சென்னை ஐஐடி ஆதரவுடன் துவக்கப்பட்ட ஹெலிக்சன் நிறுவனத்துக்கு சிஐஐ கனெக்ட் – 2020 மாநாட்டில் ‘கோவிட் சாம்பியன் விருது’முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்
இந்த விருது கோவிட்-19க்கு எதிரான புதுமையான தொழில்நுட்ப தீர்வுகளை வழங்கியதற்காக இந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது
சென்னை, செப். 24,2020 - சென்னை ஐஐடி ஆதரவுடன் நவீன தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகளில் சிறந்து விளங்கும் ஹெலிக்சன் ஹெல்த்கேர் சர்வீசஸ் நிறுவனத்திற்கு கோவிட் சாம்பியன் விருது தமிழக சிஐஐ மாநாட்டில் வழங்கப்பட்டது. இந்த விருது, அதன் வருடாந்திர முதன்மை தகவல் தொழில்நுட்ப மாநாட்டின் ஒரு பகுதியாக - சிஐஐ கனெக்ட் 2020-ல் அதன் சமீபத்திய கண்டுபிடிப்பான ஆக்சி2 என்னும் 4-இன்-1 தொலைதூர கண்காணிப்பு முறை மற்றும் எபிகேர் என்னும் நோயாளிக்கான முழுமையான கட்டுபாட்டுதளம், ஆகியவற்றின் மூலம் நெருக்கடியான காலக்கட்டத்தின்போது சுகாதார செயல்பாடுகளை எளிதாக்குவதற்கு அதன் மீது கவனம் செலுத்தியதற்காக இந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
ஹெலிக்சனின் ஆக்சி2 மாநிலத்தில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட் போன் மூலம் நோயாளியை கண்காணிக்கும் கருவியாகும். இது உடல் வெப்பநிலை, ஆக்சிஜன் செறிவு, சுவாச விகிதம் மற்றும் இதய துடிப்பு ஆகிய 4 முக்கிய விஷயங்களை தொடர்ந்து கண்காணிக்கிறது. கோவிட் நெருக்கடிக்கு மத்தியில் மருத்துவர்கள் தங்கள் நோயாளிகளை தொலைதூரத்தில் இருந்து கண்காணித்து அதற்கான தீர்வுகளை வழங்க எபிகேர் இணையதள சேவையானது முக்கிய ஒன்றாக உள்ளது. இதில் மருத்துவ நிபுணர்களுக்கு மருத்துவம் தொடர்பான தீர்வுகள் மற்றும் சேவைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இந்த தொற்று நோய் காலத்தில் புதிய தீர்வுகளை வழங்கவும் அதற்கான தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் புதிய கருவிகளை அறிமுகம் செய்வதிலும் ஹெலிக்சன் அதிக கவனம் செலுத்தியது. நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் தங்களின் தீர்வுகளை கொண்டு செல்ல இந்நிறுவனம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளது. இதனை பாராட்டும் விதமாக இந்நிறுவனத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் நடந்த 5 நாள் மாநாட்டில் விருது வழங்கினார்.
இது குறித்து ஹெலிக்சன் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான விஜய் சங்கர் ராஜா கூறுகையில், தமிழக சிஐஐ மாநாட்டில் இந்த விருது எங்களுக்கு கிடைத்துள்ளது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இது கோவிட்டுக்கு எதிரான எங்கள் போராட்டத்திற்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக உள்ளது. தொழில்நுட்பத்தின் மூலம் இன்னும் பல உயிர்களை காப்பாற்றவும் இது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது. தொழில்நுட்பத்தின் உதவியுடன் புதுமையான தீர்வுகளை வழங்குவதில் நாங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம். இந்தியாவில் சுகாதார அமைப்பை குறைந்த கட்டணத்தில் உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தில் உருவாக்குவதே எங்களின் முக்கிய குறிக்கோளாகும். இதுபோன்ற பல கண்டுபிடிப்புகளுடன் சுகாதார தொழில்நுட்பத்தின் சிறந்த மாநிலமாக உலக அளவில் தமிழகத்தை நிலைநிறுத்த நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம் என்று தெரிவித்தார்.
உலகத் தரம் வாய்ந்த மருத்துவ நிபுணர்களுடன் இணைந்து உருவாக்கப்பட்ட, ஹெலிக்சனின் ஆக்சி2 சுகாதாரத் துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் முக்கிய கவனம் செலுத்துகிறது. மருத்துவமனைகள் மற்றும் பல்வேறு மாநில மற்றும் மத்திய அரசாங்கங்களின் சுகாதாரத் துறைகள், அத்துடன் நாடு முழுவதும் உள்ள மக்களுக்கான தனிப்பட்ட பயன்பாட்டிற்காக சில்லறை விற்பனை மூலம் ஆக்சி2 கிடைக்க இந்நிறுவனம் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆக்சி2 அனைத்து வயது நோயாளிகளும் எளிமையான முறையில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
5 ஆண்டுகளுக்கும் மேலான விரிவான ஆராய்ச்சி மற்றும் செயலாக்கத்தில் நோயாளிகளுக்கு சிறந்த தீர்வு அளிக்கும் தளமாக எபிகேரை ஹெலிக்சன் வடிவமைத்துள்ளது. நோயறிதல் மற்றும் மருத்துவ பணிகளில் ஒரு சிறந்த முன்னுதாரணமாக இந்த தளம் திகழ்கிறது. இது நோயாளிகள், சுகாதார சேவை வழங்குனர்கள், மருத்துவ தகவல்கள், தரவு மற்றும் மெய்நிகர் தொலைத்தொடர்பு ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. ஒரு விரிவான தொலைதூர நோயாளி கண்காணிப்பு முறையை வழங்குவதிலும் சுகாதார சேவைகளிலும் புதிய மெய்நிகர் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பை மாற்றியமைப்பதில் அடுத்த நிலைக்கான மாற்றத்தை எபிகேர் வழங்குகிறது.
கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் இந்நிறுவனம் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் நிலையில் ஆக்சி2 சென்னையில் உள்ள பெலும்பாலான மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் மருத்துவ பயிற்சியாளர்களுக்கு அவர்களின் நோயாளிகளை தொலைதூரத்தில் இருந்து கண்காணிக்கவும் உதவி வருகிறது. இதன் காரணமாக இதன் தேவை அதிகரித்துள்ளது. அதை பூர்த்தி செய்யும் விதமாக ஆக்சி2 உற்பத்தியை இந்நிறுவனம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக