புரபஷனல் கூரியர் நிறுவனர் எஸ்.அகமது மீரான்...
மணிக்கு ஒரு ரூபாய் சம்பளம் வாங்கியவர், இன்று 100 கோடி ரூபாய் தொழிலின் உரிமையாளர்!
திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் எளிமையான குடும்பத்தில் பிறந்தவர்.தனது 19-வது வயதில் 1975ம் ஆண்டில், இளநிலைப் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்த போது தொலைபேசி துறையில் 180 ரூபாய் மாதச் சம்பளத்துடன் வேலை கிடைத்தது.
வெற்றி மீதுள்ள ஆசையின் விளைவாக, சரியான பாதையை நோக்கிப் பயணித்தார். முதலில் வேலையை ராஜினாமா செய்த அவர், ஒரு டிராவல் ஏஜென்சி தொடங்கினார்.
புரபசனல் கொரியர்ஸ் நிறுவனத்தை 7 பேருடன் இணைந்து 1987-ம் ஆண்டு தொடங்கினார். மீரான், அதன் சென்னை உரிமையாளராக தானே வர்த்தகத்தைக் கவனித்துக் கொள்கிறார். அவரிடம் 2,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். 90 கிளைகளுடன், இப்போதைய ஆண்டு வருவாய் 100 கோடி ரூபாயாக இருக்கிறது. புரபஷனல் கொரியர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும் இருக்கிறார்.
"ஒவ்வொரு மாதமும், ஊழியர்களுக்கு 2 கோடி ரூபாய் சம்பளமாக செலவு செய்கிறோம். என்னுடைய வாழ்நாளில், பல வேலை வாய்ப்புகளை உருவாக்கி உள்ளேன் என்ற வகையில் இது எனக்கு அளவுகடந்த திருப்தியை அளிக்கிறது," என்கிறார் மீரான்.
பல்வேறு நல்ல விஷயங்களைத் தாயிடம் இருந்து கற்றுக் கொண்டதாக அவர் சொல்கிறார். "என் தாய், என் ஆசிரியர்கள், மசூதியில் கேட்கும் உரைகள் ஆகியவற்றில் இருந்து நான் நல்ல மதிப்பீடுகளைக் கற்றுக் கொண்டேன் என்கிறார்.
1983-ம் ஆண்டு என்னுடைய பணியில் இருந்து விடுப்பு எடுத்துக் கொண்டு, சென்னைக்கு இடம் பெயர்ந்தேன். அங்கே நான், பாஸ்போர்ட், விசா எடுத்துக் கொடுப்பது, விமானம், ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்து கொடுப்பது போன்ற பணிகளுக்காக டிராவல் ஏஜென்சி தொடங்கினேன்.
"அண்ணா சாலையில் ஜெமினி மேம்பாலம் அருகே 125 ச.அடி அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து அலுவலகம் அமைத்தேன். இதற்கு அட்வான்ஸ் ஆக 10,000 ரூபாயும், மாத வாடகை 1,500 ரூபாயும் கொடுத்தேன். போன் இணைப்புத் தரவும், மூன்று பணியாளர்களுக்காகவும், நான் கூடுதல் தொகையை முதலீடு செய்தேன். தினமும், பல வாடிக்கையாளர்கள் கிடைத்தனர். தொழில் வளர்ச்சியடையத் தொடங்கியது," என்று நினைவு கூறுகிறார் மீரான்.
அதன் பின்னர், ஒரு ஆண்டுக்குள் பாதுகாப்பான மத்திய அரசு வேலையை விட்டு விலகினார். முழு நேரத் தொழில் முனைவோராக மாறினார்.
"கூடுதல் தொழில் வாய்ப்புகள் குறித்து நான் தேடத் தொடங்கினேன். என் நண்பர்களிடமும் அது குறித்துச் சொல்லி வைத்தேன். இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஒரு நண்பர், கொச்சியில் இருந்து செயல்படும் கொரியர் நிறுவனமான கோஸ்ட் கொரியர் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அந்த கொரியர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், சென்னையில் ஒரு ஏஜென்ட் நியமிக்க வேண்டும் என்று நினைத்திருந்தார்.
