மும்பை வரை விற்பனைக்கு செல்கிறது: உடன்குடி நார் கட்டில் தொழிலுக்கு அரசு மானியம் வழங்கப்படுமா?-
நார்கட்டில் தொழில் செய்யும் உரிமையாளர் கோபால் கோரிக்கை*
இந்தியாவின் கற்பக தரு என்று சொல்லக்கூடிய பனைமரத்தின் நார் மூலம் பின்னப்பட்ட அந்த காலத்து கட்டில்களுக்கு தனி மவுசு உண்டு. மனது மற்றும் உடல் அளவில் பல நன்மை பயக்கும் நார் கட்டில்கள் இன்று காட்சி பொருளாகி வருகிறது.
இதுகுறித்து நார்கட்டில் தொழில் செய்யும் உரிமையாளர் கோபால் கூறியதாவது:- பனை மரத்தை வெட்டி அதனை 4 சட்டங்களாக அமைத்து அதன் பின்னர் பனை மட்டையில் நார் உரித்து கட்டிலை பின்னுகிறோம். இது இயற்கையாக உருவான கட்டில் ஆகும். காலத்திற்கு ஏற்ப பனை மர சட்டங்களுக்கு பதில் தற்போது மர சட்டங்கள் வந்துவிட்டது. பனை நாறுக்கு பதில் பிளாஸ்டி வயர் போடுகிறார்கள்.
ஆனால் இயற்கையாய் உருவான பனை நார் கட்டில் தான் எல்லோருக்கும் சிறந்ததாகும். ஒரு கட்டில் பின்னுவதற்கு கூலி, மூலப்பொருட்கள் உட்பட ரூ.8 ஆயிரம் வரை செலவாகிறது. அதனால் சுமார் ரூ.9 ஆயிரம் முதல் கட்டில்கள் விற்பனைக்கு வருகிறது. தற்போது இந்த கட்டில் தயாரிக்க மூலப்பொருட்கள் கிடைப்பது மிக கடினமாக உள்ளது.
பனைமரத்தை வெட்டக்கூடாது என்று அரசு பல்வேறு வகையில் நடவடிக்கை எடுத்து வருவதால் மூலப்பொருட்கள் கிடைப்பதில் மிகவும் சிரமமாக உள்ளது. இதனால் இத்தொழில் நலிவடையாமல் இருப்பதற்கு அரசு மானியம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக