இந்திய தொழில் கூட்டமைப்பு நடத்தும் 14வது 'ஃபுட்புரோ 2022 கண்காட்சி
----------
உணவு பதப்படுத்தும் தொழில்நுட்பத்தில் நவீன கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்த கண்காட்சி
----------------
300க்கும் மேற்பட்ட உள்நாட்டு - வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்பு
--------
இந்த ஆண்டு வாழை மற்றும் சிறு தானியங்களுக்கு சிறப்பு பிரிவு துவக்கம்
சென்னை, ஆக. 1– 2022: உணவு பதப்படுத்துதல், பேக்கேஜிங் மற்றும் உணவு தொழில்நுட்பம் தொடர்பாக இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) இந்தியாவில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை புட்புரோ கண்காட்சியை நடத்துகிறது. அதன் 14வது பதிப்பு புட்புரோ 2022 கண்காட்சி ஆகஸ்ட் 5–ந்தேதி முதல் 7–ந்தேதி வரை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது.
புட்புரோ என்பது உணவு பதப்படுத்துதல் பற்றிய ஒரு விரிவான கண்காட்சி மற்றும் மாநாடு ஆகும். இதில் உணவு பதப்படுத்துதல் தொடர்புடைய தொழில்களுக்கான வாய்ப்புகள், அதற்கு தேவையான அனைத்து தொழில்நுட்பம், தீர்வுகளும் கிடைக்கும். 3 நாட்கள் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்த உள்ளன. மேலும் இதில் துறைசார் மாநாடுகள், வர்த்தக நிறுவனங்களின் கருத்தரங்குகள், தயாரிப்பு வெளியீடுகள் மற்றும் விளக்கக்காட்சிகள் இடம் பெற உள்ளன.
சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற உள்ள இந்த கண்காட்சியில் வேளாண் மற்றும் விவசாயத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் 5–ந்தேதி காலை 10 மணிக்கு துவக்க உரையாற்ற உள்ளார். அதனைத் தொடர்ந்து உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி மற்றும் ஊரக தொழில்துறை அமைச்சர் டி.எம். அன்பரசன் ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளனர்.
இதில் தமிழக வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் செயலர் சி. சமயமூர்த்தி, சிஐஐ தென் மண்டல தலைவர் சுசித்ரா கே எல்லா, புட்புரோ 2022 தலைவர் பி. தியாகராஜன் மற்றும் சிஐஐ தமிழ்நாடு மாநில தலைவர் ம சத்யகம் ஆர்யா ஆகியோர் துவக்க உரையாற்ற உள்ளனர்.
இது குறித்து பேசிய புட்புரோ 2022 தலைவர் மற்றும் புளூ ஸ்டார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பி. தியாகராஜன் கூறுகையில், சராசரி ஆண்டு வளர்ச்சி விகிதத்தைப் பொறுத்தவரை உணவு பதப்படுத்தும் தொழில் சுமார் 11.18% வளர்ச்சியடைந்து வருகிறது. உணவுப் பொருட்களில் உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தில் ரூ.10,900 கோடி செலவினத் திட்டம் வரும் ஆண்டுகளில் இந்தத் தொழிலின் வளர்ச்சியை
அதிகரிக்கும். தற்போது இந்த கண்காட்சியில் புதிதாக "புட் எக்ஸ்போ" மற்றும் ''புட் பேக்கேஜிங் எக்ஸ்போ' ஆகிய 2 பிரிவுகள் அறிமுகம் செய்யப்படுகிறது. இதில் புட் எக்ஸ்போவில் உலகம் முழுவதிலுமிருந்து பல்வேறு வகையான பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் இடம் பெற உள்ளது மற்றும் ''புட் பேக்கேஜிங் எக்ஸ்போ'வில் உணவு பேக்கேஜிங் தொடர்பாக பல்வேறு நவீன தொழில்நுட்ப தீர்வுகள் வழங்கப்பட உள்ளது. அத்துடன் புதிதாக வாழை மற்றும் சிறுதானியங்களுக்கென்று 2 சிறப்பு பிரிவுகளும் இடம் பெற உள்ளன என்று தெரிவித்தார்.
சிஐஐ தென் மண்டல தலைவர் மற்றும் பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் இணை நிறுவனர் மற்றும் இணை நிர்வாக இயக்குனர் சுசித்ரா கே எல்லா கூறுகையில், புட்புரோ 2022 என்பது உணவு பதப்படுத்துதல், பேக்கேஜிங், குளிர் சேமிப்பு, கிடங்கு, உணவு மற்றும் விவசாயம், தளவாடங்கள் மற்றும் தொடர்புடைய தயாரிப்புகளில் ஈடுபட்டு இருக்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் சமீபத்திய தொழில்நுட்பத்தை காட்சிப்படுத்த ஒரு முக்கியமான தளமாகும். தமிழ்நாடு வேளாண்மைத் துறையின் சிறப்பு அரங்கு மூலம் வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல் துறைகளில் தமிழகத்தின் தலைமைத்துவத்தை இந்தப் பதிப்பு வெளிப்படுத்தும் என்று தெரிவித்தார்.
3 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் முக்கிய நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் பங்கேற்கும் குழு விவாதமும் இடம் பெற உள்ளது. இதில் உணவுப் பதப்படுத்தும் துறையின் மதிப்பை வெளிப்படுத்துதல் தொடர்பாக இஐடி பாரி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எஸ். சுரேஷ், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குனர் எம். முரளி உள்ளிட்டோர் பங்கேற்று கலந்துரையாட உள்ளனர். மேலும் இதில் உணவுப் பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள், பிராண்டிங் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்தும் பேசப்பட உள்ளது. மேலும் இந்த கண்காட்சியில், "கோல்டுஸ்டோர் இந்தியா" & டி-புட் நிறுவனத்தின் மூன்றாம் பதிப்பு, பாரம்பரிய உணவுப் பொருட்களைக் காட்சிப்படுத்துவதுடன், குளிர்பதன சேமிப்பு, குளிர்பதனம் தொடர்பாக பரந்த அளவிலான தயாரிப்புகள் மற்றும் சேவைகள், தீர்வுகளை வழங்க உள்ளது. இந்த கண்காட்சியில் நடைபெறும் மாநாட்டில் 30க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் இரண்டு நாட்களில் உணவு பதப்படுத்துதல், குளிர் சேமிப்பு மற்றும் பாரம்பரிய உணவுகள் குறித்து பேச இருக்கிறார்கள்.
துவக்க விழா அன்று, மெக்கின்சி & கம்பெனியுடன் இணைந்து 'உணவுப் பதப்படுத்தும் துறையில் மதிப்பைத் திறத்தல்' குறித்த வெள்ளை அறிக்கையை சிஐஐ வெளியிட உள்ளது.
பதப்படுத்தப்பட்ட மற்றும் பேக்கிங் செய்யப்பட்ட உணவுகளின் முன்னணி உற்பத்தியாளர்கள், தொழில்நுட்ப தீர்வு வழங்குனர்கள், அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பம், செயலாக்க உபகரண உற்பத்தியாளர்கள், தயாரிப்பாளர்கள், உணவுப் பாதுகாப்புத் தீர்வுகள் வழங்குனர்கள், ஏற்றுமதியாளர்கள், சில்லறை வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி, தொழில்துறை தலைவர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள், பார்வையாளர்கள் என சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்த 3 நாள் கண்காட்சியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உணவு பதப்படுத்தும் தொழில்நுட்பம் மற்றும் இயந்திரங்கள்; சில்லறை விற்பனை மற்றும் விற்பனை முறைகள்; ஓட்டல் மற்றும் சமையலறை உபகரணங்கள்; உடல்நலம் மற்றும் ஆரோக்கிய தயாரிப்புகள்; பேக்கரி உபகரணங்கள், இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பம்; உணவு சமைப்பதற்கு தேவையான பொருட்கள், வாசனை திரவியங்கள் மற்றும் சுவையூட்டிகள்; பேக்கேஜிங் இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பம்; குளிர்பதன மற்றும் குளிர் பதன அமைப்புமுறை; பதப்படுத்தப்பட்ட மற்றும் பேக்கிங் செய்யப்பட்ட உணவுகள், பால் மற்றும் பால் பதப்படுத்தும் தொழில்நுட்பம்; குளிரூட்டப்பட்ட போக்குவரத்து தீர்வுகள்; உணவு, சிற்றுண்டி உணவு பிரிவுகள், சிறுதானியம் உள்ளிட்ட பாரம்பரிய உணவுப் பொருட்கள் பிரிவுகளும் இடம் பெற உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக