எஸ்.ஐ.பி மீது பெருகும் மக்கள் நம்பிக்கை..!
நம் நாட்டில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடானது புதிய உச்சத்தை எட்டி யிருப்பதைக் கண்டு நிதி சார்ந்து செயல்படுகிறவர்கள் அனைவரையும் மகிழ்ச்சி கொள்ளச் செய்திருக்கிறது.
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் எஸ்.ஐ.பி (Systematic Investment Plan) முறையில் முதலீடு செய்யும் கணக்குகளின் எண்ணிக்கை (Folio) 2022 ஜனவரியில் 5.05 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஜனவரியில் மட்டும் 26 லட்சம் புதிய எஸ்.ஐ.பி கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும், எஸ்.ஐ.பி முறையில் செய்யப்பட்டிருக்கும் முதலீட்டின் மதிப்பு ரூ.5.65 லட்சம் கோடியிலிருந்து ரூ.5.77 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
தவிர, எஸ்.ஐ.பி முறையில் மாதம்தோறும் செய்யப்படும் முதலீடு 2021 மே மாதத்தில் ரூ.8,600 இருந்தது, 2022 ஜனவரியில் ரூ.11,517 கோடியாக உயர்ந்துள்ளது.
முன்பு சிறுக சிறுக சீட்டு கட்டி, தங்க நகை வாங்கினார்கள் நம் மக்கள். அடுத்து, கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்த்து மனை வாங்கினார்கள். ஆனால், இந்த இரண்டுமே இன்றைக்கு சாதாரண மக்கள் வாங்கும் விலையில் இல்லை. எனவே, எதிர்காலத்துக்கான சொத்தைச் சேர்க்க சிறந்த வழி எஸ்.ஐ.பி மூலம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதுதான் என்பதை உணர்ந்து அதை நோக்கி செல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.
எஸ்.ஐ.பி முறையிலான முதலீடு 100 ரூபாயிலிருந்து தொடங்குவதால், சாதாரண மனிதர்களும் எளிதில் பங்குபெற முடிகிறது. மாதம்தோறும் சீட்டு கட்டி பழக்கப்பட்ட நம் மக்களுக்கு எஸ்.ஐ.பி மூலம் மாதம்தோறும் முதலீடு செய்வது மிகவும் ஏற்றதாக உள்ளது. பங்குச் சந்தை ஏறினாலும் இறங்கினாலும், சராசரி விலையில் ஃபண்ட் யூனிட்டுகள் வாங்கப்படுவதால், நீண்ட காலத்தில் இரட்டை இலக்கத்தில் வருமானம் கிடைக்கும் வாய்ப்பிருக்கிறது.
மியூச்சுவல் ஃபண்டில் அதிக முதலீட்டாளர்கள் முதலீடு செய்துவரும் நிலையில், அதை ஒழுங்குபடுத்தும் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபி இறங்கியிருப்பது வரவேற்கத்தக்கது.
இனி ஒவ்வொரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமும் ஆண்டுதோறும் கட்டாயம் ஆடிட்டிங் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இது போல, பலவிதமான நடவடிக்கைகள் கொண்டு வந்து, இந்த முதலீட்டில் எந்தத் தவறும் நடக்க முடியாதபடிக்கு வெளிப்படையான ஒரு நிலையைக் கொண்டு வர வேண்டும்.
இப்போதைக்கு 5 கோடி எஸ்.ஐ.பி கணக்குகள் என்பது நல்ல ஆரம்பமே. அதேசமயம், இந்த ஐந்து கோடி கணக்கை ஒரு நபருக்கு இரண்டு போலியோ என்கிற அளவில் வகுத்தால், சுமார் 2.5 கோடி பேர் மட்டுமே எஸ்.ஐ.பி கணக்கு தொடங்கியிருப்பதாக நாம் கொள்ளலாம்.
130 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் இது பெருமைப்படும் கணக்கல்ல. குறைந்தது 10 கோடி பேராவது எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்வதுதான் குறிப்பிடத்தக்கதாக இருக்கும். அதுவே, அவர்களின் எதிர்காலத்தைச் சிறப்பானதாக்கும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக