காஞ்சிபுரம் மாவட்டம் நேமத்தில் ரூ.185 கோடியில் விரிவாக்கப்பட்ட அதிநவீன சாக்லேட் தொழிற்சாலை: லோட்டே இந்தியா திறக்கிறது
· உள்ளூர் மக்கள் 200 பேருக்கு வேலை வாய்ப்பை வழங்குகிறது
சென்னை, செப்டம்பர் 27, 2023:–சாக்லேட் உணவு பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக திகழும் லோட்டே இந்தியா நிறுவனம் சென்னை புறநகர் பகுதியான நேமத்தில் தனது தொழிற்சாலையை விரிவாக்கம் செய்துள்ளது. 185 கோடி ரூபாய் முதலீட்டில் இந்த அதிநவீன தொழிற்சாலை 85,562 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது. லோட்டே சாக்கோ பை உற்பத்தியை அதிகரிப்பதற்காக இந்த தொழிற்சாலை திறக்கப்பட்டுள்ளதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கான திறப்பு விழா இம்மாத இறுதியில் நடைபெறும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்திய சாக்லேட் துறையில் தனது நிலையை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த முதலீட்டை லோட்டே இந்தியா செய்திருப்பதோடு, இதன் மூலம் நேமம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ள 200 பேருக்கு வேலை வாய்ப்பை இந்நிறுவனம் வழங்க உள்ளது.
கடந்த 2007–2008ம் ஆண்டில் இதன் விற்பனை வருவாயானது 1,681 மில்லியனாக இருந்தது கடந்த 2021–22–ம் ஆண்டில் அது 4,965 மில்லியனாக உயர்ந்துள்ளது. இது இந்நிறுவனத்தின் சிறப்பான வளர்ச்சியைக் காட்டுகிறது. ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி அடிப்படையில் இது 21 சதவீதமாக உள்ளது. நிதி ஆண்டு 2022–23–ல் இதன் வருடாந்திர விற்பனையானது 6,572 மில்லியனாக உள்ளது. சந்தையில் நிலவும் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த தொழிற்சாலை விரிவாக்கம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துவக்கப்பட்டது. தற்போது இதற்கான பணிகள் நிறைவுற்ற நிலையில் இம்மாத இறுதியில் இந்த ஆலை திறக்கப்பட உள்ளது.
இந்த வளர்ச்சி குறித்து லோட்டே இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மிலன் வாஹி கூறுகையில், இந்த விரிவாக்கம் இந்தியாவில் லோட்டே இந்தியாவின் செழுமைமிக்க வரலாற்றை உருவாக்கி இருப்பதோடு, எங்களின் இந்த முதலீட்டின் மூலம் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். தற்போது கூடுதலாக 85,562 சதுர அடி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதன் மூலம் இந்த தொழிற்சாலையின் அளவானது 18 சதவீதத்திலிருந்து 32 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக இந்தியாவில் உள்ள பெரிய தொழிற்சாலைகளில் இதுவும் ஒன்றாக இருப்பதோடு, இதன் மொத்த பரப்பளவு 5,16,398 சதுர அடியாக உள்ளது. நேமத்தில் கடந்த 2010–ம் ஆண்டு துவக்கப்பட்ட எங்களின் அதிநவீன தொழிற்சாலை, மிக உயர்ந்த பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் தரங்களை கடைபிடித்து வருவதற்காக பாராட்டைப் பெற்றுள்ளது. தொழிற்சாலையின் உள்ளே நடைமுறைப்படுத்தப்பட்ட உயர் பாதுகாப்புத் தரங்களின் காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக விபத்தில்லா தொழிற்சாலை என்ற நிலையை நாங்கள் பெற்றுள்ளோம். எங்கள் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தவர்களில் 99 சதவீதம் பேர் வேறு எங்கும் செல்லாமல் இங்கு தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள். விரிவாக்கப்பட்ட தொழிற்சாலையில் 200 புதிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளோம் என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், ஆரோக்கியமான பணியாளர்களும், நல்ல வளர்ச்சிக்கான சூழலும், இடமும் இருப்பதால், எங்கள் ஆலையை விரிவுபடுத்துவதற்கான சிறந்த இடமாக நேமம் உள்ளது. எங்களின் விரிவாக்கத்தின் மூலம் உற்பத்தி திறன் மாதத்திற்கு 1420 டன்களாக உள்ளது. இது இந்திய சந்தையில் அதிகரித்து வரும் எங்களின் தயாரிப்புகளுக்கான தேவையை பூர்த்தி செய்வதற்கும், எதிர்காலத்தில் ஏற்றுமதிக்கும் உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.
லோட்டே பற்றி: கடந்த 2004–ம் ஆண்டு முருகப்பா குழுமத்திடம் இருந்து பாரிஸ் கன்பெக்ஷனரி நிறுவனத்தை கையகப்படுத்தி லோட்டே இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனம் துவக்கப்பட்டது. லோட்டே இந்தியாவின் தாய் நிறுவனமான லோட்டே வெல்புட் கம்பெனி லிமிடெட் (முன்னர் லோட்டே கன்பெக்ஷனரி), கொரிய கூட்டு நிறுவனமான லோட்டே கார்ப்பரேஷன் நிறுவனத்தின் ஒரு அங்கமாகும். இந்நிறுவனம் காஃபி பைட், கோகனட் பஞ்ச், காராமில்க், லாக்டோ கிங், ஜெல்லி, லாலிபாப் மற்றும் எக்லேர்ஸ் போன்ற சிறந்த பிராண்டுகளுடன் சாக்லேட் துறையில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. நாடு முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வினியோகஸ்தர்களைக் கொண்டுள்ள லோட்டே இந்தியா நிறுவனம் 4 பிராந்தியங்களில் 24 சிஎப்ஏ–களுடன் செயல்படுகிறது. சென்னை மற்றும் ரோஹ்தக்கில் உள்ள இரண்டு அதிநவீன, முழு தானியங்கி சாக்கோ பை தொழிற்சாலைகளைத் தவிர இந்நிறுவனத்திற்கு பாண்டிச்சேரி மாநிலத்தில் உள்ள நெல்லிகுப்பத்திலும் சொந்தமாக சாக்லேட் தொழிற்சாலை உள்ளது. மேலும் கூடுதலாக, நிறுவனம் அதன் சாக்லேட் உற்பத்தியை இந்தியா முழுவதும் உள்ள மற்ற 7 யூனிட்டுகளுக்கு அவுட்சோர்சிங் செய்துள்ளது. லோட்டே இந்தியா நிறுவனம் தனது தயாரிப்புகள் அனைத்தும் முதன்மைத்துவம் பெறும் வகையில் தீவிரமாக பணியாற்றி வருகிறது.