August 15 மக்கள் புரட்சியின் மறுபெயர் ஆகஸ்ட் புரட்சி சிறப்புக் கட்டுரை.நீ சு பெருமாள்
இந்தியா விடுதலை பெற்று 75 வது ஆண்டில் அடியெடுக்க வைக்க உள்ளது.
1947 ஆகஸ்ட் 15 ல் போனால் போகிறது என்று வெள்ளையர்கள் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கவில்லை.... மாறாக இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கியே ஆக வேண்டும் என்கிற நிர்பந்தத்தை வழங்கிய போராட்டம் தான் ஆகஸ்ட் புரட்சி.
மகாத்மா காந்தியடிகள் தொடர்ந்து 27 ஆண்டுகள், தனிநபர் சத்தியாக்கிரகம், உண்ணாவிரதம், சட்டமறுப்பு இயக்கம், போன்ற அகிம்சை வழி போராட்டத்தை எல்லாம் நடத்தினார்
கடைசியில் செய் அல்லது செத்து மடி என்கிற வகையில் புரட்சிப் பாதைக்குத்தான் காந்தியின் காங்கிரஸ் திருப்பியது என்பதே வரலாறாகும். அந்தப் போராட்டம்தான் கன்னியாகுமரி தொடங்கி காஸ்மீர் வரையில் மக்களே தலைமை தாங்கி நடத்திய ஆகஸ்ட் புரட்சி.
இந்த போராட்டத்தின் தொடக்க நாளில் பிரிட்டன் பிரதமர் இவ்வாறு பேசினார்..
"நான் பிரதமராக இருப்பது பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் கலைப்பு விழாவிற்குத் தலைமை தங்குவதற்கு அல்ல.." என்று 1942ல் பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சில் இவ்வாறுதான் லண்டன் நாடாளுமன்றத்தில் ஆணவமாகப் பேசினார். இந்த சம காலத்தில்தான், பம்பாயில் காங்கிரஸ் காரியக்கமிட்டிக் கூட்டமும் நடைபெற்றது.
மகாத்மா காந்தியடிகள் எதிலும் சிக்கனத்தை கடைப்பிடிப்பவர்.
தான் அணிந்து கொள்ளும் உடையில் தொடங்கி உண்ணும் உணவு, மக்களைச் சந்திக்க மேற்கொள்ளும் ரயில் பயணங்கள் வரையில் சிக்கன நடவடிக்கைதான் பிரதானமாக இருக்கும். ஆனால் 1942 ஆம் ஆண்டு ஆகஸ்டு 8-ல் பம்பாயில் கூடிய காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் அவர் பேசிய பேச்சு என்பது, சொற்சிக்கனத்தைத் தாண்டியதாக 140 நிமிடங்கள் நீடித்தன.
எவ்வாறெல்லாம் வெள்ளையர் அரசு இந்தியர்களை ஏமாற்றி வருகிறது என்பதை விளக்கமாகப் பேசி நிறைவில்,
"உங்களுக்கு நான் சுருக்கமான மந்திரச் சொல் ஒன்றைச் சொல்கிறேன். நாளை காலை முதல் இதை மனதில் பதியவைத்துக் கொண்டு, செயல்படவேண்டும். "செய் அல்லது செத்துமடி" என்பது தான் அந்த மந்திரம். நாம் இந்தியாவை அடிமைத் தளத்திலிருந்து விடுவிக்க வேண்டும். அல்லது இந்தப் போரில் நாம் செத்து மடிய வேண்டும் இதுவே என்னுடைய தாரக மந்திரம்" என்று, பேசி நிறைவு செய்தபோது செயற்குழு கூட்டமே காந்திஜியின் ஆவேசப் பேச்சை கேட்டு அதிர்ந்து போனது.
"நாம் நாளை முதல் நடத்த இருக்கும் இந்த இயக்கமானது, நமக்கான போராட்டம் மட்டுமல்ல....
உலகெங்கிலும் உள்ள அடிமைப்பட்ட மக்களுக்கான போராட்டமாக இது அமைய வேண்டும். இந்தப் போராட்டத்தின் முடிவு என்பது இந்தியாவின் விடுதலையாக இருக்க வேண்டும். நாளை முதல் நம் நாட்டில் எவருக்கும் யாரும் அடிமை இல்லை என்பதை உணர்ந்து கொண்டு செயல்பட வேண்டும்" என்று வெள்ளையனே வெளியேறு தீர்மானத்தை ஜவஹர்லால் நேரு முன்மொழிந்து பேசினார்.
காந்திஜியின் தலைமையிலான தூதுக்குழு ஒன்று வைஸ்ராயைச் சந்தித்து தீர்மான நகலை வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
ஆனால் அதற்கெல்லாம் பொறுமை இல்லாத வெள்ளை அரசு உடனடியாக கூட்டம் முடிந்த இரவே காந்திஜியைக் கைது செய்கிறது. காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களை மும்பை சிறையிலும், காந்திஜியையும் அவரது மனைவி கஸ்தூரிபா அவர்களையும் புனேவில் உள்ள ஆகாகான் மாளிகையிலும் அடைத்து வைக்கிறது.(இந்த கடைசி சிறைவாசத்தில்தான் 1944 பிப்ரவரி 23ல் கடுமையான காய்ச்சலால் கஸ்தூரிபா பாதிக்கப்பட்டு தற்காலிக சிறையான ஆகாகான் மாளிகையில் காந்திஜியின் மடியில் தலைவைத்து உயிரைவிடுகிறார்.தமிழகத்தின் சார்பில் பம்பாயில் நடைபெற்ற காங்கிரஸ் காரியக்கமிட்டிக் கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பும் வழியிலேயே காமராஜர்,பக்தவத்சலம், உபயதுல்லா, அண்ணமலைப்பிள்ளை, முத்துராமலிங்கமுதலியார் போன்றோர் கைது செய்யப் படுகின்றனர். என்ன நடக்கிறது, என்ன செய்வது என்று திகைத்து நின்ற வேளையில் லண்டனில் இருந்த இந்தியாவிற்கான பிரிட்டிஷ் அமைச்சர் அமெரிதுரை என்பவர் லண்டன் பிபிசி வானொலி மூலம் பேசுகிறார்.
"காந்திஜியின் வெள்ளையனே வெளியேறு திட்டம் என்பது என்னவென்று நம் உளவுத்துறை அதிகாரிகள் அறிந்து கொண்டுள்ளனர்.
காந்திஜியின் இந்த போராட்ட அறிவிப்பில், தந்தி கம்பங்களை சாய்ப்பது, அதன் மூலம் தொலை தொடர்புகளை துண்டிப்பது, அரசு அலுவலகங்கள் மற்றும் காவல்நிலையங்களை கைப்பற்றுவது அல்லது தீ வைத்து கொளுத்துவது போன்ற நாசகரமான வேலைகளைச் செய்வதுதான், செய் அல்லது செத்து மடி என்கிற போராட்டம்" என்று விளக்கமாக பேசுகிறார். இந்தப் பேச்சு செய்தித்தாள்கள் அனைத்திலும் வெளியாகின்றன.
அதுவரையில் எப்படி போராட்டங்களை நடத்துவது என்று தெரியாத மக்களுக்கு இந்த அமைச்சரின் பேச்சு போராட்டத்தை முன்னெடுப்பதற்கான வழிகளைச் சொல்வதாகவே அமைந்தது.
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் காந்திஜி அறிவித்த வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்கு ஆதரவாக காந்திஜி கைது செய்யப் பட்ட மறுநாளே போராட்ட களத்திற்கு வருகின்றனர்.
மாணவர் விடுதியின் மேல் பறந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் யூனியன் ஜாக் கொடி கீழிறக்கப்பட்டு காங்கிரசின் மூவர்ணக் கொடி பறக்க விடப்பட்டது. மாணவர்களின் இந்தச் செயலால் கல்லூரி நிர்வாகம் அதிர்ச்சி அடைந்தது.
காவல்துறையினரை வரவழைத்தனர்.
மூவர்ணக் கொடியினை மாணவர்கள் ஏற்றியது தவறு என்றும் அதற்காக மாணவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொன்னது கல்லூரி நிர்வாகம்.
ஆனால் மாணவர்கள் இதை ஏற்க மறுக்கின்றனர். உடனடியாக மாணவர்களின் விடுதிகள் மூடப்படுகின்றன. இதனை தீரத்துடன் எதிர்கொண்ட மாணவர்கள் *மக்களிடம் நிதி வசூல் செய்து அந்த பகுதியிலேயே கட்டிடம் ஒன்றை வாடகைக்கு எடுத்து அதன்மேல் கம்பீரமாக தேசியக் கொடியினை பறக்க விடுகின்றனர்.*
மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாக பச்சையப்பன் கல்லூரி, கிறித்துவக் கல்லூரி, சென்னை சட்டக் கல்லூரி என மாணவர்கள் ஒருமித்து போராடத் தயாரானார்கள்.
இப் போராட்டத்தில் தலைமை தாங்கிய எஸ் ஏ கபீர் பிற்காலத்தில் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் ஆனார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதே போல இப் போராட்டத்தில் பங்கேற்ற கிறிஸ்தவக் கல்லூரி மற்றும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பலர் விடுதலையடைந்த இந்தியாவில் அரசியல் களத்தில் முக்கிய பொறுப்பிற்கு வந்தனர். என்பதும் வரலாறாகும்.
மதுரையில் திலகர் திடல் மற்றும் ஜான்சி ராணி பூங்கா பகுதியில் கட்டுக்கடங்காத வகையில் மக்கள் திரள்கிறார்கள்.
சிறு சிறு ஊர்வலங்கள் மற்றும் மறியல் ஆர்பாட்டம் என திரும்பிய பக்கமெல்லாம் வெவ்வேறு வடிவமான போராட்டங்கள் நடைபெற்றன
காவல்துறை மக்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறியது. ஒரு கட்டத்தில் காவல்துறை மிருகத்தனமாக துப்பாக்கி சூடு நடத்துகிறது. ஆறுபேர் சம்பவ இடத்திலேயே மரணமடைகின்றனர். இதில் மூன்று பேர் பள்ளி மாணவர்கள் என்று தெரிந்தவுடன் போராட்டம் மேலும் உக்கிரமாக நடைபெறுகிறது.
மதுரை தெற்கு வாசல் பகுதியில் இருந்த தபால் தந்தி நிலையம் போராட்டக் காரர்களின் கோபத்திற்கு தீக்கிரையானது. பசுமலை பகுதியில் இருந்த வெள்ளை அரசு அதிகாரிகளின் பங்களாக்களும் போராட்ட காரர்களின் கோபத்திலிருந்து தப்ப முடியாமல் திணறியது.
காந்திஜி பிறந்த நாளன்று ஊர்வலம் நடத்தினார் என்பதற்காக சொர்ணத்தம்மாள் உள்ளிட்ட பெண்களை ஒரு லாரியில் ஏற்றி மதுரை நகருக்கு வெளியில் இறக்கி நிர்வாணப் படுத்திய சர்க்கிள் இன்ஸ்பெக்டர் விஸ்வநாத நாயர், அப்போது வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்டக்காரர்களின் கண்ணில் பட அவர் மீது அக்கினி திராவகத்தை வீசினர். அதே போல தொழிலாளர்களின் நகரமான கோவையும் கொந்தளித்தது. தடியடி, துப்பாக்கி சூடு நடத்திய அதிகாரிகளுக்கு எதிராக கோவை சூலூர் விமான நிலையம் தீக்கிரையானது. இந்திய அளவில் இச் சம்பவம் பிரிட்டிஷ் அரசு அதிகாரிகளை அதிர வைத்தது.
நெல்லை மாவட்டம் குலசேகரன் பட்டணத்தில் நடைபெற்ற உப்பள முற்றுகை, தேவகோட்டை, காரைக்குடி குறிப்பாக திருவாடானையில் நடைபெற்ற சிறை உடைப்பு போராட்டம் என தன்னுயிரை துச்சமாக மதித்து நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஒட்டு மொத்த தமிழகத்தையே கொந்தளிக்க வைத்தது. 1942 ஆகஸ்ட் 9ல் தொடங்கிய இந்த மக்கள் புரட்சி இரண்டு ஆண்டுகள் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் தமிழகம் தனி முத்திரை பதித்தது என்பது வரலாறு காட்டும் உண்மையாகும்.
வெள்ளையனே வெளியேறு இயக்கம், அதனைத் தொடர்ந்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் ராணுவ நடவடிக்கை, மேலும் உச்ச கட்டமாக நடைபெற்ற பம்பாய் துறைமுகத் தொழிலாளர் நடத்திய வேலை நிறுத்தம் கப்பற்படை எழுச்சி என்று வரலாறு பதிவு செய்துள்ளது.
தொடர்ந்து தேசம் முழுவதிலும் நடைபெற்ற போராட்டத்தால் பிரிட்டிஷ் அரசிற்கு கடுமையான நெருக்கடி உண்டானது.
*இதன் எதிரொலி 1946 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திலும் ஒலித்தது.* அப்போது பிரதமராக இருந்த அட்லி பேசும் போது முன்னாள் பிரதமர் சர்ச்சில் மாதிரி பேசாமல், சுருதி இறங்கி இவ்வாறு பேசினார்..
"தற்போதைய சூழலில் கடந்த காலத்தில் பேசப்பட்ட வார்த்தைகளைப் பேச முடியாது. 1920 ல் 1930 ல் 1942 ல் இருந்த நிலை இன்றைக்கு இந்தியாவில் இல்லை" என்று பேச வைத்த புரட்சி தான் ஆகஸ்ட் புரட்சி.
இந்தியாவில் இனியும் நாம் ஆட்சி செய்து கொண்டிருக்க முடியாது என்று பிரிட்டனே உணர்ந்த போராட்டம்தான், வெள்ளையனே வெளியேறு இயக்கம். வீரியம் கொண்ட இந்த இறுதிக் கட்ட போராட்டத்தில்,
*இந்து மகாசபை தம்முடைய உறுப்பினர்களுக்கு தத் தம் அரசுப் பதவியில் தொடரலாம் என்றும் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை ஆதரிக்க வேண்டாம் என்றும் தீர்மானம் நிறைவேற்றியது.* அதே போல ஆர் எஸ் எஸ் இயக்கம் நம் சட்ட வரம்பிற்குள் நின்று நமக்கு ஆதரவாக இப் போராட்டத்தில் பங்கேற்காமல் இருந்தது என்று பிரிட்டனின் உளவுப் பிரிவு அறிக்கை சமர்பித்தது.
உண்மைதான்... கால வெள்ளோட்டத்தில் சில வரலாற்றுச் செய்திகள் கசப்பாகத்தான் இருக்கும்.!
8 8 2022
நீ சு பெருமாள்.
9442678721 /7904234672
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக