'சாத்தா' சொல்வதும் சொல்லாததும்!
கொடை நாள் நள்ளிரவில் பேரமைதி குடி கொண்ட கோயிலைச் சுற்றி மக்கள் கூடியிருக்க, பரணில் மல்லாந்து கிடக்கும் பன்றியின் வயிறு கிழித்து, பொங்கும் ரத்தத்துக்குள் கதலிப் பழங்களைத் திணித்து பிசைந்து உண்ட பண்டாரத் தாத்தாவை, சிறு வயதில் பார்த்தபோதுதான் தெய்வங்களின் மீது முதல் பயம் ஏற்பட்டது.
பிறகு வளர வளர சொல்லப்பட்ட சிறு தெய்வங்களின் வீரம் நிறைந்த கதைகளுக்குள் என்னை நான் விரும்பி சேர்த்துக்கொண்டேன். ஒரு நாள் அம்மாவே, சாமிகளின் பிரதிநிதியாகி, கோயிலில் ஆடத் தொடங்கிய பிறகு, சாமிகள் எனக்கும் உறவினர்கள் ஆனார்கள். பயம் விலகி, நானே என்னைப் பச்சத்தி மாடனாகவும் தளவாய் மாடசாமியாகவும் பலவேசக்காரனாகவும் சங்கிலிப் பூதத்தாராகவும் மாற்றிப் பார்த்துக்கொள்வேன். இவை போரடிக்கும் நேரங்களில் ஏவல் சாமிகளின் மாய சேட்டைகளைச் ரசித்து சிரித்துக் கொண்டிருப்பேன்.
இச்சாமிகள் குடும்பக் கோயில் வகைக்குள் வந்தாலும் குலதெய்வமும் சா(ஸ்)த்தாவும் வேறென சொல்லப்பட்ட பிறகு அத்தெய்வங்கள் காட்டுக்குள் இருப்பதென அறிந்தேன். பெரும்பாலான குல தெய்வங்கள் காட்டுக்குள்ளும் , காட்டின் அடிவாரங்களிலுமாகவே குடி கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு சாமிக்கும் ஒவ்வொரு கதையென 'நாட்டார் கள ஆய்வு'க்குள் சிக்காமல் பல குல தெய்வங்கள், கற்சிலைகளுக்குள் தங்கள் கதைகளைப் புதைத்து வைத்திருக்கின்றன.
அப்படிப்பட்டக் கதைகள் எதையும் இந்த 'சாத்தா' நாவல் சொல்லவில்லை. ஆனால் இது வேறு விஷயங்களை மலங்காட்டு அனுபவத்தோடு பேசும், உங்களுக்குப் பிடித்ததாகவும் பிடிக்காததாகவும்!
சாத்தா (நாவல்)
விற்பனை உரிமை: ஸ்நேகா.
விலை: ரூ.220
புத்தகம் வாங்க...
9840138767, 7550098666