Property Rule நொய்டாவில் தரைமட்டமாகும் இரட்டை கோபுரங்கள்: முக்கிய குற்றவாளி யார்?
இந்தியாவின் நொய்டாவில். 'சூப்பர்டெக்' நிறுவனத்தின் 'எமரால்டு குடியிருப்பு சங்க' இரட்டை கோபுர கட்டிடங்கள். இவற்றில் 'ஏப்பெக்ஸ்' என்ற கட்டிடத்தில் மொத்தம் 32 தளங்கள். 'சியான்' என்ற மற்றொரு கோபுரத்தில் 29 தளங்கள். இந்த 100 மீட்டர் உயர கட்டிடங்கள், டெல்லியின் புகழ்பெற்ற குதுப்மினார் கோபுரத்தையும் தாண்டியவை.
இங்கு கட்ட திட்டமிடப்பட்டவை 14 மற்றும் 9 தளங்கள்தான். கடந்த 2004 இல் உருவான அந்தத் திட்டம், பின்னர் 2012-ல் திருத்தப்பட்டது. அதன்படி, இரு கோபுரங்களிலும் 40 தளங்கள் வரை கட்ட நொய்டா ஆணையம் அனுமதி அளித்தது.
அது விதிமுறைமீறல் என்று எதிர்ப்பு தெரிவித்து எமரால்டு குடியிருப்பு நலச்சங்க நிர்வாகிகள் அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதில், இரட்டை மாடி கட்டிடங்களை 4 மாதங்களுக்குள் இடிக்கவும், வீடு வாங்கியவர்களுக்கு (ஒரு வீட்டின் விலை ரூ.1 கோடி முதல் ரூ.3 கோடி வரை) அவர்கள் செலுத்திய தொகையை 12% வட்டியுடன் திருப்பி வழங்கவும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
அதை எதிர்த்த மேல்முறையீட்டில், கட்டுமான விதிமுறைகளை மீறி இந்தக் கட்டிடங்கள் கட்டுப்பட்டுள்ளன என்று கூறிய சுப்ரீம் கோர்ட்டு, அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பை கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்டில் உறுதி செய்தது.
அதையடுத்து, இரட்டை கோபுரங்களை இடிப்பதற்கான திட்டமிடல், பணிகள் தொடங்கின.
மும்பையைச் சேர்ந்த 'எடிபைஸ் என்ஜீனியரிங்' என்ற நிறுவனம் மற்றும் அதன் தென்ஆப்பிரிக்க பங்குதாரரான 'ஜெட் டெமாலிஷன்ஸ்' நிறுவனத்திடம் இடிப்பு பணி ஒப்படைக்கப்பட்டது.
இரண்டு கோபுரங்களிலும் ஆங்காங்கே துளையிட்டு வெடிபொருட்களை நிரப்பும் பணி கடந்த திங்கட்கிழமை முடிவடைந்தது. அதில், கட்டிடங்களை வெடிவைத்து தகர்ப்பவர்கள், பயிற்சி பெற்ற ஊழியர்கள் என 40 பேர் பங்கேற்றனர். மொத்தம் 20,000 இடங்களில் வெடிமருந்து வைக்கப்பட்டு, அவற்றுக்கு இடையில் இணைப்பு கொடுக்கப்பட்டது. அவை அனைத்தையும் சேர்த்து பிரதான இணைப்பு இன்று ஆகஸ்ட் 28, 20222 தான் கொடுக்கப்பட்டிருக்கிறது.
வெடிமருந்து வைக்கப்பட்ட பகுதிளைச் சுற்றி கம்பிவலையும், 'ஜியோ டெக்ஸ்டைல் கிளாத்' என்ற துணியும் போட்டு நன்கு சுற்றப்பட்டிருக்கின்றன. இந்த கம்பி வலையின் மொத்த எடை 225 டன்கள். துணியின் நீளம் 110 கி.மீ. தகர்ப்பின்போது இடிபாடுகள் பறந்து அண்டையில் உள்ள கட்டடங்களை தாக்காமல் இவை போட்டு சுற்றப்பட்டிருக்கிறது.
இரு கட்டடங்களிலும் மொத்தம் 3,700 கிலோ வெடிமருந்து பயன்படுத்தப்பட்டிருக்கிறது..
'அருவி உள்வெடிப்பு' முறையில் தொடர்ச்சியாக 10 வினாடிகளுக்கு வெடிபொருட்கள் வெடிக்க, 9 வினாடிகளுக்குள் ஒட்டுமொத்த கட்டமும் சீட்டுக்கட்டு போல சரிந்துவிடும். அதனால் எழும் தூசி மண்டலம் அடங்குவதற்குத்தான் 10 நிமிடங்கள் ஆகும்.
மொத்தம் 7.5 லட்சம் சதுர அடி கட்டுமான பரப்பளவு கொண்ட இந்த 2 கட்டடங்களை இடிக்க ஆகும் செலவு ரூ.20 கோடி.
இரு கோபுரங்களிலும் 915 குடியிருப்புகள் உள்ள நிலையில் அவற்றில் 633 'புக்' செய்யப்பட்டுவிட்டன. முறைப்படி கட்டுமானம் அமைந்து, அனைத்து குடியிருப்புகளையும் விற்றிருந்தால் சூப்பர்டெக் நிறுவனத்துக்கு கிடைத்திருக்கக்கூடிய தொகை ரூ.1,200 கோடி. ஆனால் விதிமுறகளை காற்றில் பறக்கவிட்டதால், குடியிருப்பு வாங்கியவர்களுக்கு வட்டியுடன் தொகையை திரும்ப வழங்க வேண்டிய நிலைக்கு இந்நிறுவனம் தள்ளப்பட்டிருக்கிறது.
இந்த இரு உயர கட்டிடங்கள், இன்று ஆக. 28, 2022 பிற்பகல் சரியாக 2.30 மணிக்கு தகர்ப்பு நிபுணர் சேத்தன் தத்தா ஒரு பொத்தானை அழுத்தியதும் பொலபொலவென்று உதிரப்போகின்றன.
உண்மையான குற்றவாளி..!
லாபத்துக்காக விதிமுறைகளை வீசியெறிவோருக்கு இது ஓர் எச்சரிக்கை மணி என்றாலும் இதில் முதன்மை மற்றும் முதல் குற்றவாளி அரசுதான். இத்தனை மாடிகள் கட்ட அனுமதி கொடுத்தது ஏன்?
அத்தனை மாடிகள் கட்டி முடிக்கும் வரைக்கும் வேடிக்கை பார்த்தது ஏன் நொய்டா கட்டுமான அனுமதி ஆணையம் நியாயமாக செயல்பட்டிருந்தால், இந்த நிலை வந்திருக்காது என்பதே உண்மை. அதிகாரிகள் நியாயமாக செயல்பட்டார்களா? இப்படி அனுமதி கொடுக்க நிர்பந்திக்கப்பட்டார்களாக என்பது கடவுளுக்குதான் வெளிச்சம்.,,!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக