மொத்தப் பக்கக்காட்சிகள்

பேராசிரியர் சௌந்தர மகாதேவன் அவர்களின் "திருநெல்வேலி நினைவுகள் நூல்" அறிமுகம் books

பேராசிரியர் சௌந்தர மகாதேவன் அவர்களின் "திருநெல்வேலி நினைவுகள் நூல்" அறிமுகம்

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு
பக்கங்கள் 156
விலை 200/-
ஏப்ரல் 2022

சில நூல்களை வாசிக்கும் போது நம்மை அறியாமலேயே அதில் மூழ்கித்திளைப்போம். அப்படி நம்மை அறியாமலேயே நாம் இந்நூலில் மூழ்கி விடுவதோடு மட்டுமின்றி நூலாசிரியர் நம்மை கைப்பிடித்து 80களின் நெல்லையை  சுற்றிக் காண்பித்து நெல்லையின்வட்டாரச் சொற்களோடு கம்பீரமாய் நடக்கிறார்.

சொந்த ஊர் பற்றிய புத்தகம் என்றதுமே பற்றிக்கொள்கிறது ஆர்வம். அப்படி ஒரு ஆர்வத்தோடும் ஊக்கத்தோடும் தன் நினைவுகளை மகிழ்ச்சியோடு நமக்கு காண்பித்தும் மகிழ்கிறார் பேராசிரியர் மகாதேவன் அவர்கள்.

பத்ஹூர் ரப்பானி அவர்கள் திருநெல்வேலி நினைவுகள் புத்தகம் தாமிரபரணியாய் ஓடி மகிழ்ச்சியைத் தருகிறது என்றும் , பேராசிரியர் இந்த அறிவுலகத்திற்கு இதுபோன்ற இன்னும் பல நூல்களை தர வேண்டுமென வாழ்த்துரையில் வாழ்த்தியுள்ளார்.

வண்ணதாசன் ஐயாவின் அணிந்துரையானது  புத்தகத்திற்கு பல வண்ணங்களை தந்துள்ளது.
திருநெல்வேலி நினைவுகள் என்பது ஒரு விரிந்த அர்த்தத்தில் வைக்கப்பட்டிருக்கும் தலைப்பு என்கிறார் வண்ணதாசன்.
மேலும் புத்தகத்தின் அட்டைப்படத்தில் வண்ணதாசன் ஐயாவும் நூலாசிரியர் மகாதேவன் அவர்களும் சிரித்தபடி தத்தம் நினைவுகளை பகிர்ந்து கொண்டதாக தெரிகிறது. பத்தாம் நாள் தசரா மட்டுமல்ல இந்த பத்து நாட்களிலும் எந்த நாட்களிலும் பார்க்க முடிகிற இந்த நினைவுகள் தசரா முடிந்து மறுநாள் காலையில் எல்லா சப்பரங்களும் ராமர் கோவில் திடலில் இருந்திருக்கின்றன. அங்கே நிற்கிறேன். பக்கத்தில் குடை ராட்டினம் சுற்றுபவர்களிடம் தசரா பார்க்க வந்த பையன் அவனுக்குரிய சுற்று முடிந்த பிறகு ராட்டினக் காரரிடம்.. ப்ளீஸ் ப்ளீஸ் இன்னும் ரெண்டு சுத்து சுத்தி விடுங்க இரண்டு இல்லடா ஒரே ஒரு சுற்று சுற்றி விடுங்களேன் என்ற சிறுவன் குரலை பதிவு செய்த வண்ணதாசன ஐயாவின் குரல்
இந்த புத்தகம் முழுவதும் திருநெல்வேலி நினைவுகளை சுமந்த பேராசியர் மகாதேவன் அவர்களுக்கு பெரிய ஊக்கமாக அமைந்துவிட்டது.

நினைவுகள் சுகமானவை என்ற பேராசிரியர் மகாதேவன் அவர்களின் என்னுரை பல நினைவுகளை இந்தப் புத்தகத்தில் கொண்டு சேர்த்ததன் சுருக்கமாகவும் சுகமாகவும் நம் மனதில் பதிகிறது.
என்னுரையின் நிறைவு வரிகள் நான் மிகவும் ரசித்த வரிகள். இதோ அவ்வரிகள்.." எல்லோரும் சொர்க்கம் செல்வதற்காக வாழ்கிறார்கள்.. நெல்லை யர்கள் சொர்க்கத்தில் அல்லவா வாழ்கிறார்கள்"..

40 கட்டுரைகளின் தொகுப்பு..
ஒவ்வொரு கட்டுரையும் அவர் ரசித்து வாழ்ந்த நாட்களையும் தன்னைச் சுற்றி நடந்த செய்திகளையும் அதே சுவை மாறாமல் அதே நயத்தோ
டு சொல்லியிருப்பது இந்தப் புத்தகத்திற்கான வெற்றி என்றே சொல்வேன்.

அவ்வாறு நான் மிகவும் ரசித்த கட்டுரைகள் சிலவற்றைப் பற்றி…

கொட்டு சத்தமும் பாளையங்கோட்டை தசரா சப்பரங்களும்…

இந்தக் கட்டுரையை வாசிக்கும்போது பாளையங்கோட்டை தசராவை கண்முன்னே நிறுத்துகிறார் நூலாசிரியர்.
தசராவிற்காக வேடமணிந்து நேத்திக்கடன் செலுத்த வருபவர்கள் தொடங்கி சவுண்ட் சர்வீஸ் வரை மிகத் தெளிவாக எழுதியுள்ளார். மேலும் சப்பரங்கள் பவனி வரும் தெருக்களின் பெயர் தொடங்கி சப்பரங்கள் ஒன்று சேர இருக்கும் ராமர் கோவில் திடல் வரை நம்மைச் சப்பரங்களோடு கூட்டிச் சென்றுள்ளார்.

காதுகளால் பருகினோம் என்ற கட்டுரையில்

 கோபால்ஜி அவர்களின் மகாபாரத சொற்பொழிவையும், நெல்லை சந்திப்பு ம.தி.தா இந்து மேல்நிலைப் பள்ளியின் கிருபானந்த வாரியார் சுவாமியின் ஆன்மீகச் சொற்பொழிவையும், இளம்பிறை மணிமாறன் அவர்களின் தொடர் சொற்பொழிவுகளை நேரம் தவறாமல் தான் கேட்டு மகிழ்ந்தை இங்கு நினைவாக அசை போட்டுள்ளார் நூலாசிரியர்.

சிக்கிலிங் கிராம ரயில்வே கேட்டும் ஈர மனிதர்களும் என்ற தலைப்பில்

இடம்பெற்ற கட்டுரை என் மனதோடு பேசிக் கொண்டது மட்டும் உண்மை.
நீங்கள் சொன்ன அந்த ரயில்வே கேட்டும் அதன் அருகே உள்ள பள்ளிக்கூட சுவடுகளின் அருகே பிறந்து வளர்ந்த என்னையும் அந்த ஈர மனிதர்களில் சேர்த்துக் கொள்ளலாம் பேராசிரியரே..
அதில் தாங்கள் சொல்லும் மருத மரங்களும் அதனை ஒட்டிய அதல பாதாளமும் அதிலிருந்த வயக்காடுகளும் மலைச் சூழலில் மயில்கள் போடும் ஆட்டத்தையும்
உங்கள் புத்தகத்தின் வழியே  என் நினைவுகள் அசை போட்டு மகிழ்கின்றன.

குறுக்குத்துறை நினைவுகள்

என்ற கட்டுரையின் தொடக்கமே
மிகச் சிறப்பாக அமைத்துள்ளார். 
கோவிலே குளித்துக் கண்டதுண்டா என்ற கேள்வியோடு தொடங்கும் கட்டுரை குறுக்குத்துறை முருகன் கோவிலோடு நம்மை குதூகலமாய் குளிப்பாட்டி மகிழ்கிறது. அக்கோவிலின் அமைப்பு தொடங்கி
கோவிலின் படித்துறைகள்,கோவிலைச் சுற்றிய இயற்கை சூழல் அமைப்புகள் நெல்லை நகரத்திலிருந்து குறுக்குதுறைக்கு வரும் வழியில் உள்ள மரங்கள் என குறுக்குத்துறையின் அழகை கண்முன்னே கொண்டு வந்ததோடு மட்டுமின்றி தான் ரசித்த நிகழ்வுகளையும் அசைபோட்டு மகிழ்கிறார் நூலாசிரியர். வெள்ளம் வரும்போது கோவில் மூழ்க கோவிலின் கோபுர கலசத்தில் நுனி மட்டும் தெரியும்…கோவிலே குளித்ததை  நானும் கண்டதுண்டு.

அருணாச்சலம் பிள்ளையும் சொதி குழம்பும்…

திருநெல்வேலி திருமணப் பாரம்பரியத்தில் மறுவீடு என்றால் காலையில் பலகார பந்தியும் மதியம் சொதிக்குழம்பும் இஞ்சிப் பச்சடியும்
என்பதே. அத்தகைய சொதிக்குழம்பு 
சமைக்கும் சிறந்த சமையல் கலைஞர் அருணாச்சலம் பிள்ளையின் கைவண்ணத்தை தன் எழுத்துக் கைவண்ணத்தால் அவரின் சுவையை அவரின் சுவையாகவே நமக்குத் தந்துள்ளார் நூலாசிரியர்.

"ரஜினி படமும் விஞ்சை விலாஸ் நன்னாரி பால் " 

இந்தக் கட்டுரையில் 80களில் வெளிவந்த ரத்னா தியேட்டரில் வெளியான திரைப்படமான ராகவேந்திரர் திரைப்படத்திற்கான பிரம்மாண்ட கட்டவுட் பற்றியும் அன்றைய சூழலில் நடைபெற்ற விளம்பர உத்திகளையும் பட்டியலிட்டுக் காண்பித்துள்ளார். மேலும் நாயகன் படம் பற்றியும் இக்கட்டுரையில் நிறைவாகச் சொல்லியுள்ளார். அதிலும் ரத்னா தியேட்டர் அருகே உள்ள விஞ்சை விலாஸ் உணவகத்தின் சுவையை மேலும் மெருகூட்டும் விதமாக உணவகத்தின் சுவையையும் , அங்கு பரிமாறப்படும் நன்னாரி பாலையும் சுவையோடு பகிர்ந்துள்ளார்.

பாரதி புதுமைப்பித்தன் வ.உ.சி பயின்ற பள்ளியான ம.தி.தா இந்து மேல்நிலைப்பள்ளியை பல இடங்களில் மேற்கோளிட்டு காட்டியுள்ள நூலாசிரியர், பாரதியார் பயின்ற வகுப்பறை என்ற தலைப்பில் ஓர் இனிய கட்டுரையையும் இப்புத்தகத்தில் எழுதிச் சிறப்பித்துள்ளார். அதே வகுப்பறையில் அடியேனும் படித்துள்ளேன் என்ற மகிழ்ச்சியை அந்தக் கட்டுரையை வாசிக்கும் போது நான் உணர்கிறேன். மேலும்  தங்களின் இலக்கிய சுவாசம், ஆம் வாசமாய் எனக்கும் புலப்படுகிறது. அங்கு ஆண்டுதோறும் நீங்கள் பாரதியின் பிறந்தநாளுக்கு தவறாமல் சென்று வருவதும், அதில் நீங்கள் மகிழ்ந்து திளைப்பதும் உங்களுக்கான பெரிய வரம்.

நெல்லை வாழ் மனிதர்களையும் நெல்லை சூழ் வளங்களையும்
80களின் நெல்லையையும்
படம் பிடித்துக் காட்டும் பேராசிரியர் மகாதேவன் அவர்களின் திருநெல்வேலி நினைவுகள்
நூலின் சுவையை நான் உணர்ந்துவிட்டேன். நீங்கள் உணர வேண்டாமா? 

நூலின் சுவை உணர..அறிய..
பேரா.சௌந்தர மகாதேவன்
9952140275
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
திரு.மகேந்திரன்
 9487655033

பகிர்வின் மகிழ்வில்
ம.சக்திவேலாயுதம் நெருப்பு விழிகள்
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

தரம் மற்றும் பாதுகாப்பிற்காக நீங்கள் செல்ல வேண்டிய செயலி BIS

தரம் மற்றும் பாதுகாப்பிற்காக நீங்கள் செல்ல வேண்டிய செயலி 8 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்கள் மற்றும் வளர்ச்சி. நீங்கள் பதிவிறக்கம் செய்...