோ 2024 கண்காட்சியில் பங்கேற்று தாங்கள் விரும்பிய சொத்தை எந்தவித நிதிப் பிரச்சினையும் இல்லாமல் வாங்கலாம் என்று தெரிவித்தார்.
ஒருங்கிணைப்பாளர் அஸ்லாம் பக்கீர் முகமது கூறுகையில், ஒவ்வொருவரும் சொந்தமாக ஒரு வீட்டை வாங்குவதற்கு தகுதியானவர்கள் என்று நாங்கள் நம்புகிறோம், மேலும் வீட்டுக் கடன் மேளாவின் நோக்கம் வெளிப்படையான முறையில் நிதி தீர்வுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பது ஆகும். இந்த வீட்டுக் கடன் மேளாவில் எங்களுடன் பங்கேற்க விரும்பும் அனைத்து வீட்டு உரிமையாளர்களையும் நாங்கள் அழைக்கிறோம் மற்றும் அவர்களின் வீட்டு உரிமை கனவுகளை நனவாக்குவதற்கான முதல் அடியை எடுத்து வைக்குமாறும் அவர்களை கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக