மொத்தப் பக்கக்காட்சிகள்

மோசமான கட்டுமான பணிகள் இடிக்கப்படும் Jains Westminster ஜெயின்ஸ் வெஸ்ட்மின்ஸ்டர்

Jains Westminster - Inside Story 
ஜெயின்ஸ் வெஸ்ட்மின்ஸ்டர் - திடுக்கிடும் உண்மைகள்

எரிகிற வீட்டில் பிடுங்குவது வரை லாபம் எனும் பழமொழி கேள்விப்பட்டிருக்கலாம். அதற்கும் ஒரு படி மேலே போய் கொள்ளியையும் வைத்துவிட்டு மீதமிருப்பதையும் பிடுங்க காத்திருக்கிறது ஜெயின் பில்டர்ஸ் எனும் கட்டுமான நிறுவனம். அதன் உண்மை முகத்தை கிழித்தெறியவே இந்தப் பதிவு...

சிட்டிசன் படம் போல்

இது கதையல்ல நிஜம். சிட்டிசன் படத்தில் அத்திப்பட்டு எனும் ஒரு கிராமமே அழிக்கப்பட்டு அந்த உண்மைகளை உலகுக்கு கொண்டு வர ஹீரோ போராடுவார். இன்று சாலிகிராமத்தில் இன்னொரு அத்திப்பட்டு உருவாவதை தடுக்கப் போராடும் ஒரு உரிமையாளனான சிட்டிசனின் குரல் இது.

தலைக்கு மேல் ஒரு கூரை. எல்லாருக்கும் இருக்கும் ஒரு கனவு. ஆனால் அந்த கூரையே கூற்றுவனாக மாறினால்? அதில் குடியிருப்பதே கொடும் தண்டனையாக மாறினால்? துளியும் மிகைப்படுத்தாமல் உள்ளது உள்ளபடி உரைக்கிறேன்..உறைக்க வேண்டியவர்களுக்கு உறைக்கவேண்டும்.

சென்னையின் முக்கிய பகுதியான சாலிகிராமத்தில் அமைந்துள்ளது Jains Westminster அடுக்குமாடி குடியிருப்பு. 80களில் எடுக்கப்பட்ட பல தமிழ் படங்களில் அருணாசலம் ஸ்டுடியோ என்ற பெயரை பார்த்திருக்கலாம். அந்த ஸ்டுடியோ இருந்த இடத்தில் தான் இந்த 17 மாடிகளை கொண்ட 3 டவர்கள் வானுயர நிற்கின்றன.

இதனை கட்டியது Jains Construction எனும் கட்டுமான நிறுவனம். முழு பணத்தையும் முன்னமே பெற்றுக்கொண்டு சரியான நேரத்தில் ஒப்படைக்காமல் இதோ அதோ என்று மூன்றாண்டு காலம் இழுத்தடித்து உரிமையாளர்கள் சேர்ந்து போராடி ஒரு வழியாக 2016-ல் வீட்டை பெற்றோம். 

தாமதமாக ஒப்படைக்கப்பட்டதற்கு இழப்பீடு ( Delay Penalty ) தராமல் ஏமாற்றியதோடு கூட Corpus Fund என்று வசூலித்த நான்கு கோடி ரூபாயையும் முழுங்கிவிட்டனர். 

ஆங்காங்கே நீர்க்கசிவு, பெயிண்ட் உதிர்தல் என புதிய வீட்டில் இருக்கும் சிறு சிறு பிரச்சனைகளை யாரும் முதலில் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் ஆறே மாதங்களில் பில்லர்களில் விரிசல் விழுவதை அப்படி எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. இன்னும் போகப்போக பெரும் பிரச்சனைகள். 

பெயிண்ட் உதிர்தல் சிமெண்ட் பூச்சு உதிர்வதாக மாறி தொடர்ந்து தலைக்கு மேலே உள்ள கான்க்ரீட் கூரையும் ஆங்காங்கே சிறு சிறு துண்டுகளாக விழத்துவங்கியதும் இது சாதாரண பிரச்சனை இல்லை என கவலைப்பட துவங்கி உடனே நடவடிக்கை எடுக்க குரலெழுப்பினோம். ஜெயின் நிறுவனம் எதையும் காதிலேயே போட்டுக்கொள்ளாமல் போக குடியிருப்பாளர்கள் கோர்ட்டை அணுக வேண்டிய சூழல். 

இதற்குள் சுவர்களின் விரிசல்களில் மழை நீர் புகுந்து இரும்புக்கம்பிகளை அரிக்கத் துவங்க சிறு சிறு துண்டுகளாய் விழுந்து கொண்டிருந்த பகுதிகள் பெரிய பாளங்களாக விழத்துவங்கின. சில இடங்களில் பால்கனி கூரைகளே இடிந்து விழ ஆரம்பித்தன. 

இவற்றுக்கெல்லாம் சிகரம் ஜூலை 2021-ல் B பிளாக் 11ம் மாடியில் நடந்த சம்பவம். அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. இடி விழுந்தது போல் பயங்கர சத்தம். அக்கம் பக்கம் வீட்டார் எல்லாம் குண்டு வெடித்துவிட்டதோ என பதறிக்கொண்டு ஓடி வந்து பார்த்தால் டைனிங் ஹால் பகுதியின் கான்க்ரீட் கூரை மொத்தமாக பெயர்ந்து இடிந்து விழுந்திருக்கிறது. 

அடுத்த இரு நாட்களில் வீட்டின் பிற பகுதிகளும் இடிந்து விழுகிறது. 12ம் மாடி வீட்டில் நடப்பதற்கு தரை இல்லை 11ம் மாடிக்கு தலைக்கு கூரையில்லை. நொறுங்கிப்போனது அவர்களது வீட்டின் பொருட்கள் மட்டுமல்ல அவர்களின் கனவுகளும் தான். அந்த பெண்மணி கண்ணீர் விட்டு கதறியதை கேட்டு உருகாத நெஞ்சமில்லை. 

அப்போதே போலீசையும் மீடியாவையும் அழைத்து பில்டரின் உண்மை ரூபத்தை உலகுக்கு காண்பிக்க கிடைத்த முதல் வாய்ப்பை முட்டாள்தனமாய் கோட்டை விட்டது குடியிருப்பாளர் அமைப்பு. இரண்டு காரணங்கள். விஷயம் வெளியே தெரிந்தால் வீட்டின் மதிப்பு குறைந்து விடும். அடுத்து பில்டர் செய்வதாக ஒப்புக்கொண்ட ரிப்பேர்களை செய்ய மாட்டான்.

அப்படியும் ஒரு துரும்பையும் ஜெயின் பில்டர் நகர்த்தவில்லை. இப்படியே விட்டுவிட்டால் மொத்த கட்டிடமும் பாழாய் போகும் என குடியிருப்பாளர்களே பணம் திரட்டி கட்டிடத்தின் உறுதித்தன்மையை காப்பாற்ற முயற்சி மேற்கொண்டும் பெரிதாக பலனில்லை. சாண் ஏறினால் முழம் சறுக்கியது.

தரமில்லாத சிமெண்ட், அசுத்தமான குளோரைடு தண்ணீர், கடல் மணல் கொண்டு எழுப்பியிருந்த கட்டிடத்தை சரி செய்வது என்பது குருடனை ராஜ முழி முழிக்கச் சொல்லும் கதை என உணர்ந்தபோது ஆகஸ்ட் 2023-ல் அதே B பிளாக்கில் தரைத்தள சீலிங் இடிந்து விழுந்தது. ஒவ்வொரும் முறை கான்க்ரீட் விழுகையிலும் எப்படியோ உயிர்களை காப்பாற்றிவிடும் கடவுள் அன்றும் சில குழந்தைகள் சாகாமல் காப்பாற்றினார்.

அப்போதும் ஜெயின் பில்டரை பகைத்துக்கொள்ள குடியிருப்பாளர் அமைப்பு விரும்பவில்லை. ஆனால் சில குடியிருப்பாளர்கள் கொதித்துப்போய் போலீசுக்கும் மீடியாவுக்கும் தகவல் கொடுத்துவிட கோடிகளை கொட்டி வாங்கிய வீடுகளின் நிலைமை முதல் முறையாக வெளிச்சத்துக்கு வந்தது. கமலஹாசன் உள்ளிட்ட புள்ளிகள் ட்விட்டரில் தட்டிவிட கேமராக்கள் ஓடிவந்து குமுறல்களையும் எலும்புக்கூடு போல் இருக்கும் வீட்டின் நிலையையும் பதிவுசெய்தன.

கார்ப்பரேஷன் கமிஷனர் ராதாகிருஷ்ணன் போட்டோக்களை பார்த்து பதறிவிட்டார். ஆறு வருடத்தில் ஆடிப்போன கட்டிடத்தை அவர் கற்பனை செய்தே பார்த்திருந்திருக்க மாட்டார். உடனடியாக கவனிக்க சொல்லி CMDA அதிகாரிகளுக்கு உத்தரவிட, அவர்களே சான்றிதழ் கொடுத்த கட்டிடத்தை சோதனை செய்ய வேண்டிய நெருக்கடி CMDAவுக்கு. 
தொகுதி MLA வும் வந்து சேர முதல் முறையாக பில்டருக்கு பயம் வந்தது. 

அது நாள் வரை IIT யை அழைத்து இது வாழத்தகுதியான கட்டிடம் தானா என்று சோதனை செய்யும்படி குடியிருப்பாளர் அமைப்பு கரடியாக கத்தியதை காதில் போட்டுக்கொள்ளாத ஜெயின் பில்டர்..மீடியாவும், CMDA வும், கோர்ட்டும் நெருக்கிய பிறகு வேறு வழியில்லாமல் ஒப்புக்கொள்ள வேண்டியதாகிப்போனது. 

குடியிருப்பாளர்களுடன் அவசரகதியில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டு  IIT Madrasக்கு பணம் செலுத்த, அவர்கள் ஒரு பெரும் படையுடன் வந்து சோதனைகளை துவங்கினர். 

இங்கே குறிப்பிட்டு சொல்ல வேண்டிய முக்கிய விஷயம் இந்த குடியிருப்பில் கட்டப்பட்ட 600 சொச்சம் வீடுகளில் 150க்கு மேல் இன்று வரை விற்பனை ஆகாமலே இருப்பதிலேயே கட்டியிருக்கும் லட்சணத்தை தெரிந்துகொண்டு விடலாம். வாங்கியவர்கள் எல்லாரும் கட்டிடம் எழும் முன் ஒப்பந்தம் போட்டவர்களே.

இப்படி விற்கப்படாமல் இருக்கும் ஒரு வீட்டை முதலில் திறந்து சோதனை செய்ய மேற்கூரையில் ஒரு தட்டு தட்டியது தான் தாமதம், மொத்தம் கூரையும் IIT புரஃபஸரின் கண்முன்னே இடிந்து விழுந்து நொறுங்கியதுமே IIT என்ன சொல்லப்போகிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரிந்து விட்டது. ஆனாலும் அறிவியல் முறையில் செய்ய வேண்டிய அத்தனை ஆய்வுகளையும் இரண்டு மாதம் பொறுமையாக செய்தது IIT.

நீண்ட காத்திருப்புக்கு பின் பிப்ரவரி 1-ம் தேதி 393 பக்கங்களில் தன் விவரமான அறிக்கையை சமர்ப்பித்தது IIT. மட்டரகமான தரமில்லாத பொருட்களை பயன்படுத்தி கட்டியதாலும், தவறான கட்டுமான முறைகளை பயன்படுத்தி கட்டியிருப்பதாலும் கட்டிடம் தன் உறுதித்தனமையை முழுவதுமாக இழந்து மிகுந்த ஆபத்தான நிலையில் இருப்பதாக தன் முடிவை வெளியிட்டது.

அதனால் இங்கே குடியிருக்கும் அனைவரையும் உடனடியாக பாதுகாப்பான முறையில் வெளியேற்றி, இந்த கட்டிடத்தை மொத்தமாக இடித்துவிட்டு, தரமான முறையில் மீண்டும் கட்டித்தரவேண்டும் என்று இறுதியாக உறுதியாக சொல்லிவிட்டது IIT. 

என்ன தான் முன்னமே ஓரளவு எதிர்பார்த்திருந்தாலும் இத்தனை ஆபத்தான சூழலில் கட்டிடம் இருப்பதும் முழுவதுமாக இடித்து மறுபடி கட்டப்படவேண்டும் என்பதும் உரிமையாளர்கள் நெஞ்சில் இடியாய் இறங்க துடிதுடித்து போனோம். 

ஆயுட்கால சேமிப்பை கொட்டி வாங்கிய வீடு, கனவுகளை கற்பனைகளையும் கலந்து கட்டிய வீடு இனி இல்லை என்னும் உண்மை அத்தனை எளிதில் தாங்க கூடிய தகவல் இல்லை. வீட்டின் EMI கூட முடியாத நிலையில் வீடே முடிந்து போகும் கொடுமை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே அந்த வலி புரியும்.

அடுத்து நடக்க வேண்டியது என்ன...உடனே காலி செய்து போவதனால் எங்கே செல்வது எப்படி சமாளிப்பது என்று எல்லாரும் ஸ்தம்பித்து நிற்கும் வேளையில் பின்மாலை நேரத்தில் குடியிருப்பாளர் அமைப்புடன் ஒரு அவசர சந்திப்புக்கு ஏற்பாடு செய்கிறது ஜெயின் பில்டர். அவர்களின் சதித்திட்டத்தை உணராமல் வலையில் விழுகின்றனர் குடியிருப்பாளர் அமைப்பினர்.

அதிர்ச்சியிலும் திகைப்பிலும் இருப்பவர்களுக்கு இன்னும் அதிர்ச்சி கொடுக்கிறது ஜெயின் பில்டர்ஸ். வீட்டை இழந்து வீதிக்கு வரப்போகிறவர்கள் மீண்டும் கட்டிடம் கட்ட கூடுதலாக பணம் கொடுத்தால் மறுபடி வீடு கட்டி தந்துவிடுவார்களாம். வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது இது தானா?

பணமாக தராவிட்டால் குடியிருப்பாளர்களிடம் உள்ள நிலஉரிமையை (UDS) விட்டு கொடுத்தால் கூடுதலாக இன்னும் பல வீடுகளை கட்டி அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் மொத்தக்கட்டிடத்தையும் கட்டிவிடலாமாம்.எப்படி இருக்கிறது கதை?

பேராசை காரணமாக தரத்தில் கைவைத்து மட்டமான பொருட்களை கொண்டு கட்டிடத்தை கட்டியது ஜெயின்ஸ்..
தவறான கட்டுமான வழிகளை மேற்கொண்டு கட்டிடத்தை கட்டியது ஜெயின்ஸ்..
போதுமான அளவுக்கு தரப்பரிசோதனை மேற்கொள்ளாமல் அலட்சியம் காட்டியது ஜெயின்ஸ்..

இன்று கட்டிடம் இடிக்கப்படும் நிலைக்கு மூல காரணம் ஜெயின் பில்டர்ஸின் பணவெறி. வீட்டின் உரிமையாளர்களான நாங்கள் செய்த ஒரே தவறு இந்த பில்டரிடம் வீடு வாங்கியது மட்டுமே. இத்தனையும் செய்து விட்டு நூற்றுக்கணக்கான குடும்பங்களை தெருவுக்கு கொண்டு வந்துவிட்டு அவர்களிடமே மீண்டும் பணம் கேட்பது எத்தனை பெரிய அயோக்கியத்தனம்.

உரிமையாளர்களில் முக்கால் வாசி பேருக்கு மீண்டும் ஜெயின் பில்டரிடம் மாட்டிக்கொள்ள மனமில்லை. வீட்டுக்கான நியாயமான இழப்பீட்டு தொகையை கொடுத்து மீண்டும் வீட்டை திரும்ப எடுத்துக்கொள்ள கோரிக்கை வைக்கிறார்கள், இதை ஜெயின் பில்டர் ஏற்க மறுக்கிறார்கள்.

Reconstruction என்பது ஏற்கனவே இருந்த வீடுகளை அதே முறையில் மீண்டும் கட்டித்தர வேண்டும், IIT சொல்லியிருப்பது இதைத்தான். இடைப்பட்ட காலத்தில் ஏற்படும் வாடகை முதலான கூடுதல் செலவினங்களை ஏற்றுக்கொண்டு தன் செலவில் மீண்டும் வீடுகளை கட்டி கொடுக்கவேண்டும் என்பது அடுத்த நிலைப்பாடு. 

ஆனால் ஜெயின் பில்டர் செய்து தருவதாக சொல்வது Re-development.அதாவது கூடுதல் Floors, வீடுகள் கட்டி விற்று அவர்களின் லாபத்தை கூட்டிக்கொள்ளும் யோசனை, எரிகிற வீட்டில் பிடுங்குவது. வீட்டின் நிலமதிப்பை இழந்து கூடுதலாக பணமும் இழக்கும் இந்த திட்டத்தை உரிமையாளர்கள் யாரும் ஏற்கத்தயாராக இல்லை.நீதி மன்றம் தான் நீதி வழங்க வேண்டும்.

இத்தோடு முடியவில்லை ஜெயின் பில்டர்ஸின் சாமர்த்தியம். மீடியாவிடம் யாரும் பேசவேண்டாம் என்று சொல்லிவிட்டு வெளியேறிய அடுத்த ஐந்தாம் நிமிடம் ஹிந்து இணைய தளத்தில் செய்தி வருகிறது. IIT பரிந்துரையை ஏற்று இடித்து விட்டு மீண்டும் கட்டி தர தயார் என்று முழு பூசணியை சோற்றில் மறைத்து ஒரு செய்தி.

அஸ்வத்தாமாக அதஹ..குஞ்சரக கதையாக அடுத்த நாள் எல்லா மீடியாவிலும் இதே போல் செய்தி. மட்டமான பொருட்களால் கட்டப்பட்ட காரணத்தால் கட்டிடம் இடிக்கப்படும் என்ற வாக்கியத்தை மறைத்து IIT பரிந்துரை காரணமாய் இடிப்பதாக செய்தி வெளியிட வைக்கிறார்கள்.  

இன்று வரை குடியிருப்பாளர் அமைப்பு மீடியாவை அழைத்து எந்த விளக்கமும் அளிக்காதது உரிமையாளர் பலருக்கே பிடிக்காத விஷயம். மீடியாவில் செய்தி வந்ததால் தான் IIT உள்ளே வந்தது.. IIT வந்ததால் தான் உண்மை நிலை வெளிச்சத்துக்கு வந்தது.. சமீபத்தில் படித்த பாடத்தை கூட மறந்து விட்டால், என்ன சொல்வது..

தமிழக சரித்திரத்திலேயே தரமின்மை காரணமாக இடிக்கப்படவிருக்கும் இரண்டாம் கட்டிடம் இது தான். 10 வருடங்களுக்கு முன் இடிக்கப்பட்ட முகலிவாக்கத்துக்கு அடுத்து இடிக்கப்படவிருக்கும் கட்டிடம் என்ற பெருமையை பெறவிருக்கிறது Jains Westminster. 

செட் போட்டு இடிக்கப்பட்டு மீண்டும் செட் போட்டு படங்கள் எடுக்கும் சினிமா ஸ்டுடியோ இருந்த இடத்தில் கட்டப்பட்டதால் இந்த கட்டிடம் இடிக்கப்படும் துர்பாக்கிய நிலையை அடையவில்லை. ஜெயின் பில்டர் எனும் பேராசை பிடித்த நிறுவனத்தின் பணவெறியின் பலன்.

இத்தனை குடும்பங்களின் உயிர்களோடும் உணர்வுகளோடும் ஜெயின் பில்டர் நிறுவனம் விளையாடியிருப்பதை புட்டு புட்டு வைத்திருக்கிறது IIT அறிக்கை . இத்தனை அக்கிரமங்களை வேறு ஒரு நாட்டில் செய்திருந்தால் இந்நேரம் பில்டரின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு, சொத்து பிடுங்கப்பட்டு, ஜெயிலில் கம்பி எண்ணிக்கொண்டிருப்பான்.. 

ஆனால் இங்கே? ..அவன் தன் இஷ்டத்திற்கு மீடியாவில் செய்தி வர வைக்கிறான்.. குடியிருப்பாளர்களை மிரட்டுகிறான்.. இன்னும் என்னென்ன செய்வானோ..

மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும். ஜெயின் பில்டர் பற்றிய உண்மை இது தான். எந்த ஒரு உயிருக்கும் சிறு தீங்கு விளைவிக்க கூடாது என மயிலிறகால் கூட்டி நடக்கும் ஒரு உயர்ந்த மதத்தின் பெயரை கொண்டு இயங்கும் நிறுவனம் 400 குடும்பங்களின் உயிருடன் விளையாடி வருகிறது.

கடவுளும் கோர்ட்டும் தான் நியாயம் கிடைக்க வழி செய்ய வேண்டும்..மீடியாவும், அரசியல்வாதிகளும், மக்களும் சேர்ந்து குரல் கொடுக்கவும் வேண்டிக்கொள்கிறோம்.. 

வாட்ஸ் அப்பில் வந்தது
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மாத சம்பளக்காரர்கள் மற்றும் முதல் முறை முதலீட்டாளர்களுக்கு ஏற்ற . - பஜாஜ் ஃபின்சர்வ் ELSS வரி சேமிப்பு ஃபண்ட் .!

திரு .  எஸ் .  கார்த்திகேயன் ,  நிறுவனர் ,  https://winworthwealth.com/ மாத சம்பளக்காரர்கள் மற்றும் முதல் முறை முதலீட்டாளர்களுக்கு   ஏற்ற . ...