மொத்தப் பக்கக்காட்சிகள்

ஜி.டி ஹாலிடேஸ் கார்த்திக் எம் மணிகண்டன் ரூ. 100 கோடி ஜெயித்த கதை..!

 

ஜி.டி ஹாலிடேஸ் கார்த்திக் எம் மணிகண்டன்

ரூ. 100 கோடி ஜெயித்த கதை..!

 

சுற்றுலா மற்றும் பயண ஏற்பாட்டு நிறுவனமான ஜி.டி ஹாலிடேஸ்-ன் நிறுவனர்  திரு. கார்த்திக் எம் மணிகண்டன் மிகுந்த உற்சாகத்துடன் பேச ஆரம்பித்தார்.

ஜி.டி ஹாலிடேஸ்-ன் நிறுவனர்
திரு.கார்த்திக் எம் மணிகண்டன்

‘’டாக்சி  டிரைவர்  ஆக இருந்த என் தாத்தா 1968 - ஆம் ஆண்டு கன்னியாகுமரியில் 6 அறைகள் கொண்ட சிறிய ஹோட்டல் ஒன்றை தொடங்கினார்.  ஒரு காலத்தில் கன்னியாகுமரி அதிகம் பேர் வராத ஒரு சாதாரண இடமாக இருந்தது. மத்திய அரசு 1965-ஆம் ஆண்டு வாக்கில்  என்.டி.ஏ என்கிற சுற்றுலாப் பயண விடுப்பு சலுகையை அறிவித்தது. இதனை யடுத்து  தான் அவர் இந்த ஹோட்டலைக் கட்டி உள்ளார்.  சுற்றுலா சலுகையை பயன்படுத்த பலரும் கன்னியாகுமரியை சுற்றி பார்க்க வந்தனர். அவர்கள் இந்த அறைகளை பயன்படுத்திக் கொண்டார்கள். அப்போது தாத்தாவுக்கு கிட்டத்தட்ட 35 வயதிருக்கும். அவர் சுமார் ஒரு லட்சம் ரூபாய்  செலவில் அந்த ஹோட்டலை கட்டினார். அந்த வகையில் சுற்றுலாவுக்கும் எங்கள் குடும்பத்துக்கும். கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு மேல் தொடர்பு இருக்கிறது.” என்றவர் தான் எப்படி இந்தத் துறைக்கு வந்தேன் என்பதை விரிவாக சொல்லத் தொடங்கினார். 

 

வா மச்சான் ஐ.வி போகலாம்

 


‘’நான் கோவையில் உள்ள பி.எஸ்.ஜி கல்லூரியில் பொறியியல் படித்துக் கொண்டிருந்த போது, இரண்டாம் ஆண்டில் கல்லூரியில் இண்டுஸ்டிரியல் விசிட் (ஐ.வி) என்கிற தொழில் சுற்றுலாவுக்கு என் வகுப்பு மாணவர்களை அழைத்துச் செல்லும் பொறுப்பு எனக்கு வந்தது.  அப்போது என் வயது 21 . எனக்கு எப்போதும் ஓர் ஆசை விடுமுறை வந்தால், சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமை வந்தால் கொண்டாட்டம் தான். ஊர்சுற்ற கிளம்பி விடுவேன். அந்தப் பயண அனுபவங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வேன். அவர்கள் தங்களுக்கும் அந்தப் பயணத்தை மேற்கொள்ளபுக்கிங்’ செய்ய  என்னை கேட்பார்கள்.  நான் அதனை செய்ய ஆரம்பித்தேன்.  கூடவே என் கல்லூரியில் உள்ள இதர மாணவர்களுக்கும் ஐ.வி சென்று வர  ஏற்பாடு செய்தேன். என் கல்லூரியை பொறுத்தவரை  எனக்கு நல்ல ஆதரவு கொடுத்தார்கள்.  அவர்கள்நீ வகுப்புக்கு மட்டும்  மட்டம் போட்டு விடாதே. மற்றபடி சிறப்பாக செய்’ என்றார்கள்.  என் முதல் அலுவலகம் கல்லூரி விடுதி அறைதான்.  அப்போது,  ‘வா மச்சான் ஐ.வி போகலாம்’ என்கிற ஹேஸ்டேக் உடன் இதற்கு ஏற்பாடு செய்தேன். இந்த வார்த்தை கோவை முழுக்க  வைரலானது. கோவையில் உள்ள  இதர  கல்லூரி மாணவர்களும் ஐ.வி செல்ல ஏற்பாடு செய்தோம். இந்தத் தொழிலில் இதற்கென இருப்பவர்களை விட நாங்கள் சிறப்பாக செய்ததால்,  400- க்கும் மேற்பட்ட ஐ.விக்களை ஏற்பாடு செய்ய முடிந்தது.

 

தொழிலாளியா? முதலாளியா?

 


பட்டம் பெற்றாகிவிட்டது.  எனக்கு கேம்பஸ் இன்டர்வியூ மூலம் டி.சி.எஸ் நிறுவனத்தில் வேலையும் கிடைத்தது. ஐ.டி. கம்பெனியில் காலை 9 மணிக்கு போனால் இரவு 8 மணி வரை வேலை.  கம்ப்யூட்டர் மட்டுமே உலகம். இந்த வேலை எனக்கு மிகவும் போர் அடித்தது .  28 நாள் வேலை பார்த்துவிட்டு சம்பளம் கூட வாங்காமல் வந்து விட்டேன். காரணம், நான் அந்த வேலையில் என் மனதை செலுத்தவில்லை. அதனை விரும்பி செய்யவில்லை என்பதால் சம்பளம் வாங்க விரும்பவில்லை.  அப்போது என் முன், ஏற்கனவே செய்து வந்த  சுற்றுலா வேலை, சிங்கப்பூரில்  சுற்றுலா தொடர்பான. மூன்று  ஆண்டு படிப்பு..!

மூன்றாண்டுகள் படித்து விட்டு வந்தால் பழைய தொடர்புகள் எப்படி இருக்கும் என சிந்திக்க ஆரம்பித்தேன். விளைவு, ஜி.டி ஹாலிடேஸ்  என்கிற நிறுவனத்தை (www.gtholidays.in)  ஆரம்பித்தேன். முதலில் ஐ.விக்கு மட்டும்தான்  ஏற்பாடு செய்தோம். தாமஸ் கூக், காக்ஸ் அண்ட் கிங்ஸ் போன்ற முன்னணி நிறுவனங்கள் என்ன செய்கிறார்கள் என்று ஆராய்ந்தேன். அவர்கள் கார்ப்பரேட்  டூர் நடத்தினார்கள். அதேபோல் நாமும் ஏன் செய்யக்கூடாது என்று களம் இறங்கினோம்.  பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள்,  சிறிய சுற்றுலா நிறுவனங்களை  நம்பவில்லை. நான் பெரிய நிறுவனங்களுக்கு 10 வாய்ப்பு கொடுத்தால் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களிடம் கேட்டேன். கிட்டத்தட்ட பல மாதங்களாக சளைக்காமல் கோவையில் உள்ள அனைத்து பெரிய நிறுவனங்களுக்கும் நேரில் சென்று ஒரு வாய்ப்பு கேட்டேன். ஆனால், யாரும் நெகட்டிவாக பேசவில்லை. சூழ்நிலை வரும்போது உங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கிறோம் என்றார்கள்’

என்றவர் சற்று நிறுத்தி அவரின் வெற்றிக் கதையை தொடர்ந்தார்.

 

முதல் சுற்றுலா ஏற்பாடு..!

 


‘’ ஆறு மாதம் கழித்து ஒரு  வாய்ப்பு கிடைத்தது.  அப்போது எனக்கு வயது 24.  கணபதி என்ஜினியரிங் மேனுஃபாக்சரிங் என்கிற நிறுவனம் அதன் 50 டீலர்களுக்கு கிட்டத்தட்ட பத்து வருடம் கழித்து,டீலர் மீட்- ஐ  நடத்தி கொடுக்க சொல்லியது. அந்த நிகழச்சியை நீலகிரி மாவட்டத்திலுள்ள மசினகுடி, என்கிற மலைவாழ் பழங்குடி கிராமத்தில் நடத்த கேட்டுக்கொண்டது. இந்த ஊர் வழியாக தான் யானைகள் கூட்டம் கூட்டமாக நடந்து செல்லும்.  சேலம், ஈரோடு, கோவையிலிருந்து டீலர்களை வர மசினகுடிக்கு வர  வைத்தோம்.  நாங்கள் நண்பர்கள்  5  பேர் கொண்ட குழு 50 டீலர்ளை சிறப்பாக கவனித்துக் கொண்டது.  பல தடவைகள் வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டு வந்திருந்தவர்கள் கூட நாங்கள் மிக சிறப்பாக இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருப்பதாக பாராட்டினார்கள். கல்யாண வீடு மாதிரி உபசரிப்பு, விருந்து எல்லாம் இருப்பதாக பாராட்டினார்கள்.  இந்த நிகழ்ச்சி ஏற்பாடு மூலம் மூவாயிரம் ரூபாய்தான் லாபம் கிடைத்தது. ஆனால். அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்த டீலர்கள் அனைவரும் எங்களின் பிராண்ட் அம்பாசிடராக மாறி எங்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை பெற்றுத் தந்தார்கள். அடுத்து இரண்டு மூன்று ஆண்டுகளில் ஹேவல்ஸ், இந்தியா சிமெண்ட் என நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தோம்.” என்றவரிடம் ‘இன்றைக்கு உங்களின் நிலை எப்படி இருக்கிறது? என்று கேட்டோம்.

 


‘’ இப்போது கன்னியாகுமரி, நாகர்கோவில், சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட சுமார் 20 இடங்களில் எங்களுக்கு ஹோட்டல்கள் இருக்கின்றன . 200- க்கும் மேற்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சுற்றுலா ஏற்பாடு செய்து கொடுத்து வருகிறோம். இப்போது 90 கோடி ரூபாய்க்கு டேர்ன் ஓவர் செய்து வருகிறோம் . இப்போது என் வயது 32 விரைவில் 100 கோடி ரூபாய்  என்ற இலக்கை  நிர்ணயித்துள்ளோம். கோவிட் காலத்தில் சுற்றுலாவுக்கான தேவை இல்லாமல் இருந்தது . ஆனால், இப்போது தேவை முன்னைவிட மிகவும் அதிகரித்துவிட்டது.  கோவிட் பாதிப்பிலிருந்து கிட்டத்தட்ட 50 சதத்திற்கும் மேல் மீண்டிருக்கிறோம். கோவிட் முடக்க காலத்தில் நாங்கள் யாரையும் பணி நீக்கம் செய்யவில்லை என்பதால் எங்களின் முந்திய டீம் அப்படியே இருக்கிறது.  இப்போது முன்னைவிட வேகமாக செயல்பட தொடங்கி இருக்கிறோம். ஐந்து பேராக ஆரம்பித்த நாங்கள் இப்போது ஐம்பது பேராக இருக்கிறோம். நாங்கள் அதிக எண்ணிக்கையில் சுற்றுலா திட்டங்களை நடத்துவதால் நடுத்தர மக்களுக்கு நியாயமான கட்டணத்தில் இனிமையான சுற்றுலா அனுபவங்களை கொடுக்க முடிகிறது. மற்றவர்கள்  50,000 ரூபாய்க்கு கொடுக்கும் சுற்றுலாவை நாங்கள் 40,00 ரூபாய்க்கு கொடுக்கிறோம். காரணம் அதிக திட்டங்கள் என்பதால் குறைவான லாப வரம்பு இருந்தாலே எங்களுக்கு நல்ல லாபம் இருக்கிறது.  பெரிய நிறுவனங்களை விட எங்களுடைய கட்டணம் சுமார் 30% குறைவு என்பதால் எங்களை தேடி வருகிறார்கள்.

 கோவீட்டுக்கு பிறகு சுற்றுலா செலவு மிகவும் குறைந்து இருக்கிறது . ஒரு லட்சத்துக்கு சென்ற சுற்றுலாவை ரூ 70,000-க்கு கூட போக முடியும் . தற்போது துபாய், மாலத்தீவு, எகிப்து ஆகிய இடங்களில் தான் சுற்றுலா பயண இடங்கள் திறக்கப்பட்டிருக்கிறது . விரைவில் மற்ற இடங்களும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதிக்கப்பட்டால் இந்தத் துறை வேகமான வளர்ச்சியை காணும் கூடவே நாங்களும் அடுத்த கட்ட வளர்ச்சி அடைவோம்”  என்று மிகுந்த  நம்பிக்கையோடு நிறைவு செய்தார்.

 

 

சுற்றுலா இனிக்க…!

 


‘’எங்களின் சுற்றுலாவில்பர்சனல் டச்’ என்கிற விஷயம் இருக்கும். உதாரணத்திற்கு நம் தமிழர்கள் எங்கு சென்றாலும் இரவு சாப்பாட்டில் கொஞ்சம் ரசம்  இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறார்கள்.  அவர்களுக்காக நாங்கள் ரசப்பொடி எடுத்துச் சொல்கிறோம் மேலும் அப்பளம் , ஊறுகாய் போன்றவற்றையும் எடுத்துச் செல்கிறோம். இதேபோல் இதர மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை அறிந்து அதற்கு ஏற்ப உணவுக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். மனதுக்கு பிடித்த சாப்பாடு இருந்தால்தான் சுற்றுலா இனிக்கும்.” என்றார் கார்த்திக் எம் மணிகண்டன்.

 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அனைத்து நிதித் தேவைகளுக்கும் ஏற்ற மியூச்சுவல் ஃபண்டுகள் Mutual Fund

நாணயம் விகடன் & மிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து `இலக்கு அடிப்படையிலான மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு' என்ற நிகழ்ச்சியை வேலூரில...