பிள்ளைகளிடம் புத்தக வாசிப்பை மேம்படுத்த 18 எளிய வழிகள்.
எழுத்தாளர் உதயசங்கர்
1. வீட்டில் குழந்தைகள் / பிள்ளைகள் கண்ணில் படுகிற மாதிரி புத்தகங்கள் கிடக்க வேண்டும்.
2. அம்மா / அப்பா தினம் குறைந்தது 1 மணி நேரமாவது குழந்தைகளின் முன்னால் வாசிக்க வேண்டும்.
3. குழந்தைகளிடம் உரையாடிக்கொண்டே வாசிப்பது மிக நல்லது.
4. புத்தகங்களை வாசித்துக்கொண்டே குழந்தைகளுக்குக் கதை சொல்ல வேண்டும்.
5. கதை சொல்லும்போது புத்தகத்தை அடிக்கடி பார்த்து கதை சொல்லவேண்டும்.
6. அப்படிக் கதை சொல்லிக்கொண்டிருக்கும்போது இடையில் விரித்து வைத்த புத்தகத்தை அப்படியே குழந்தையிடம் விட்டு விட்டு எழுந்து சென்று கவனிக்க வேண்டும்.
குழந்தை அந்தப் புத்தகத்தைக் கையில் எடுக்கிறதா இல்லையா என்று கவனிக்க வேண்டும்.
7. குழந்தைகள் புத்தகங்களில் கிறுக்கினாலோ கிழித்தாலோ திட்ட / மிரட்ட கூடாது.
8. குழந்தைகளை மடியில் வைத்துக்கொண்டு கதை சொல்ல வேண்டும்.
9. குழந்தைகளுக்குக் கதை சொல்லும்போது ஏனோ தானோ என்றோ தாங்கள் சின்ன வயதில் கேட்ட கதைகளையோ சொல்லாமல் நாமும் அதில் ஒன்றி குழந்தைகளின் கண்களைப் பார்த்துக்கொண்டு அபிநயம் பிடித்து சொல்ல வேண்டும்.
10. இவை எல்லாவற்றுக்கும் முதலில் குழந்தைகளுக்கான புத்தகங்களை வாங்கி முதலில் அம்மாவும் அப்பாவும் வாசித்து விடுவது நல்லது.
குழந்தைகள் முன்னால் எழுத்துக்கூட்டி வாசிக்கக்கூடாது.
11. குழந்தைகள் தமிழ் புத்தகங்களை வாசிப்பதன் மூலம் தமிழ் மொழி, தமிழினம், பாதுகாக்கப்படுகிறது என்ற உணர்வு பெற்றோர்களுக்கு வேண்டும்.
12. எனக்கு என்னுடைய அம்மா தான் வாசிப்பின் ருசியை ஊட்டிவிட்டவர்.
வீட்டில் வாங்கிய வணிகப் பத்திரிகைகள்/ முதலீட்டுப் பத்திரிக்கைளின் வழியாக வாசிப்பை மேம்படுத்திக்கொண்டேன்.
13. பள்ளியில் இருந்த நூலக வகுப்பு, நீதி போதனை வகுப்பு, அதில் கிடைத்த உண்மையான குழந்தைக் கதைகள் என்னிடம் வாசிப்பிற்கான தேடலை உருவாக்கியது.
14. என்னுடைய நண்பர்கள் புத்தகங்களை வாசிக்கிற, நூலகத்துக்கு செல்கிற நண்பர்கள். அவர்களுடனான உரையாடல் சிறுவயதிலேயே வாசிப்பதற்கும், எனக்கென்று புத்தகங்களை வாங்க வைத்தது.
15. விளையாட்டு சாமான்களை தயக்கமில்லாமல் வாங்கிக்கொடுப்பதைப் போல புத்தகங்களை வாங்கிக்கொடுக்கவும் அந்தப் புத்தகங்களை வைத்துக்கொள்ள வீட்டிலுள்ள அல்மாரியில் சிறு இடம் ஒதுக்கிக்கொடுக்கவும் வேண்டும்.
16. எக்காரணம் கொண்டும் புத்தகங்களை முன் வைத்து குழந்தைகளிடம் சிறு முகம் சுளிப்பைக்கூட காட்டக்கூடாது.
17. தினமும் குழந்தைகளுக்குக் கதை சொல்லுங்கள்.
குழந்தைகளுக்கு அப்படியொரு அருமையானவர்களாகி ஆகிவிடுவீர்கள்.
18. கதைகள் அத்தனை வலிமையானவை. மனிதமனதை மயக்கிவிடும் மாயம் கொண்டவை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக