*ஃபிக்ஸட் டெபாசிட்: முதிர்வின்போது எடுக்காவிட்டால் நஷ்டமா? ரிசர்வ் வங்கியின் விதிமுறை என்ன சொல்கிறது?
பெரும்பாலானவர்களின் பாதுகாப்பான சேமிப்பாக ஃபிக்ஸட் டெபாசிட் இருந்து வருகிறது. சமீப காலங்களில் தொடர்ந்து வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதால் அனைத்து வங்கிகளும் ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டியை உயர்த்தியுள்ளன. இது சேமிப்பாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கிறது.
அதேசமயம், ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள புதிய விதிமுறை சேமிப்பாளர்களுக்கு எதிரானதாக மாறியிருக்கிறது. அதாவது ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தை முதிர்வு அடைந்ததும் எடுக்காவிட்டால் கணிசமான இழப்பைச் சந்திக்க நேரிடும்.
ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறை?
ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களை அவை முதிர்வு அடையும் நாளில் எடுக்காவிட்டால் அந்த பிக்ஸட் டெபாசிட்டுக்கு வழங்கப்படும் வட்டி குறைவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கும். ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறை, `முதிர்வு அடைந்ததும் ஃபிக்ஸட் டெபாசிட்டை எடுக்காவிட்டால், முதிர்வடைந்த நாளிலிருந்து, டெபாசிட்தாரரால் திரும்பப் பெறப்படும் நாள்வரைக்கும் வழங்கப்படும் வட்டியானது, ஃபிக்ஸட் டெபாசிட் வட்டியைவிட குறைவாகவே வழங்கப்படும்" எனக் கூறுகிறது.
அதாவது தற்போது ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 5 சதவிகித வட்டி வழங்கப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். ஆனால், சேமிப்புத் திட்டங்களுக்கு 3 - 4 சதவிகித வட்டிதான் வழங்கப்படுகிறது. ஃபிக்ஸட் டெபாசிட் முதிர்வு நாளில் எடுக்கப்படாவிட்டால் அதற்கு சேமிப்புக் கணக்குக்கான வட்டிதான் வழங்கப்படும்.
முன்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் முதிர்வு அடைந்த பிறகும் எடுக்கப்படாமல் இருந்தால் வங்கிகள், ஃபிக்ஸட் டெபாசிட் காலத்தை நீட்டித்து அதற்கான வட்டியை வழக்கம்போல கொடுத்து வந்தன. இனி அப்படி கிடைக்காது. ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு தரப்படும் வட்டியானது, சேமிப்புக் கணக்கு வட்டியைவிட குறைவாக இருந்தால் அந்த வட்டியே தொடரும். ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கான வட்டி, சேமிப்புக் கணக்குக்கான வட்டியைவிட அதிகமாக இருந்தால், சேமிப்புக் கணக்கு வட்டி அளவுக்கு அது குறைக்கப்படும்.
முதிர்வு காலத்துக்குப் பிறகான காலகட்டத்துக்குதான் இந்த விதிமுறை. ஃபிக்ஸட் டெபாசிட்டின் முதிர்வுக் காலம் வரைக்கும் சேமிப்பு அசலின் மீது கொடுக்கப்படும் வட்டியில் எந்த மாற்றமும் இருக்காது.
சேமிப்பாளர்கள் கவனத்துக்கு?
எனவே ஃபிக்ஸட் டெபாசிட்டில் பணம் சேமித்து வருபவர்கள். முதிர்வு காலத்தில் அந்த ஃபிக்ஸட் டெபாசிட் பணத்தை எடுத்து விடுவது நல்லது. எப்போது முதிர்வடைகிறது என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
ஃபிக்ஸட் டெபாசிட் பணத்தை எடுத்து மியுச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் அவரவர் தேவைக்கேற்ப முதலீடு செய்துகொள்ளலாம்.
ஆனால், ஃபிக்ஸட் டெபாசிட் எப்போது முதிர்வு அடைகிறது என்ற தகவலை வங்கிகள், நிதி நிறுவனங்கள் பெரும்பாலும் வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிப்பதில்லை.
வங்கிகள், நிதி நிறுவனங்கள் மாதாந்திர சேமிப்பு தொகையை நினைவு படுத்தும்போது முதிர்வு அடைவதையும் முதிர்வுக் காலத்துக்குப் பிறகு, என்ன செய்ய வேண்டும் என்பதையும் வாடிக்கையாளர் களுக்குத் தெரிவிக்க கடமைப்பட்டிருக்கின்றன என்பதையும் உணர வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக