ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் ரூ.5 லட்சம் தருவோம்!'-மோசடி செய்த நிதி நிறுவனம்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்த ஹேமலதா உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தனர். அதில், ‘திருச்சி மாவட்டம் மணிகண்டம் பகுதியில் ஸ்பேரோ குளோபல் டிரேடிங் என்கிற தனியார் நிதி நிறுவனம் ரியல் எஸ்டேட் தொழில் மூலமாக 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 18 மாதங்களில் ரூ 5 லட்சம் தருவதாகக் கூறி ஆட்களை இணைத்துள்ளனர்.
இதனை நம்பி சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, காளையார்கோவில், காரைக்குடி மற்றும் திருச்சி உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் ரூ.12. 45 முதலீடு செய்துள்ளனர்..
ஒன்றரை ஆண்டு முடிந்த நிலையில் முதிர்வுத்தொகையை எடுக்க, நிறுவனம் சார்பில் கொடுக்கப்பட்ட காசோலை (செக்) வங்கியில் கொடுத்துள்ளனர். ஆனால், வங்கியில் பணமில்லை எனத் திரும்பி வந்தது. நிதி நிறுவனத்தின் நிர்வாகிகளிடம் சம்மந்தப்பட்டவர்கள் கேட்டிருக்கிறார்கள். அந்த நிதி நிறுவனத்தின் நிர்வாகிகள் தரக்குறைவாகப் பேசியதோடு அவர்களை மிரட்டியிருக்கிறார்கள்.
திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் பல பெயர்களில் நிறுவனம் நடத்தி ரூ.100 கோடி வரை மோசடி செய்திருக்க கூடும்.
பொதுமக்களின் புகாரின் அடிப்படையில் எஸ்.பி செந்தில்குமார் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி மோசடியில் ஈடுபட்டதாகத் திருச்சி சாகுல்ஹமீது, சாஷீரா பேகம், பாபு, அறிவுமணி, சத்தியா உள்ளிட்ட 14 பேரைக் கைது செய்துள்ளனர்..