"சென்னையில் அவர்களுக்கு ஏற்கனவே சில வாடிக்கையாளர்கள் இருந்தனர். இந்த தொழில் வாய்ப்பை நான் ஏற்றுக் கொண்டேன். இதற்காக இரண்டு ஊழியர்களை நியமித்தேன். மொத்த வருவாயில் இருந்து 15 சதவிகிதம் கமிஷனாகப் பெற்றேன். 1985-ம் ஆண்டுக்கு மத்தியில் இந்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டபோது, எங்கள் மாத வருவாய் 1,500 ரூபாயாக இருந்தது. ஆனால், ஒன்றரை வருடத்துக்குள் 10 மடங்கு அதிகமாக 15 ஆயிரம் ரூபாய் வரை வருவாய் உயர்ந்தது," என்று நினைவு கூறுகிறார் மீரான்.
மீரான் விரைவாக, வர்த்தகத்தின் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டார். கொரியர் சேவைக்கு இந்தியாவில் அது ஆரம்ப கட்டம்தான். எனவே, மீரான் அவரே வாடிக்கையாளர்களிடம் பேசி ஆர்டர்கள் பெற்றார்.
இந்தியன் வங்கி, நபார்டு வங்கி உள்ளிட்ட பெரிய வாடிக்கையாளர்களுக்கு அவரே நேரில் சென்று கொரியர் டெலிவரி செய்தார். அவருடைய வாடிக்கையாளர்களிடம் மும்பை போன்ற நகரங்களில் இருந்து முந்தைய நாள் கொடுக்கப்பட்ட ஆவணங்களை மறுநாள் டெலிவரி செய்ய முடிவதைச் சுட்டிக்காட்டுவார்.
"நீங்கள் ஏதேனும் ஒரு ஆவணம் கொடுத்தாலும் கூட, மும்பை போன்ற நகரங்களுக்கு அடுத்த நாளே நாங்கள் டெலிவரி செய்வோம் என்று அவர்களிடம் சொன்னேன்," என்கிறார் மீரான். அந்நேரத்தில் கொரியர் வசதி டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் ஐதராபாத் ஆகிய நகரங்களில் மட்டுமே இருந்தது.
"நான் பஜாஜ் எம்.80 பைக் வைத்திருந்தேன். ஆரம்ப காலகட்டங்களில் அதில்தான் தினமும் கொரியர் பாக்கெட்களை கொடுக்கவும், வாங்கவும் விமானநிலையம் செல்வேன்," என்று நினைவு கூறுகிறார் மீரான். இப்போது அவர் ஒரு சொகுசான மெர்சிடிஸ் பென்ஸ் கார் வைத்திருக்கிறார். அதில்தான் அவர் பயணிக்கிறார்.
1986-ம் ஆண்டில், கொச்சியில் சில மாற்றங்கள் நடந்தன. எனவே, பல்வேறு நகரங்களில் இருந்த கோஸ்ட் கொரியர் நிறுவன ஏஜென்ட்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். நிறுவனத்துடன் தொடர்பில் இருந்த மீரான் உட்பட 8 பேர் அதில் இருந்து விலகினர். அவர்கள் ஒன்றிணைந்து கோஸ்ட் இன்டர்நேஷனல் என்ற ஒரு புதிய கொரியர் நிறுவனத்தைத் தொடங்கினர்.
பின்னர், சட்டப்பிரச்னை காரணமாக 1987-ம் ஆண்டு புரபஷனல் கொரியர்ஸ் என்று நிறுவனத்தின் பெயர் மாற்றப்பட்டது. ஒவ்வொரு நகரத்திலும் முகவர்கள் நியமிக்கப்பட்டனர். தொழில் விரிவாக்கம் பெற்றது.
ஒவ்வொரு முகமையும், தனிப்பட்ட உரிமையாளர்களைக் கொண்டிருந்தது. ஆனால், வணிக பரிமாற்றங்களுக்காக புரபஷனல் என்ற பிராண்ட் பெயரை உபயோகிக்க அனுமதிக்கப்பட்டனர். முகவர்கள் ஒவ்வொரு மாதமும் அவர்களின் மாத வருவாய்க்கு ஏற்ப, நிறுவனத்துக்கு ராயல்டியாக 100 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை செலுத்தினர்.
தமிழகத்தில் வலுவான நெட் ஒர்க்கை ஏற்படுத்தும் விதமாக மாநிலம் முழுவதும் முகவர்களை நியமிக்கும் பொறுப்பை சென்னையில் இருந்த மீரான் எடுத்துக் கொண்டார். "கொரியர் நிறுவனம் தொடங்கும்போது, திருநெல்வேலியில் ஒரே ஒரு முகவர்மட்டும்தான் இருந்தார். விரைவிலேயே முக்கியமான நகரங்களில் எல்லாம் முகமைகள் தொடங்கப்பட்டன. ஒரு அலுவலகம், தொலைபேசி இணைப்பு, சில பணியாளர்கள் வைத்திருக்கும் நபர்களை முகவர்களாக எதிர்பார்த்தோம். அந்த நாட்களில் 7,000 ரூபாய் முதலீட்டில், பலர் முகவர்களாக ஆனார்கள்.
"ஒரு நகரில் உள்ள முகமையின் கீழ், கிளைகள் செயல்பட்டன. இன்றைக்கு எங்களுக்கு 9000 கிளைகள் இருக்கின்றன. தமிழகத்தில் புரபஷனல் என்ற பிராண்ட்டின் கீழ் 8,000 பேர் பணியாற்றுகின்றனர்," என்கிறார் மீரான். அவருக்கு இப்போது 62 வயது ஆகிறது. இப்போது காலம் மாறிக்கொண்டிருக்கிறது. கொரியர் தொழிலின் சிறப்பான நாட்கள் முடிவடைந்துவிட்டதுபோல் தோன்றுகிறது.
"1993-2002-க்கு இடையே எங்கள் தொழில் ஆண்டு தோறும்15-20 சதவிகிதம் வளர்ச்சி பெற்றது. ஆனால், 2002-ம் ஆண்டுக்குப் பிறகு மின்னஞ்சல், குறுந்தகவல், இணையதள வங்கிச்சேவை ஆகியவை மக்களிடம் புகழ்பெற்றன. இதனால், எங்கள் வணிகம் பாதிக்கப்பட்டது. ஆவணங்கள் மற்றும் காசோலைகளை கொரியரில் அனுப்புவது குறைந்தது."
"ஆகவே மருந்துப் பொருட்கள், ஸ்பேர் பார்ட்ஸ் அடங்கிய சிறிய பார்சல்களையும் டெலிவரி செய்யும் பணிகளையும் நாங்கள் ஏற்றுக் கொண்டோம். இப்போது, இ-காமர்ஸ் நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை டெலிவரி செய்யும் பணிகளையும் செய்வது பற்றி சிந்திக்கிறோம்," என்கிறார் மீரான்.
மீரானின் மனைவி பெயர் நிஹார் ஃபாத்திமா. அவரது மகன் ஷேக் ஷபீக் அகமது (30), ஃபைனான்ஸ் படிப்பில் பட்டம் பெற்றிருக்கிறார். லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் அக்கவுண்டிங் படிப்பை முடித்திருக்கிறார். இப்போது அவர் இ-காமர்ஸ் நிறுவனங்களுடனான தொடர்புகளைக் கவனித்துக் கொண்டிருக்கிறார். அவரது மகள் ஷமீனா சுல்தானா (25) இஸ்லாமிய கல்வியில் பட்டம் பெற்றிருக்கிறார்.
மீரான், 2004-ஆம் ஆண்டு கல்வித்துறையிலும் கால் பதித்திருக்கிறார். சென்னையில் யுனிட்டி பப்ளிக் ஸ்கூல் என்ற பெயரில் சி.பி.எஸ்.இ பள்ளியைத் தொடங்கினார். இப்போது அந்தப் பள்ளியில் 2,400 பேர் படிக்கின்றனர்....