பி.எப்., கணக்கிலிருந்து ரூ.1 லட்சம் எடுத்தால் ரூ.9 லட்சத்தை இழப்பீர்கள்! - எப்படி?
பி.எப்., PF எனும் வருங்கால வைப்பு நிதி சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு அவசரகாலத்தில் கைக்கொடுக்கும். நம்மை அறியாமல் நாம் தரும் சிறு தொகை காலப் போக்கில் பெரும் தொகையாக சேர்ந்திருக்கும். ஆனால் வீண் செலவுகளுக்காக பி.எப்., கணக்கில் இருந்து பணத்தை எடுத்தால் நீங்கள் இறுதியில் எவ்வளவு இழப்பீர்கள் என பார்ப்போம்.
முன்னர் பி.எப்., கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்று பார்ப்பதே கடினம். மேலும் அதனை எடுக்க வேண்டுமெனில் மண்டல பி.எப்., அலுவலகம் சென்று விண்ணப்பிக்க வேண்டும். இன்று டிஜிட்டல் மயமானதால் யு.ஏ.என்., எண் கொண்டு அலைபேசியிலேயே பி.எப்., தொகை இருப்பு விவரங்களில் இருந்து, கிளைம் செய்வது வரை மேற்கொள்ள முடிகிறது. இதனால் அதில் சேர்ந்திருக்கும் தொகையை பலர் ஆரம்பத்திலேயே தங்களது விருப்பச் செலவுகளுக்காக எடுத்துவிடுகின்றனர்.
மருத்துவத் தேவை போன்றவற்றிற்கு வேறு வழியின்றி பணம் எடுப்பது தவறில்லை. ஆனால் பைக் வாங்க, சுற்றுலா செல்ல, வீட்டுச் செலவுகளுக்கு என அதில் இருந்து பணத்தை எடுப்பது உங்களுக்கு நீண்ட கால அளவில் பல லட்சங்களை இழக்க வழி வகுக்கும்.
உங்களுக்கு 25 வயது என வைத்துக்கொள்வோம். உங்கள் பி.எப்., கணக்கில் வட்டியுடன் ரூ.1 லட்சம் சேர்ந்துள்ளது. குறைந்தது 30 ஆண்டுகள் வரை பி.எப்., தொகை பிடித்தம் செய்யப்படும். இந்த சமயத்தில் அந்த ஒரு லட்ச ரூபாயை நீங்கள் துடைத்து எடுத்துவிட்டு மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து கணக்கைத் தொடங்கினால் உங்களின் 55 ஆவது வயதில் ரூ.11 லட்சத்தை இழந்திருப்பீர்கள். எப்படி என்றால், அது தான் கூட்டு வட்டியின் மகத்துவம்.
உங்களின் அடிப்படைச் சம்பளம் (Basic Pay) ரூ.15,000 எனக் கொள்வோம். இதில் ஊழியரான உங்கள் பங்கு 12% பி.எப்., கணக்கிற்கு செல்லும். நிறுவனம் 3.67% பணத்தை வழங்கும். ஆக மொத்தம் மாதம் ரூ.2,350 பி.எப்., ஆக செல்லும். தற்போது 8.15% வட்டி தருகிறார்கள். நாம் 8% என்றே ரவுண்ட் ஆப் செய்துகொள்வோம்.
ஏற்கனவே சேர்ந்த ஒரு லட்ச ரூபாயுடன், மாதம் தோறும் ரூ.2,350 என 30 ஆண்டுகளுக்கு சேரும் போது, 55 வயதில் ஒருவரின் கணக்கில் ரூ.43.4 லட்சம் இருக்கும். ரூ.9.46 லட்சம் சேமித்திருப்போம். அது கூட்டு வட்டியின் மூலம் ரூ.33.9 லட்சத்தை ஈட்டியிருக்கும்.
இதுவே அந்த ரூ.1 லட்சத்தை எடுத்துவிட்டு, 30 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.2,350 மட்டும் செலுத்தப்பட்டால் ரூ.33.3 லட்சம் தான் இறுதியில் நம் கைக்கு கிடைக்கும். நீண்ட கால அளவில் ரூ.1 லட்சத்தை எடுப்பதால் கூட்டு வட்டியின் பலனை நாம் இழக்கிறோம்.
எனவே அவசர தேவை இருந்தால் ஒழிய பி.எப்., பணத்தில் கை வைக்காதீர்கள்.
*நன்றி: தினமலர் நாளிதழ் இணையதளம் (09-05-2023)*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக