பங்குச் சந்தை
கவிஞர் மகுடேசுவரன் கோவிந்தராசன் பதிவு.
1999. என் கையில் மிகையான பணப்புழக்கம் இருந்தது. ஏறத்தாழ ஆறு இலக்கத்திற்கு அருகில் ஒரு தொகை இருந்தது.
தொழில் வெற்றியின் விளைச்சல் அது.
அன்றைய நாளில் பெருஞ்செல்வந்தர் மட்டத்திலேயே கணிசமான தொகைதான் அது.
தங்கம் ஒரு பவுன் 3000 ரூபாய்க்கு விற்ற நேரம்.
பொன் வாங்கவேண்டும் என்ற அறிவே
எனக்கு இல்லாத காலகட்டம்.
என்ன செய்தேன் தெரியுமா ?
அன்று மாலையில் தற்செயலாக,
தொலைக்காட்சி விற்பனை அகம் அருகில் இருக்கும் நண்பரின் அலுவலகம் சென்றேன்.
அப்போதுதான் கண்ணைப் பறிக்கும் ஒளித்திறனோடு 29 அங்குலத் தொலைக்காட்சிப் பெட்டிகள் புத்தம் புதிதாக வந்து இறங்கி இருந்தன.
அருகில் இருந்த விற்பனை அகத்தில்
அவை படங்காட்டின.
என்னால் ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
கடையினுள் நுழைந்து, அந்த 29 அங்குலத் திரை உள்ள தொலைக்காட்சியைப் பற்றிக் கேட்டேன். புத்தம் புது வீடியோகான் பெட்டி அது.
30000 விலை சொன்னவர்கள்
உரிய தள்ளுபடியோடு 27000 தர முன்வந்தார்கள்.
அதற்கும் முன்னால்,
29 அங்குலத் திரை தொலைக்காட்சிப் பெட்டிகள்
ஒரு இலட்சம்/ அறுபதாயிரம் / ஐம்பதாயிரம் என்று கைக்கு எட்டாமல் இருந்தன.
இந்த விலையையும் பெட்டியையும் பார்த்த பிறகு என்னால் என்ன செய்ய முடியும் ?
வாங்கிக் கொள்கிறேன் என்று உறுதி செய்துவிட்டேன். கையில் இருந்த பணத்தை அப்போதே எண்ணிக் கொடுத்தேன்.
அன்று மாலை வீட்டிற்குத் தொலைக்காட்சிப் பெட்டி வந்து விட்டது.
எல்லாரும் படம் பார்க்கின்றோம்.
அவ்வாறு புதிது புதிதாக வாங்கிக்கொண்டு இருந்த பொருள்கள் பல.
பிறகு அந்தத் தொலைக்காட்சிப் பெட்டி பத்து ஆண்டுகட்கும் மேலாக ஓடிக்கொண்டு இருந்தது. ஆனால், அவ்வகைப் பெட்டிகளின் விலை சரிந்துகொண்டே வந்தது.
பிறகு அந்தப் பெட்டி மதிப்பு இழந்தது.
அப்போது எனக்கு ஒன்றும் தெரியவில்லை.
90 களில் என்னிடம் பல பத்து ஆயிரங்கள் இருந்தன. அந்த நேரத்தில் எனக்குப் பங்குச் சந்தை தெரிந்து இருந்து
புல்லட் ஈருருளி செய்து விற்கின்ற எய்ச்சர் மோட்டாரில் முதல் போட்டு இருந்தேன் எனக் கொள்வோம்.
அப்போது ஒரு பங்கின் விலை ஒரு உரூபாய்.
இப்போது அந்தப் பங்கின் விலை 3500 உரூபாய்.
ஒரு உரூபாய், 3500 ரூபாயாக வளர்ந்து விட்டது.
அந்த வீடியோகான் தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கியதற்கு மாற்றாக,
அந்தப் பங்கினை வாங்கிப் போட்டுவிட்டு மறந்து விட்டேன் எனக் கொள்க.
இப்போது என்னிடம் பத்துக்கோடி உரூபாய் மதிப்பிலான பங்குகள் இருக்கும்.
(முப்பதாயிரத்தை முதலல் இட்டு இருந்தால்).
வேறு நிறுவனமாக இரிலையன்சு வாங்கி இருந்தேன் எனக் கொள்வோம்.
1999 இரிலையன்சு பங்கின் விலை இருபது.
இப்போது ரூ 2500
ஒன்றே கால் கோடி மதிப்பிலான இரிலையன்சு பங்குகள் இருக்கும்.
எண்ணிப் பாருங்கள் !
எப்போதும் நம்மிடம் பத்தாயிரம் உரூபாய் இருக்கத்தான் செய்கிறது.
அடுத்த பத்து ஆண்டுகளில்
அந்தப் பத்தாயிரம் மதிப்பிலுள்ள பல சொத்துவகையினங்கள் பன்மடங்கு பெருகத்தான் போகின்றன.
ஆனால், நாம் முதல் இடுவதும் இல்லை. சேமிப்பதும் இல்லை.
அப்படி ஒரு வாய்ப்பு இருப்பதே தெரியவில்லை.
அப்போது நான் ஓணான் முட்டையிடத் தயங்குகின்ற பகுதிகளில் வீட்டுமனை வாங்கினேன்.
ஆனால், பங்குகளை வாங்கவில்லை.
தங்கம் வாங்கவில்லை. எல்லாம் என் அறியாமை.
அப்போதைய காலச்சூழலும்கூட
நம் முன்பு இருந்த இத்தகைய வாய்ப்புகளைப் பற்றிய தேடலைக் கற்பிக்கவும் இல்லை.
எப்போதும் நான் இழந்த வாய்ப்புகளை
அந்தப் பத்தாயிரத்தோடுதான் ஒப்பிட்டுப் பார்ப்பேன்.
செயற்கைக்கோள் தொலைக்காட்சி வாய்க்கால்கள் மிகுந்து
தனிப்பட்ட பொருளியல் ஒளிபரப்புகள் வந்தபோதுதான் நான் தேடலில் இறங்கினேன்.
கோவையில் உள்ள சேரன் புத்தக இல்லத்தில் கைக்கு எட்டிய நூல்களை எல்லாம் வாங்கி வந்து படித்தேன்.
ஆனால் என்ன, இழந்த வாய்ப்புகள் இழந்தவைதாம்.
ஒருவேளை நான் இரிலையன்சு பங்கிலோ எய்ச்சர் மோட்டார் பங்கிலோ முதல் இட்டு இருந்தேன் எனக்கொள்வோம்.
என்னுடைய பங்குகளை அன்றாடம் சிறிது சிறிதாக விற்று வாங்கி, விளையாடிக் கொண்டு இருப்பேன்.
விலை ஏற்றத் தாழ்வுகளில்
எனக்கு வாய்ப்புகள் கொட்டிக் கொண்டே இருக்கும்.
என் இருப்பில் உள்ள பங்குகளுக்கு ஏற்ப ஏறு வாய்ப்புகளை (Call Options)
ஒவ்வொரு மாதந்தோறும் விற்றுக்கொண்டே இருக்கலாம்.
இது ஒரு கற்பனைதான். ஆனால் என் உலகம் வேறாகி இருக்கும்.
இவ்வளவு முதலீட்டு வளத்தில் உள்ள ஒருவர்,
அன்றாடப் போராட்டங்கள் உடைய பொது வாழ்வினராக உறுதியாக இருந்திருக்கமாட்டார்.
(இதனைத்தான் பெருவாய்ப்புகளைக் கையகப்படுத்தியவர்கள் செய்கிறார்கள்.)
காலமும் வாய்ப்பும் நமக்கு அருகில்தான் இருக்கின்றன என்பதை உணர்ந்து
அதை நாம் இறுக்கிப் பிடித்துக்கொள்ள வேண்டும்.
தாய் வயிற்றை குரங்குக்குட்டி கட்டிப் பிடித்துக்கொள்வதைப்போல.
சிறிது சிறிதாக நகர்த்தினால் போதும். பெருமலைகளைக் கட்டி எழுப்பி விடலாம்.
உலகத்தை நேர்மறைப் பார்வையோடு பார்க்கப் பழகிக் கொண்டால் போதும், துணிந்து இறங்க முடியும்.
எனக்கு அப்போது இல்லாத வாய்ப்பும் கற்பிப்பும்
இன்று ஒவ்வொருவர் முன்னேயும் கொட்டிக் கிடக்கின்றன.
அருணகிரி, சங்கரன்கோவில்
13.11.2022
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக