புயலில் கல்வி சான்றிதழ்கள்போயிடுச்சா? இந்த தளத்தில் தொலைந்த சர்டிபிகேட்களை பெறலாம்!
அரசு அறிவிப்பு
கல்லூரி மற்றும் பல்கலைக்கழகச் சான்றிதழ்களை மிக்ஜாம் புயல் காரணமாகக்
இழந்த மாணவர்கள் எப்படி அந்த சான்றிதழ்களை மீண்டும் பெறலாம் என்பது குறித்து தமிழக அரசு முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் தமிழ்நாட்டில் கடந்த வாரம் ருத்ர தாண்டவம் ஆடிவிட்டுச் சென்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கிய இந்த கன மழை செவ்வாய் அதிகாலை வரை கொட்டி தீர்த்தது.
இதனால் சென்னையில் அனைத்து இடங்களிலும் வெள்ள நீர் தேங்கியது. இந்த வெள்ள நீர் முக்கிய பகுதிகளில் அடுத்த சில நாட்களில் வடிந்தாலும் கூட மற்ற உட்பகுதிகளில் வடியப் பல நாட்கள் வரை ஆனது.
இந்த கனமழை சென்னையில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. குறிப்பிட்ட பகுதி என்று இல்லாமல் அனைத்து பகுதிகளிலும் நீர் தேங்கியது. அதன் பிறகு அரசு எடுத்த நடவடிக்கையால் வெள்ள நீர் வெளியேற்றப்பட்டது. அதேபோல மின் இணைப்பும் கூட சில நாட்களில் பெரும்பாலான இடங்களுக்கு வழங்கப்பட்டது. இப்போதும் ஓரிரு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ள நிலையில், அதை அகற்றும் பணிகளும் நடந்து வருகிறது.
குறுகிய நேரத்தில் கொட்டி தீர்த்த இந்த கனமழையால் பல்வேறு இடங்களிலும் வீடுகளிலும் வெள்ள நீர் புகுந்தது. குறிப்பாகத் தாழ்வான பகுதிகளில், தரைதளம் முழுக்க நீரில் மூழ்கும் சூழல் ஏற்பட்டது. இதனால் பல இடங்களில் முக்கிய சான்றிதழ்களையும் கூட பொதுமக்கள் இழந்தனர். ஏற்கனவே அரசு சான்றிதழ்களை இழந்திருந்தால் அதைப் பெறச் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.
இதற்கிடையே மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களை இழந்திருந்தால் அதை எப்படிப் பெற வேண்டும் என்பது குறித்த முக்கிய அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் "மிக்ஜாம்* புயல் காரணமாகச் சென்னை மாவட்டத்திலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன.
முதலமைச்சர் ஆணைக்கிணங்க, மழை, வெள்ள பாதிப்பினால், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகச் சான்றிதழ்களை இழந்த மாணவ/ மாணவிகள் தங்கள் சான்றிதழ்களின் நகல்களைக் கட்டணமின்றி பெறுவதற்கு ஏதுவாக
என்ற இணையதளம் உயர்கல்வி துறையால் உருவாக்கப்பட்டுள்ளது. மாணவ மாணவிகள் தங்களின் இழந்த சான்றிதழ் பற்றிய விபரங்களை மேற்கண்ட இணையதள வாயிலாக இன்றிலிருந்து பதிவு செய்யலாம்.
மாணவ / மாணவிகள் மேற்கண்ட இணையதள வாயிலாகச் சான்றிதழ்களின் விபரங்களைப் பதிவு செய்தபின் அவர்களது மின்னஞ்சலுக்கு ஒப்புகை (Acknowledgement) அனுப்பப்படும். அவ்வாறு பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்கள், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்திலிருந்து பெறப்பட்டு, மாணவர்களுக்குச் சென்னையில் வழங்கப்படும்.
மேலும் இணையதளத்தில் பதிவு செய்வது குறித்த சந்தேகங்களுக்குத் தெளிவு பெறத் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் செயல்படும் கட்டணமில்லா அழைப்பு மையத்தை *1800-425-0110*
என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது. சென்னையைப் புரட்டிப் போட்ட இந்த பெருமழையில் மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களை இழந்திருந்தால் இந்த தளத்தில் சென்று அதைப் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக