மொத்தப் பக்கக்காட்சிகள்

பொன்னியின் செல்வன் -மகிழ்ச்சி அளிக்கின்ற மாற்றம் அருணகிரி, சங்கரன்கோவில்

மகிழ்ச்சி அளிக்கின்ற மாற்றம். 

பல ஆண்டுகளுக்குப் பிறகு, 
சங்கரன்கோவில் கீதாலயா திரை அரங்கில், 
நேற்று 05.10.2022
பொன்னியின் செல்வன் படம் பார்த்தேன். 

படம் வெளியான நாள் முதல் அனைத்துக் காட்சிகளும், முழுமையாக நிரம்பி இருக்கின்றது. நான் திங்கட்கிழமை பார்க்க நினைத்தேன். இடம் இல்லை என்றார்கள். எனவே, முதன்முறையாக, சங்கரன்கோவிலில் முன்பதிவு செய்து படம் பார்த்தேன்.  

எனக்கு இது ஒரு வியப்பு. 

அடுத்தது, 
மக்கள் எல்லோரும் தங்கள் பிள்ளைகளுடன் வந்து பார்த்தார்கள். அந்தக் காலத்தில், உலகம் சுற்றும் வாலிபன், வசந்த மாளிகை, தேவரின் தெய்வம் போன்ற படங்களுக்கு, அனைத்துத் தரப்பு மக்களும் இப்படித் திரண்டு வந்து பார்த்தார்கள். 

அதுபோன்ற வரவேற்பு, பொன்னியின் செல்வன் படத்திற்குக் கிடைத்து இருப்பது மகிழ்ச்சி. 

அண்மைக்காலத்தில் இத்தகைய வரவேற்பை, 
ரஜினி, கமல், அஜித், விஜய் என யாருடைய படங்களும் பெற்றது இல்லை.

அடுத்தது, கீதாலயா திரை அரங்கம், முழுமையும் குளிர்பதன வசதி, 
அதுவும் குளிரில் நடுங்க வைத்து விட்டார்கள்.  
சென்னையில் எந்த அளவிற்கு குளிர்பதனம் செய்கின்றார்கள் என்பதை, திரை அரங்கு உரிமையாளர்கள் கேட்டு அறிந்து, 
அதே அளவு குளிர்பதனம் நிலவுமாறு பார்த்துக் கொள்வது நல்லது. 
அரங்கம் முழுமையும் நிறைந்து இருந்தாலும்,
ஊட்டி கடுங்குளிரில் உட்கார்ந்து பார்ப்பது போல இருந்தது. 

இடைவேளைகளின்போது, முன்பு முறுக்கு, தேநீர் மட்டும் கிடைக்கும். 
நேற்று, 40 ரூபாய் பாப்கார்ன் வாங்க, முண்டியடித்தது கூட்டம். ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தேன். 
பத்து நிமிடங்கள் கழித்துத்தான் பக்கத்தில் போக முடிந்தது. 
பாப் கார்ன் வணிகம் மட்டுமே பல ஆயிரம் ரூபாய்க்கு நடந்தது. 
காபி, தேநீர், ஐஸ்கிரீம் எல்லாமே விறுவிறுப்பான விற்பனைதான். 
எனக்கு, உனக்கு என போட்டி போட்டு வாங்கினார்கள். 

இப்படிப்பட்ட காட்சியை, சங்கரன்கோவிலில் பார்ப்பதும், இதுவே முதன்முறை. 

ஒருகாலத்தில் மக்கள் நடந்து வந்துதான் படம் பார்த்தார்கள். பக்கத்து கிராமங்களில் இருந்து மாட்டு வண்டிகளில் வந்து பார்த்தார்கள். சைக்கிள் மிதித்து வந்தார்கள். அடுத்து இரு உருளை ஊர்திகளில் வந்தார்கள். 
அடுத்து, தானிகளில் வந்தார்கள். 
நேற்று, 20 கார்களில் வந்திருந்தார்கள். நூற்றுக்கணக்கான உயர்தர இரு உருளை ஊர்திகள், தானிகள் என, பரபரப்பாக இருந்தது. 

திரை அரங்கம் இருக்கின்ற சாலை, 
முன்பு நடமாட்டம் குறைவாக இருந்தது. இப்போது நடக்க இடம் இல்லை. வழிநெடுகிலும் எண்ணற்ற புதிய கடைகள் என, 
இது ஒரு வணிகச் சாலையாக மாறி விட்டது.   

கீதாலயா திரை அரங்கம் குறித்து,
2018 அக்டோபர் மாதம் 9 ஆம் நாள் எழுதிய பதிவு.

குரல் பதிவு 287

நான் பள்ளி மாணவனாக இருந்தபோது
கட்டத் தொடங்கினார்கள். 
நம் ஊருக்கு ஒரு புதிய திரை அரங்கம் வருகிறது
புதுப்படம் போடுவார்கள் என்பதால்,
எங்களுக்கெல்லாம் மிகுந்த மகிழ்ச்சி.

அப்போது தொலைக்காட்சி கிடையாது. 
வேறு பொழுதுபோக்கு எதுவும் இல்லை
எனவே, புதிய திரை அரங்கம் திறக்கும் நாளை
ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தோம்.

எவ்வளவு கட்டி இருக்கின்றார்கள் என்பது குறித்தே
பள்ளி மாணவர்களுக்கு இடையில் பேச்சாக இருந்தது.

ரீவைண்டிங் கடை வைத்து இருந்த 
எலக்ட்ரீசியன்  மூக்கன் பாய்  என்பவரது இடத்தில் அண்ணாமலை என்பவர் கட்டினார்.
இருவரும் பங்குதாரர்கள் என உடன்படிக்கை செய்து கொண்டார்கள்.

கட்டி முடிக்கின்ற நிலையில் 
இருவருக்கும் இடையில் பிரச்சினைகள் ஏற்பட்டன. 
நீதிமன்றம் சென்றார்கள்.
அவ்வளவுதான்.
கட்டி முடித்த திரை அரங்கத்தை, 
நான்கு ஆண்டுகளாகத் திறக்கவே இல்லை.

எங்களுக்கெல்லாம் பெருத்த ஏமாற்றம்.
அந்த வழியாகப் போகும்போதெல்லாம் வேதனையாக இருந்தது. 

ஒருவழியாக வழக்கு முடிந்தது.
அண்ணாமலை திரை அரங்கத்தைத் திறந்தார்.

முதலாவது படம் ஶ்ரீ ராமஜெயம்.
தேங்காய் சீனிவாசன் கதாநாயகன்.

அண்ணாமலை குடும்பத்தார் திருப்பதி ஏழுமலையானை வழிபடுகின்றவர்கள் என்பதால், அந்தப் பெயரில் வெளிவந்த படத்தை, முதன்முதலாகத் திரையிட்டார்கள். 

முதல்நாளே சென்று பார்த்தேன்.

அதன் பிறகு என் தோழர்களுடன் 
எத்தனையோ திரைப்படங்கள் பார்த்தேன். 
கணக்கு இல்லை.

கோமதி சங்கர், சங்கர், கீதாலாயா என 
போட்டி நிலவியதால் நல்ல நல்ல படங்களும் கொஞ்சம் முன்னதாகவே வரத் தொடங்கின.

தற்போது ராஜபாளையத்தைச் சேர்ந்த ஒருவர்
வாங்கி இருப்பதாகச் சொன்னார்கள்.
நேற்று பொழுது போக்குவதற்காக 
ராட்சசன் என்ற படம் பார்த்தேன்.

நான் கோமதி சங்கர் திரை அரங்கில் 
தரை டிக்கெட் பதினாறு பைசாவுக்குப் படம் பார்க்கத் தொடங்கியவன்.
நீண்டகாலம் கழித்து ஐந்து பைசா கட்டணம் உயர்த்தினார்கள். 
பிறகு ஐந்தைந்து பைசாவாகத் தான் கட்டணத்தை உயர்த்தினார்கள். 

ஊருக்கு வெளியே, சீவலராய நேந்தல் விலக்கில் சிலகாலம் இருந்த 
ஶ்ரீ ராம் கூரைக் கொட்டகையில் 
மணல் தரைதான்.
அங்கும் கட்டணம் மிகமிகக் குறைவு.

ஆனால் நேற்று 120 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கியபோது பேரதிர்ச்சியாக இருந்தது.
அந்தக் கட்டணத்திற்கும்  100 பேர் வரையிலும்
படம் பார்க்க  வந்து இருந்தார்கள்.
சிலர் கணிணியில் இருக்கை முன் பதிவு செய்து
வந்திருந்தார்கள்.

உள்ளே நுழைந்தபோது வியந்து போனேன்.
இது சங்கரன்கோவில்தானா? அல்லது சென்னையா? என்று ஒரு ஐயம் ஏற்பட்டது.

நாங்கள் மர பெஞ்சில் உட்கார்ந்து படம் பார்த்தோம். அதில் சாய்ந்து கொள்ள ஒரே ஒரு பட்டை தான் இருந்தது.
இப்போது ஒவ்வொருவருக்கும் தனித்தனி இருக்கைகள். புத்தம் புதிய சொகுசு மெத்தைகள்.
அத்துடன் முழுமையும் குளிரூட்டப்பட்டு இருந்தது.
ஒலி ஒளி அமைப்பு துல்லியம்.

சென்னைக்கு இணையாக இருந்தது.
படத்தை நன்றாக ரசித்துப் பார்க்க முடிந்தது.
படமும் விறுவிறுப்பாக இருந்தது.

படம் முடிந்து வீட்டுக்கு புறப்படும்போது கவனித்தேன்.
அந்த நாட்களில் திரையரங்குக்கு சைக்கிளில் ஓரிருவர்தான் வருவார்கள்.
பின்னர் நூறு இருநூறு சைக்கிள்கள் வந்தன.
நேற்று ஒரு சைக்கிள் கூட இவில்லை.
கிட்டத்தட்ட 50 ஈருருளை வண்டிகள்தான்.

வட மாநிலங்களை ஒப்பிடுகையில், 
தமிழ்நாடு எந்த அளவுக்குப் பொருளாதாரத்தில் முன்னேறி இருக்கின்றது என்பதற்கு 
இந்தக் காட்சி ஒரு எடுத்துக்காட்டு.

1970 கள் வரை, விசைத்தறிகள் கிடையாது. 
கலைஞர் ஆட்சியில்தான் முதன்முறையாக தமிழ்நாட்டில் 4000 விசைத்தறிகளை அறிமுகம் செய்தார்கள். 
அதற்கு மானியமும் வழங்கினார்கள். 
இன்று சங்கரன்கோவில் நகரம் பெற்று இருக்கின்ற வளர்ச்சிக்கு, ,பல்லாயிரம் விசைத்தறிகள்தான் காரணம். 
இது திராவிட இயக்க ஆட்சிச் சாதனை. 

அருணகிரி
06.10.2022
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இயற்கை துயர் போக்கும் இன்சூரன்ஸ்..மனித அறிவினால் அழிவை குறைப்போம் Insurance

இயற்கை துயர் போக்கும் இன்சூரன்ஸ்..மனித அறிவினால் அழிவை குறைப்போம். நிதி ஆலோசகர் எஸ் கார்த்திகேயன் காப்பீடு ஏன் கட்டாயம் தேவை என்பதை இந்த காண...