மொத்தப் பக்கக்காட்சிகள்

உன் வாழ்க்கைக்கு நீயே பொறுப்பு! - ராம்குமார் சிங்காரம்

உன் வாழ்க்கைக்கு நீயே பொறுப்பு! - ராம்குமார் சிங்காரம்

ஆங்கிலத்தில் ஒரு கேள்வி உண்டு. 'ஆர் யூ யேர்ன் ஃபார் யுவர் பிரட்?' (Are you earn for your bread?)

அதாவது, 'உங்கள் அடிப்படைத் தேவைகளுக்கும், குடும்பத்தைப் பராமரிக்கும் அளவுக்கும் நீங்கள் தன்னிறைவு பெற்றுள்ளீர்களா…? கடன் வாங்காமல் காலத்தை ஓட்டும் அளவுக்கு இருக்கிறீர்களா..?' என்பதே இதன் அர்த்தம்.

பொதுவாக 21 வயது வரை ஒரு நபரைப் பராமரிக்கும் பொறுப்பு பெற்றோருக்கு உண்டு. கல்வி, நல்ல சாப்பாடு, வாழ்க்கையின் அடிப்படையைத் கற்றுக் கொடுத்து, சிறப்பான வேலையில் அமர வைப்பது வரை இந்தியப் பெற்றோரின் கடமையாக இருக்கிறது.

ஆனால், இன்றைய காலகட்டத்தில், "மேலே படிக்கிறேன்… அதுக்கும் மேலே படிக்கிறேன்…" என்று அப்பாவின் அக்கவுண்ட் டிரான்ஸ்ஃபரை எதிர்பார்த்துக் காத்திருப்போர் ஒரு பக்கம்…

"25 வயசுதான் ஆகுது. வேலைக்கு ட்ரை பண்ணிட்டிருக்கேன். நம்ம லெவலுக்கான வேலை கிடைக்கலை பாஸ்!" என்று சுற்றும் வி.ஐ.பி. மகன்கள் இன்னொரு பக்கம்.

இதுவாவது பரவாயில்லை. 37 வயதுக்காரர் ஒருவர் சும்மா இருப்பதாகச் சொன்னார். திகைப்போடு, "ஏன் வேலைக்கு போகலை?" என்று கேட்டால், "4 வேலைக்குப் போனேன். எதுவுமே செட்டாகலை…" என்று சொன்னார்.
"சாப்பாட்டுக்கு என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்டால், "அப்பா பணம் அனுப்பிட்டிருக்கார்!" என்றார். "அடப்பாவி அப்பா!" என்றிருந்தது.

'பிள்ளைகளை செல்லம் கொடுத்து கொடுத்து குட்டிச் சுவராக்கியிருக்கிறோம். உருப்படவிடாமல் பண்ணி இருக்கிறோம்' என்பது அந்த அப்பாவுக்கு என்றைக்குத் தெரிகிறதோ, அன்றைக்குத் தான் மிஸ்டர் 37 ஓட ஆரம்பிப்பார்.

வெளிநாடுகளில் எல்லாம் இப்படி கிடையாது. உன் வாழ்க்கைக்கு நீதான் பொறுப்பு என்று விட்டு விடுவார்கள். ஒட்டகச் சிவிங்கி என்ன செய்யும் தெரியுமா?

கஷ்டப்பட்டு பெற்றுச் சுமந்த குட்டியை, பூமியில் இறக்கி வைத்ததுமே, பாசமாக ஒரு முறை நக்கிவிட்டு, ஓங்கி ஒரு உதை விடுமாம். அம்மாவின் உதை தாளாமல் குட்டி எழுந்து நிற்கும். இன்னொரு உதை… நாலடி எடுத்து வைத்து நகர ஆரம்பிக்கும்.

பெற்ற தாய்க்கு பிள்ளையை அடிக்கக் கூடாது என்று தெரியாதா..? தெரியும். அப்படிச் செய்யாவிட்டால், குட்டி ஓடக் கற்றுக் கொள்ளாமல் எதிரிகளிடம் சிக்கி இரையாகிப் போகும். அந்தப் புரிதல் பெற்றோருக்கும் வேண்டும்.

'தங்கமே, உன்னைத் தான்… என்று தாங்கிப் பிடித்துக் கொண்டே இருந்தால், குழந்தை வளராது. கையிலேயே வைத்திருந்தால், பச்சைக் குழந்தை கக்கா கூட போகாது என்பது பல பெற்றோருக்குத் தெரிவதில்லை.

தவறுகளைத் தட்டிக் கேட்காமல் வளர்த்தால், தறுதலையாக மாறிவிடும் என்பது தெரிந்தும் அப்படியே விடும் பெற்றோர்தான் அந்தக் குழந்தையின் முதல் கோணலுக்குப் பாதை போடுபவர்கள்.

சிறுவயதில் இருந்தே தனியாக உலகை எதிர்கொள்ளக் கற்றுக் கொடுக்க வேண்டும். பத்து வயதுக் குழந்தையிடமும் மழலையில் பேசிக் கொஞ்சிக் கொண்டிருந்தால், அவன் வாங்கும் ரேங்க் கார்டை பிரேம் போட்டு மாட்ட முடியாது.

மூன்று வயது தாண்டும்போதே, பெரிய மனிதர்களிடம் பழகுவது போல் பேசிப் பழக வேண்டும். குழந்தைகளுக்கு நாமே ரோல் மாடல். எனவே, நமது செயல்களைப் பார்த்து அவர்களைப் பழக்க வேண்டும்.

செய்யும் வேலையிலும், பணம் சம்பாதிப்பதிலும், அதைச் சேமிப்பதிலும், எதிர்காலத்துக்கு தக்க ஏற்பாடுகள் செய்வதிலும். காசின் அருமை தெரியும்படி அவர்களைப் பழக்க வேண்டும்.

இந்த வேலையை இந்த நேரத்துக்குள் முடித்தால், உனக்கு ரூ.5 வழங்கப்படும் என்று சொல்லிப் பாருங்கள். அது, அவர்களது ரூமைக் க்ளீன் செய்யும் வேலையாகக் கூட இருக்கலாம்.

துடிப்பாகச் செய்து அந்த 5 ரூபாயைக் கையில் வாங்கும் குழந்தையின் கண்களில் ஒரு ஒளியும், பெருமையும், கம்பீரமும் தெரிவதைக் கவனியுங்கள்.
காரணம், அது அவன் சம்பாதித்த காசு. அதன் முழு உரிமையும் அவனுக்கே உண்டு. அதை எப்படிப் பார்த்துப் பார்த்து செலவு செய்கிறான் என்பதை எட்ட நின்று பாருங்கள். குழந்தையின் பெருமை, உங்களுக்கும் ஒட்டிக் கொள்ளும்.

இப்படி வளரும் குழந்தை, எட்டாவது படிக்கும்போதே. முழு ஆண்டு லீவில், பார்ட் டைம் வேலை செய்து, அடுத்த ஆண்டு புத்தகச் செலவை அவனே பார்த்துக் கொள்ளும் அளவுக்கு வளர்த்து விடும்.

டிகிரி படிக்கும்போதே, எந்தெந்த நிறுவனங்கள் சிறப்பானவை… எதை நோக்கி நமது இலக்கு என்று திட்டம் தீட்ட வைக்கும்.

படிக்கும்போதே, கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகி கல்லூரி விடுமுறைக்கு முன்பே வேலைக்குச் செல்ல பைக் வாங்கி விடுவான்.

திட்டமிடலைக் கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டியதில்லை.
எப்போதுமே நாம் ஒரு கோடு போட்டால், குழந்தைகள் பைபாஸ் ரோடே போட்டு விடும் திறமைசாலிகள். நாம் தான் அவர்களைக் கொஞ்சிக் கொண்டும்.
பத்தாவது படிக்கும் காலம் வரை சாதம் ஊட்டிக் கொண்டும் இருக்கிறோம். இதன் விளைவு, முப்பது வயது தாண்டியும் பணம் அனுப்பிக் கொண்டிருப்போம்.

யாராவது ஒருவர். "உனக்குத் தேவையானதை சம்பாதிக்கும் அளவுக்கு நீ இருக்கிறாயா.? என்று கேட்டால், புரியலை…!" என்பார். அல்லது, "கடவுள் புண்ணியத்தில் பெற்றோர் பணம் அனுப்புகிறார்கள்!" என்று பதில் சொல்வார்.

காலம் முழுக்கக் கொஞ்சித் தள்ளிவிட்டு, திடீரென சொந்தக் காலில் நில் என்றால், அது, ஆணோ, பெண்ணோ… எதுவாயினும், குழந்தை திகைத்துத் தான் நிற்கும். பெற்றோரை வெறுக்கும். எதிரியாகப் பார்க்கும்.

"இத்தனை நாள் சோறு போட்டீங்க… திடீர்னு வேலைக்குப் போன்னு சொன்னா எப்படி..?" என்று எதிர்க் ஷகேள்வி கேட்கும், மிஸ்டர் 37 போல, 'எந்த வேலையையும் ஆகாமல்' சுகமாக பொழுது போக்குவார்கள் அல்லது ஏதாவது கெட்ட பழக்கத்துக்கு அடிமையாவார்கள்.

இளைஞர்களுக்கு வாழ்க்கையில் இருக்கக் கூடிய ஒரே சவால் சம்பாதிப்பது மட்டும்தான். அதையும் அவர்கள் சரியாக செய்யவில்லை என்றால். திருமணமாகி பல அவமானங்களைச் சந்திக்க நேரிடும்.
எதிர்கால சந்ததியும் கெட்டு அழியும். அப்பாவைப் போல மகனும், சும்மா இருப்பதே சுகம் என்று துணைக்கு உட்காரத் துடிப்பான்.
சின்னச் சின்ன வேலைகளில் கவனம் செலுத்தும் 1990 கிட்ஸ்களின் மனோபாவம் இன்றைய தலைமுறையிடம் இல்லை. நம் அப்பா காலத்தில் எலெக்ட்ரிக் டூல் பாக்ஸ் என்று அட்டைப் பெட்டி இருக்கும்.
வீடு மாறும்போது ஃபேன் மாட்டுவது, டியூப் லைட் எரியவில்லை என்றால், சோக் போனதா ஸ்டார்ட்டர் சரியில்லையா, அல்லது, பல்ப் ஃப்யூஸ் போய் விட்டதா.? என்று, தானே சரி செய்வார் அப்பா.

இன்றைக்கு, இருட்டில் உட்கார்ந்து கொண்டு, எந்த ஆப் மூலம் இதற்குத் தீர்வு கிடைக்கும். ஆன்லைன் மூலம் எலெக்ட்ரிஷியனை வர வைப்பது எப்படி..? என்று பணத்தின் அருமை தெரியாமல் வளர்ந்திருக்கிறார்கள். இளைஞர்கள்.

நீங்கள் திரும்பத் திரும்ப புரிந்து கொள்ள வேண்டியது, 'என் வாழ்க்கைக்கு நானே பொறுப்பு. என் சம்பாத்தியத்திற்கு நானே பொறுப்பு. நான் இன்னொருவரைச் சார்ந்து இருந்தால், திருமணம் செய்வதற்கே தகுதியில்லாதவன், பிள்ளைகள் பெற உரிமை இல்லாதவன்!' என்று பிள்ளைகள் புரிந்து கொள்ளும்படி வளர்க்க வேண்டும்.

பிள்ளையை உதவாக்கரையாக வளர்த்துவிட்டு, 'ஒரு கால்கட்டு போட்டா சரியாகி விடும்! என்பதெல்லாம் மூட நம்பிக்கை. வருவதும் இதே போன்று இருந்துவிட்டால்..? குடும்பமே கோவிந்தா தான்.

தன் சொந்த செலவுகளுக்காக சம்பாதிக்க முடியாத ஒருவன் இன்னொருவரை வைத்துக் காப்பாற்றுவார் என்பதெல்லாம், தூக்கத்திலும் வந்துவிடக் கூடாத கெட்ட கனவு.

பையன் ஆசைப்பட்டாலும், அது தவறு என்று கூறி அவனுக்கு புத்தி சொல்லி வேலை வாய்ப்பை வாங்கித் தருவது தான் பெற்றோருடைய கடமை.
ஒவ்வொரு மனிதனும் 21 வயதுக்கு மேல் தன்னுடைய உணவுக்கு தான்தான் சம்பாதிக்க வேண்டும். அடுத்தவரை சார்ந்து இருப்பது ஒரு கோழைத்தன வாழ்க்கை, வாழ்க்கைக்கு நானே பொறுப்பு.

நானே சம்பாதிப்பேன். நானே வாழ்ந்து காட்டுவேன்!! என்பதுதான் சரியான ஆண்மை. ஒட்டகச் சிவிங்கி தரும் பாடமும் அதுதான்.

– ராம்குமார் சிங்காரம் எழுதிய 'நீங்கள் இன்னும் ஏன் கோடீஸ்வரர் ஆகவில்லை' என்ற நூலிலிருந்து ஒரு பகுதி!

🙏🙏🙏
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

தரம் மற்றும் பாதுகாப்பிற்காக நீங்கள் செல்ல வேண்டிய செயலி BIS

தரம் மற்றும் பாதுகாப்பிற்காக நீங்கள் செல்ல வேண்டிய செயலி 8 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்கள் மற்றும் வளர்ச்சி. நீங்கள் பதிவிறக்கம் செய்...