கண்காட்சியையொட்டி 'தமிழ்நாடு ரியல் எஸ்டேட் தொலைநோக்கு திட்டம்-2030' என்ற திட்ட தொடக்க விழா நேற்று நடைபெற்றது. அரசின் நோக்கம் விழாவில் கிரெடாய் அமைப்பின் சென்னை பிரிவு தலைவர் சிவகுருநாதன் வரவேற்றார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவில் கலந்துகொண்டு பேசினார்.
'' தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மக்கள், பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர், குறைந்த, நடுத்தர வருவாய் மக்கள் மற்றும் உயர் வருவாய் பிரிவு மக்களுக்கு வீட்டு வசதியை வழங்குவதற்கான பல்வேறு திட்டங்களை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலமாக தி.மு.க. அரசு செயல்படுத்தி வருகிறது.
2030-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வாங்கும் திறனுக்கேற்ற வீடுகளையும், அடிப்படை வசதிகளையும் அளிக்க வேண்டும் என்ற குறிக்கோளை வைத்துள்ளோம். தொழில் துறையின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப, அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
விண்ணப்பங்களுக்கு விரைவான அனுமதிகளை வழங்குவதில் அரசாங்கம் உறுதி பூண்டிருக்கிறது. கட்டிடங்கள் கட்டுவதற்கு, மனை பிரிவிற்கு மற்றும் மனைகளுக்கு ஒப்புதல் வழங்குவதை விரைவுபடுத்தும் விதமாக, திட்ட அனுமதி வழங்குவதில் ஒற்றைச்சாளர முறையை செயல்பாட்டுக்கு கொண்டு வந்திருக்கிறோம்.
தடையின்மை சான்று வழங்கக்கூடிய துறைகளான பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், நகர் ஊரமைப்பு இயக்ககம், நகராட்சி நிர்வாக இயக்ககம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம் ஆகியவற்றை ஒன்றிணைத்து ஒற்றைச் சாளர முறையில் தமிழ்நாட்டில் எந்தப் பகுதியாக இருந்தாலும், பொது மக்கள் திட்ட அனுமதிக்கான ஒப்புதலை எளிதில் பெற வழிவகுக்கப்பட்டு உள்ளது.
அனைத்தையும் ஆன்லைன் மூலம் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் தொடக்கமாக நகர் ஊரமைப்பு இயக்ககம் (டி.டி.சி.பி niDTCP.) மற்றும் பெருநகர சென்னை வளர்ச்சி குழும (சி.எம்.டி.ஏ.CMDA) பகுதிகளில் உள்ள உயரமான கட்டிடம் மற்றும் உயரம் குறைந்த கட்டிடத்திற்கு ஆன்லைன் மூலமாக திட்ட அனுமதி பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
நகர் ஊரமைப்பு இயக்கத்தால் உருவாக்கப்பட்டு, நடைமுறையில் உள்ள மனைப்பிரிவு ஒப்புதலுக்கான ஆன்லைன் முறை, விரைவில் பெருநகர சென்னை வளர்ச்சி குழுமத்திலும் நடைமுறைப்படுத்தப்படும். அடுத்த கட்ட நடவடிக்கையாக காலதாமதத்தை தவிர்க்கும் பொருட்டு, பல்வேறு துறைகளுக்கான பணிகளை ஒருங்கிணைத்து, மனை, மனை உட்பிரிவு மற்றும் நில வகைப்படுத்துதலுக்கான செயல்முறை நேரலையில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மலிவு விலையில் வீடு அகலம் குறைந்த சாலைகளுக்கு, தற்போது வழங்கப்படும் தளப்பரப்பு குறியீட்டினை அதிகரிப்பது குறித்து பரிசீலித்து, சாதகமான முடிவை அரசு அறிவிக்கும். இதன்மூலம் ஏழை எளியோர் பயன்பெறும் வகையில் மலிவு விலையில் வீடுகளை வழங்க இயலும்.
கிரெடாய் உறுப்பினர்கள் இந்த வசதியை பயன்படுத்திக்கொண்டு, மலிவு விலையில் வீடுகளை வழங்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக 'தமிழ்நாடு ரியல் எஸ்டேட் தொலைநோக்கு திட்டம்-2030' என்ற திட்ட அறிக்கையை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா, பாரத ஸ்டேட் வங்கி முதன்மை பொது மேலாளர் ராதாகிருஷ்ணன், 'கிரெடாய்' தமிழ்நாடு தலைவர் சுரேஷ் கிருஷ்ணன், சென்னை பிரிவு செயலாளர் கிருத்திவாஸ், நிர்வாகி முகமது அலி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். முடிவில் கிரெடாய் சென்னை பிரிவு பொருளாளர் அஸ்லாம் நன்றி கூறினார். 70 அரங்குகள் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட கட்டுமான நிறுவனங்களின் வீடு, மனை தொடர்பான அரங்குகள் கண்காட்சியில் இடம்பெற்றன. இந்த கண்காட்சியில் ரூ.15 லட்சம் முதல் ரூ.10 கோடி வரையிலான வீடுகள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த கண்காட்சி இன்றுடன் (Feb 19 2023 ஞாயிற்றுக்கிழமை) நிறைவு பெறுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக