மொத்தப் பக்கக்காட்சிகள்

தாய்மொழியில் படித்தால் புதிய பொருட்களை தயாரிக்கலாம்: ஜோகோ ஸ்ரீதர் வேம்பு

  தாய்மொழியில் படித்தால் புதிய பொருட்களை தயாரிக்கலாம்: ஜோகோ ஸ்ரீதர் வேம்பு பேச்சு


தாய்மொழியில் படித்தால் புதிய பொருட்களை தயாரிக்கலாம்: டை சென்னை நடத்திய டைகான் சென்னை 2020’ நிகழ்ச்சியில் ஜோகோ கார்ப்பரேஷன் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு பேச்சு




·         ஆங்கிலம் தெரியாதவர்கள்கூட சாப்ட்வேர் எழுதலாம்


·         தாய் மொழியை தவிர்த்து பிற மொழியை தத்தெடுத்த எந்த நாடும் வளராது


·         கடுமையான பாடத்திட்டங்கள் மாணவர்களுக்கு அவசியமில்லை


·         வாழ்க்கையில் தன்னம்பிக்கை இருந்தால் வெற்றி பெறலாம்




டை சென்னை அமைப்பு   அதன் பிரபல வருடாந்திர தொழில்முனைவுக்கான மாநாடான டைகான் சென்னை நிகழ்வை 2020ம் ஆண்டில் மெய்நிகர் முறையில் நடத்திக்கொண்டு வருகிறது.  இதில் 3-வது நாள் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘நில்லு, அப்புறம் சொல்லு’ என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் ஜோகோ கார்ப்பரேஷன் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான ஸ்ரீதர் வேம்பு மற்றும் சின்ப்ரோசாப்ட் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான பத்ரி சேஷாத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர். 


 


‘சொல் ஒன்று செயல் ஒன்று என்று இல்லாமல்;  சொல்லும் செயலும் ஒன்று’ என்று வாழ்ந்து காட்டி வரும் ஸ்ரீதர் வேம்பு தமிழ்நாட்டில் கிராமங்களில் படிக்கும் மாணவர்களின் திறமையைப் பற்றியும் சிறிய நகரத்தில் இருந்து உலகம் போற்றும் பெரிய நிறுவனத்தை உருவாக்கியது பற்றியும் பகிர்ந்து கொண்டார்


 


1996-ல் சென்னை புறநகரில் ஒரு சிறிய இடத்தில் இவர் தொடங்கிய ஜோகோ நம் தமிழ்நாட்டில் துவங்கப்பட்ட நிறுவனம் என்று நாம் பெருமை பேசும் அளவில் வளர்ந்து இன்று உலகப்புகழ் பெற்றுள்ளது. இவர் 2005-ம் ஆண்டு ஜோகோ பல்கலைக்கழகத்தை நிறுவினார். இன்று அது ஜோகோ ஸ்கூல் ஆப் லேர்னிங் என்று அழைக்கப்படுகிறது. உயர்நிலைப் பள்ளியில் படித்த மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்து அவருடைய நிறுவனத்திலேயே இவர் வேலை வாய்ப்பை வழங்கி உள்ளார். 

 இணையவழியில்  நடத்தப்பட்ட கலந்துரையாடலில் பத்ரி முன்வைத்த பல்வேறு கேள்விகளளுக்கு ஸ்ரீதர் வேம்பு பதில் அளித்துள்ளார். 

அமெரிக்காவில் துவங்கி உலகம் முழுவதும் ஜோகோ சாப்ட்வேர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தொற்று நோய் காலத்தில் அனைவரும் வீட்டில் இருந்து வேலை செய்து வருகின்றனர். வீட்டில் இருந்து தனியாக வேலை செய்வதற்கும் கிராமத்தில் ஒரு இடத்தில் 10 பேர் இருந்து வேலை செய்வதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. சிலிக்கான் வேலியிலேயே தற்போது அலுவலகம் தேவையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இங்கு இந்தியாவில் ஒரு பெரிய இடத்தில் நிறைய பேர் இருந்து வேலை செய்வதைக் காட்டிலும் சிறிய கிராமங்களில் 10 பேர் வேலை செய்வது என்பது சிறந்த ஒன்றாகும். தனியாக வீட்டில் இருந்து வேலை செய்வதைக் காட்டிலும் இது போன்று பத்து, பதினைந்து பேர் சமூக இடைவெளியை பின்பற்றி வேலை செய்யும்போது ஒருவருக்கு ஒருவர் மனம் விட்டு பேசிக் கொள்ளலாம்.

தனியாக வீட்டில் இருந்து வேலை செய்யும்போது மன நோய் ஏற்படுவதாக பலர் சொல்கின்றனர். எனவே இது ஒரு சிறந்த மாற்று வழியாகும். இதற்கான சோதனை முயற்சிதான் நடந்து கொண்டிருக்கிறது. இது நிச்சயம் வெற்றிபெறும். இது வெற்றி பெற்றால் இந்தியாவில் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கும். 

திறமையை காட்ட வழி என்ன?

இந்தியாவைப் பொறுத்தவரை தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ச்சி என்பது அமெரிக்காவில் மழை பெய்தால் இங்கு குடை பிடிக்கும் சூழலில்தான் உள்ளது. இதற்கு காரணம் நமக்கு ஆங்கிலம் தெரியும் என்பதால்தான்.ஆங்கிலம் நமக்கு தெரிவதால் நாம் அமெரிக்க அலுவலகங்களின் ‘பேக்எண்ட் ஆபீசாக’ இங்கு செயல்படுகிறோம். இதை நாம் மாற்ற வேண்டும். ஆனால் ஆங்கிலம் தெரியாத காரணத்தால் சீனா, தென்கொரியா, தைவான் போன்ற நாடுகள் தங்கள் திறமையைக் காட்ட புதிய தயாரிப்பில் இறங்குகின்றன.

ஒரு செமி கண்டக்டர் சிப் அல்லது எலக்ட்ரிக் கார் என்று ஏதாவது ஒன்றை தயாரித்தால் தான் அதை மார்க்கெட்டில் விற்க முடியும் என்ற நிலையில் உள்ளனர். அந்த நிலைக்கு நாம் மாற வேண்டும். பல புதிய பொருட்களை நாம் இங்கு தயாரிக்க வேண்டும்.

தாய் மொழியை இழக்கக்கூடாது

தாய் மொழியை இழந்துவிட்டு மற்றொரு மொழியை தத்தெடுத்து வளர்ந்ததாக எந்த நாட்டு வரலாற்றிலும் இல்லை. இந்த விளைவுதான் புதிய தயாரிப்புகள் உருவாகாமல் இருப்பதற்கு காரணம் ஆகும். 

தாய் மொழி கல்வி என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். நான் தமிழில்தான் படித்தேன். இந்தியாவில் நாம் தான் நமது தாய்மொழி வேண்டாம் என்று ஒதுக்குகிறோம். தாய் மொழியை வளர்ப்பதற்கு ஒரே வழி தொழில்முனைவோர்களும் வேலைவாய்ப்புகளை வழங்குபவர்களும் தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அப்போதுதான் தமிழ் வளரும். நம்மைப்போன்ற பலர் கிராமங்களுக்கு வந்து தமிழில் படிக்கும் மாணவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கினால்தான் தமிழையும் காப்பாற்ற முடியும் நாட்டையும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லமுடியும்.

நாம் இதுபோன்று செய்தால் தமிழ் தானாக வளரும். கிராமப்புறங்களில் பெரும்பாலான மாணவர்கள் தமிழிலேயே படிக்கிறார்கள். அப்படி ஆங்கில வழிக் கல்வியில் படித்தால் அதில் பலருக்கு ஆங்கிலம் வருவதில்லை. இதனால் ஆங்கிலம் தெரியாவிட்டால் அவர்களால் சாப்ட்வேர் எழுத முடியாது என்று கூறிவிட முடியாது. அதற்கு நான் முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த தலைப்பான ‘நில்லு, அப்புறம் சொல்லு’ என்பதற்கு ஏற்ப நான் தற்போது எனது கிராமத்திற்கு வந்து பணிகளை துவக்கி உள்ளேன்.

முதலில் நம்மிடம் இருக்கும் நமது தாழ்வு மனப்பான்மையைப் போக்க வேண்டும். நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். நமது மொழி, கலாச்சாரம் ஆகியவற்றின் மீது நாம் நம்பிக்கை வைத்தால்தான் நாம் அடுத்த நிலைக்கு செல்ல முடியும். ஆங்கிலம் தெரியாதவர்கள்கூட சாப்ட்வேர் எழுத முடியும் என்பதை நிரூபித்துக்காட்டவே நான் எனது கிராமத்திற்கு வந்துள்ளேன். 

விண்டோஸ், கூகுள் சர்ச் போன்ற சாப்ட்வேர்களை உருவாக்குதற்கு தேவையான விஷயங்கள் என்னவென்று பார்த்தால், அதற்கு 2 விஷயங்கள்தான் தேவை. ஒன்று திறமை, மற்றொன்று நேரம். இவை இரண்டும் இருந்தால் நாம் அதை சாதித்துவிடலாம்.. இந்தியாவைப் பொறுத்தவரை தமிழகம் அல்லது பீகாராக இருக்கட்டும். அங்குள்ள கிராமப்புற இளைஞர்களுக்கு அவர்களுக்குள்ளே இருக்கும் திறமை தெரியாது. அவற்றை நாம் முதலில் வெளிக்கொண்டு வரவேண்டும். அப்போது அவர்களின் திறமை வெளிப்படும். 

திறமைசாலிகளை உருவாக்குவதற்கு பணம் மட்டும் அவசியம் இல்லை; அதற்கான சிறந்த கட்டமைப்பு, திறமைகளை உருவாக்குவதற்கான சிறந்த சூழல் ஆகியவற்றை கொடுத்தால் திறமைசாலிகள் தன்னால் உருவாவார்கள். அவர்களின் திறமைகளை பயன்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகளை நாம் வழங்க வேண்டும். அப்படி வழங்கினால் இங்கு படித்துவிட்டு வெளிநாடு செல்ல வேண்டிய கட்டாயம் இல்லை.


ஜோகோ ஸ்கூல் ஆப் லேர்னிங்

நாம் படிப்பை மாணவர்களிடம் திணிக்காமல் அவர்கள் விரும்பும்படி சொல்லித் தரவேண்டும். அது போன்ற பயிற்சிதான் ஜோகோ ஸ்கூல் ஆப் லேர்னிங்கில் கற்றுத்தர முடிவு செய்துள்ளேன். அதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

கடுமையான பாடத்திட்டங்களை நாம் மாணவர்களிடம் திணிக்கும்போது பல மாணவர்கள் படிப்பே வேண்டாம் என்று படிப்பை பாதியிலே நிறுத்தும் சூழல் உருவாகும். இதற்கான பரிசோதனை அமெரிக்காவிலேயே நடந்துள்ளது. அது தோல்வியில் முடிந்துள்ளது .இதன் காரணமாக அங்கு எந்தவிதமான பெரிய நல்ல விஷயங்களும் நடக்கவில்லை. அதேபோன்ற சோதனை இங்கும் நடைபெறுகிறது. இது ஏன் நடைபெறுகிறது என்று எனக்கு தெரியவில்லை. எனக்கு பரீட்சை மீது எல்லாம் நம்பிக்கை இல்லை.

என்னைப் பொறுத்துவரை அடிப்படையில் எழுதப் படிக்க மற்றும் கணக்குத் தெரிந்தாலே போதுமானது. உயர்தரமான கல்வி என்று கூறி பரீட்சையை திணிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ‘நீட்’ போன்ற பரீட்சைகளிலும் எனக்கு உடன்பாடு இல்லை. இது சரியான கல்விமுறை இல்லை. இதன் காரணமாக பல குழந்தைகள் மன ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள். கிராமப்புறங்களில் படித்துவிட்டு சென்னை,  பெங்களூரு,  துபாய், சிங்கப்பூர் போன்ற இடங்களில் பலர் பணியாற்றுகின்றனர். அவர்கள் அனைவருக்கும் தங்கள் சொந்த ஊர்களுக்கு வர வேண்டும் என்று ஆர்வம் இருக்கிறது. அதற்கான வேலை வாய்ப்புகளை நான் உருவாக்கி வருகிறேன். திறமையை நமது சொந்த கிராமத்திற்கு கொண்டு வரவேண்டும். இங்கிருக்கும் திறமையை பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும். 

அதேபோல் ஒரு விஷயத்தைநாம் செய்வதற்கு முன் நாம் அடித்தளத்தில் இருந்துதான் யோசிக்க வேண்டும். நம்மால் உடனே போயிங் 747 விமானத்தை தயாரிக்க முடியாது. உதாரணத்திற்கு ஒரு நெகவெட்டியை நாம் வாங்கினால் அதில் ‘மேட் இன் சவுத் கொரியா’ என்று உள்ளது. ஒரு நெகவெட்டிகூட வெளிநாட்டில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. அதைக்கூட நாம் இங்கு தயாரிக்கவில்லை. இதுபோன்று செல்போன் சார்ஜரும் வெளிநாட்டில் இருந்துதான் வருகிறது. இதுபோன்ற அடிப்படை பொருட்களை முதலில் நாம் இங்கு தயாரிக்க வேண்டும். ஒருவரின் ஆர்வத்தை கெடுக்காமல் இருந்தால் இது போன்ற நடவடிக்கைகள் தானாக வளரும். ஒவ்வொருவரிடமும் ஒரு ஆர்வம் உள்ளது. அதை நம்முள் போட்டு அடக்கி வைத்துக் கொள்ளாமல் சிறு சிறு ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும். அதில் பல தோல்விகளை சந்தித்தாலும் நாம் நிச்சயம் வெற்றி பெற முடியும்.

எனவே ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்த நாட்டின் தாய்மொழியையும் அங்குள்ள திறமையான இளைஞர்களையும் நம்பித்தான் உள்ளது. திறமை என்பது எல்லோரிடமும் இருக்கிறது. அதை நாம் கண்டறிந்து வெளிக் கொண்டுவர வேண்டும். அதற்கான நடவடிக்கையில் தொழில்முனைவோர்கள் இறங்க வேண்டும். அப்போதுதான் நாம் பல திறமைசாலிகளை வெளி உலகிற்கு கொண்டு வர முடியும். கடுமையான படிப்பும் பரீட்சையும் எந்தவொரு மாற்றத்தையும் கொண்டு வந்துவிடாது. புரிதல்கள் இருந்தாலே எல்லாவற்றையும் சாதிக்க முடியும். கிராமங்களில் உள்ள ஏராளமான மாணவர்கள் திறமைசாலிகளாக இருக்கிறார்கள். அவர்களுக்கு தகுந்த பயிற்சிகளை அளித்து நாம் அவர்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு நாம் செய்கையில் நமது பொருளாதாரம் மேம்படும். ‘சுயசார்பு’ இந்தியா திட்டத்தில் நம்மால் புதிய பொருட்களை தயாரிக்க முடியும் என தெரிவித்தார்.

டை சென்னை குறித்து:

டை சென்னை என்பது, 175+ சார்ட்டர் உறுப்பினர்களையும் மற்றும் 600-க்கும் அதிகமான அசோசியேட் உறுப்பினர்களையும் கொண்டு இயங்கிவரும் ஒரு துடிப்பான கிளை அமைப்பாகும். தென்னிந்திய நகரமான சென்னையை தலைமையகமாக கொண்டு இயங்குகின்ற இக்கிளை, இம்மாநகருக்குள்ளும் மற்றும் தமிழ்நாடு மாநிலம் முழுவதிலும் தொழில்முனைவுத் திறன் உணர்வை பேணி வளர்ப்பதை தனது இலக்காக கொண்டு செயல்படுகிறது. தனிப்பட்ட நிகழ்வுகள் மட்டுமின்றி, கூட்டாண்மைகள் வழியாகவும் இக்கிளையானது, ஒவ்வொரு மாதமும் பல நிகழ்வுகளை நடத்துகிறது. உள்ளூர் தொழில்முனைவோர்களுக்கு உத்வேகம் அளிப்பதும், வழிகாட்டுவதும் மற்றும் கற்பிப்பதும் இந்த நிகழ்வுகள் நடத்தப்படுவதன் நோக்கமாகும். வெற்றிக் கதைகளையும் மற்றும் பிசினஸ் வாய்ப்புகளையும் குறித்து தகவல் பரிமாற்றம்  செய்யவும், முதலீட்டுக்கான நிதியை திரட்டும் வழிமுறை, வலைப்பின்னலை மேற்கொள்வது ஆகியவை குறித்து கருத்துகளை பகிர்ந்துகொள்ள பிசினஸ் தலைவர்கள், வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள் மற்றும் அரசு பிரதிநிதிகள் ஆகியோர் ஒருங்கிணைந்து பல நேரங்களில் ஒத்துழைப்புடன் செயல்படுகின்றனர்.

2014 ஆம் ஆண்டிலிருந்து சிறப்பாக செயல்படும் முதன்மையான கிளைகளுள் ஒன்றாக டை சென்னை இருந்து வருகிறது. உயர்தரமான நிகழ்வுகளை அடிக்கடி நடத்துவது மற்றும் உறுப்பினர் எண்ணிக்கையின் வளர்ச்சி ஆகியவை உட்பட பல அறிமுகங்களை சிறப்பான, நிலையான செயல்திறனுக்கு இந்த அங்கீகாரம் சாட்சியமாக திகழ்கிறது.  


அதிக தகவலைப் பெற காணவும்: https://chennai.tie.org/ 


 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund   மதுரை பெண்களே ஜெயி...