பணம்
'பணம் தான் எல்லாம் என்பதே' வாழ்க்கை நமக்கு முகத்தில் அறைந்து கற்றுக் கொடுக்கும் பாடம். பணத்தை சிலர் நேசிக்கின்றனர்; அதற்காக, சிலர் உயிரையும் கொடுக்க தயாராக இருக்கின்றனர்.
சிலர் அதை நன்கு பயன்படுத்துகின்றனர்; சிலர் வீணடிக்கின்றனர்: சிலர் அதற்காக சண்டை போடுகின்றனர்; சிலர் வெறுமனே ஆசைப்படுகின்றனர்.
முதல் மில்லியனை சம்பாதிப்பது கடினம்; இரண்டாவது மில்லியனுக்கு அத்தனை கஷ்டம் இருக்காது; மூன்றாவது மில்லியனை சம்பாதிப்பது அதைவிட சுலபம். இத்தனை ஆண்டுகளில், இவ்வளவு சம்பாதித்து நான் உணர்ந்த உண்மை... எவ்வளவு பணம் நிறைவு தரும் என்பதற்கு, முடிவான கணக்கு எதுவும் கிடையாது.
பணம் உங்களுக்கு ஐந்து கோடி நன்மைகளை தரலாம். கெட்ட விஷயம் என்னவெனில், நீங்கள் போகும் போது, அதை எடுத்துப் போக முடியாது.என்னையே உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்... தினமும், 25 சிகரெட் பிடிக்கிறேன்; ஆறு, 'பெக்' விஸ்கி குடிக்கிறேன். உடற்பயிற்சி எதுவும் செய்வதில்லை; ஒரு பன்றி போல சாப்பிடுகிறேன். பணத்தை அனுபவிக்க, ஓர் எல்லை இருக்கிறது.
இத்தனை ஆண்டுகளாக இரவும், பகலும் உழைத்து சம்பாதித்த பணம், இதற்கு மேல் எனக்கு எதையும் செய்யாது. என் பிள்ளைகளுக்கும், ஓர் அளவுக்கு மேல் இது உதவாது.பணம் தலைமுறைகளை தாண்டி, நாடுகளை தாண்டி, கலாசாரங்களை தாண்டி, மதத்தை தாண்டி நிலைத்திருக்கும் விஷயம். வாழ்வில் பணத்துக்கு அர்த்தம் உண்டு. அது, உங்களுக்கு பொறுப்புணர்வையும் கூடுதலாக கொடுக்கிறது.பணத்தை நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது முக்கியம் இல்லை.
*ஆனால், பணம் உங்களை என்ன செய்கிறது என்பது ரொம்ப முக்கியம். உங்களுக்குள் இருக்கும் மனித இயல்புகளை, அது மாற்றி விடாமல் பார்த்துக் கொள்வது முக்கியம். உங்கள் குடும்பத்தை, நண்பர்களை, இளமைக்காலம் முதல் உங்களுடன் இணைந்து இருப்பவர்களை, நீங்கள் நடத்தும் விதத்தை, உங்களிடம் சேரும் பணம் மாற்றி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.*"
கேட்டது
சமீபத்தில் தன், 62வது வயதில் காலமான, பல நுாறாயிரம் கோடிக்கு சொந்தமான, பங்குச் சந்தை நிபுணர் ராகேஷ் ஜுன்ஜுன் வாலா இறப்பதற்கு முன், நிகழ்ச்சி ஒன்றில் ஆற்றிய பணம் பற்றிய சொற்பொழிவு: