வருமான வரியை மிச்சப்படுத்த 5 முக்கிய வழிகள்!
திரு. அதில் ஷெட்டி சி.இ.ஓ, பேங்க் பஜார்
வங்கிக் கணக்குகள் அனைத்தையும் இப்போது ஆதார் எண் மற்றும் பான் எண்களோடு இணைக்கவேண்டியது கட்டாயம் என்றாகிவிட்டது.
இதனால், ஒருவரின் வருமானம் மற்றும் அவர் செலுத்த வேண்டிய வருமான வரி ஆகிய இரண்டும் மறைக்க முடியாத விஷயங்களாக மாறிவிட்டன.
தவிர, வரி ஏய்ப்பைக் குறைக்க மத்திய அரசு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளைக் கடந்த சில வருடங்களாக எடுத்து வருகிறது.
இந்த நிலையில், மாதச் சம்பளம் வாங்கும் பலரின் கேள்வி, ‘நாம் ஓடி ஓடி கஷ்டப்பட்டுச் சம்பாதிக்கும் பணம் வருமான வரி கட்டுவதற்கே சரியாகப் போய்விடும் போலிருக்கிறதே’ என்பதே.
யாரும் இப்படி புலம்பத் தேவையில்லை. காரணம், வரி செலுத்த வேண்டியது நம் எல்லோருடைய கடமை. ஆனால், நாம் செலுத்தும் வரியை நம்மால் குறைத்துக்கொள்ள முடியும். அதற்கான வசதிகளையும் அரசாங்கமே செய்து தந்திருக்கிறது.
நம்முடைய வருமானம் முதலீடாக மாறும்போது அந்த வருமானத்துக்கு வரிச் சேமிப்பு வசதி கிடைக்கிறது. சரியான வரிச் சேமிப்பு முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் 2019-20-ல் நீங்கள் செலுத்த வேண்டிய வரியைக் குறைத்து சேமிக்கலாம். அது எப்படி என்பதை இனி விளக்கமாகப் பார்ப்போம்.
80சி பிரிவு வரி சேமிப்பு
வருமான வரிச் சட்டம் 80சி பிரிவின் கீழ் தனிநபர் ஒருவர், குறிப்பிட்ட முதலீடுகள் மற்றும் நிதி சார்ந்த திட்டங்கள் மூலம் ரூ. 1.5 லட்சம் வரையிலான வருமானத்துக்கான வரியை மிச்சப்படுத்தலாம்.
ஒருவருக்கான முதலீட்டுத் திட்டங்கள் என்பது அவரது ரிஸ்க் எடுக்கும் திறனை வைத்தே முடிவு செய்யப்படுகிறது.
குறைந்த (Low) ரிஸ்க், மிதமான (Moderate) ரிஸ்க் மற்றும் அதிக (High) ரிஸ்க் என மூன்று வகையாக நம் முதலீட்டைப் பிரிக்கலாம்.
மிதமான ரிஸ்க் முதல் அதிக ரிஸ்க் வரை எடுக்க நினைப்பவர்கள் 80சி பிரிவுக்குக் கீழ் வரும் ஈக்விட்டி சார்ந்த வரி சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால், அதிக வருமானம் கிடைக்கும்.
வரி சேமிக்க நினைப்பவர் களுக்கு இ.எல்.எஸ்.எஸ் மியூச்சுவல் ஃபண்ட் மற்றொரு முதலீட்டு வழி. இதில் நாம் மொத்தமாகவும் முதலீடு செய்யலாம், மாதம் தோறும் எஸ்.ஐ.பி முதலீடு அடிப்படையிலும் செய்யலாம்.
பங்குச் சந்தை, இன்ஷூரன்ஸ் கலப்புத் திட்டமான யூலிப் பாலிசிகளும் பங்குச் சந்தையில் முதலீடு செய்கின்றன.
ஆனால், இதன் கட்டாய வைத்திருப்புக் காலம் ஐந்தாண்டு என்பது, இ.எல்.எஸ்.எஸ் திட்டத்தின் மூன்றாண்டைவிட அதிகமாக இருக்கிறது.
குறைந்த ரிஸ்க் மட்டுமே எடுக்க முடியும் என்பவர்களுக்குப் பாதுகாப்பான வரி சேமிக்கக் கூடிய முதலீட்டுத் திட்டங்கள் உள்ளன. அவை, பி.பி.எஃப், வரி சேமிப்பு நிரந்தர வைப்பு நிதி, சுகன்யா சம்ரிதி யோஜனா, என்.எஸ்.சி மற்றும் ஆயுள் காப்பீட்டுத் திட்டம்.
இந்த முதலீட்டுத் திட்டங்களில் வருமானம் குறைவு மற்றும் கட்டாயக் காத்திருப்புக் கால வரம்பு அதிகம். இதன்மூலம் கிடைக்கும் வருமானம் குறைவு என்றாலும், அது உத்தரவாதமாக இருப்பதால், ரிஸ்க் எடுக்கத் தயங்கும் முதலீட்டாளர்களிடையே இந்தத் திட்டங்கள் பிரபலமாக இருக்கின்றன.
அதிகம் பேர் முதலீடு செய்யும் பி.பி.எஃப் மற்றும் இ.எல்.எஸ்.எஸ் மியூச்சுவல் ஃபண்ட் பற்றி விரிவாக பார்ப்போம்.
1. பி.பி.எஃப்
நீங்கள் வசிக்கும் இடத்துக்கு அருகில் உள்ள தபால் நிலையம் அல்லது கணக்கு வைத்திருக்கும் வங்கிக்குச் சென்று, அடையாள அட்டை, முகவரிச் சான்று மற்றும் புகைப்படம் இரண்டைக் கொடுத்து, இந்தக் கணக்கினைத் தொடங்க குறைந்தபட்சமாக ரூ.100 செலுத்த வேண்டும்.
வருடாந்திர முதலீடு குறைந்தபட்சம் ரூ.500 இருக்க வேண்டும். ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் தனியாக பி.பி.எஃப் கணக்குத் தொடங்கலாம். பி.பி.எஃப் கணக்கில் மொத்தமாகவோ, மாத அடிப்படையிலோ முதலீடு செய்யலாம்.
சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம் கடந்த மூன்று வருடங்களாகக் குறைந்துகொண்டே இருக்கிறது. இதனால் பி.பி.எஃப் மூலம் கிடைக்கும் வருமானம் குறைந்து வருகிறது. தற்போது ஆண்டுக்கு 7.9% வட்டி கிடைக்கிறது. இதில் ரிஸ்க் இல்லாத வருமானம் உறுதியாக இந்திய அரசால் வழங்கப்படுகிறது. பி.பி.எஃப் முதலீடு உங்களுடைய கடன்களை அடைக்க நீதிமன்றத்தால் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. இதன் முதலீட்டுக் காலம் 15 ஆண்டுகளாகும். இதை அடுத்தடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்துக் கொள்ளலாம். பகுதியளவு முதலீட்டை ஏழு ஆண்டுகளுக்குப்பிறகு எடுக்க முடியும்.
எனவே, தேவையான நேரத்திலெல்லாம் முதலீட்டை எடுக்கும் வசதி இதில் இருக்காது. முதிர்வுக் காலத்துக்கு முன்பாகவே பி.பி.எஃப் கணக்கை முடித்து எடுத்துக் கொள்ளும் வசதி இருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்குப்பிறகு மருத்துவ சிகிச்சை அல்லது மேற்படிப்பு போன்ற குறிப்பிட்ட காரணங்களுக்காக மட்டுமே எடுக்கலாம். அதற்கு 1% அபராதம் வசூலிக்கப்படும்.
இந்த முதலீட்டுக்கு முற்றிலுமாக வரி விலக்கு உண்டு. எனவேதான் ரிஸ்க் எடுக்க விரும்பாத கன்சர்வேட்டிவ் முதலீட்டாளர்களின் விருப்பமான முதலீடாக இருக்கிறது. ஃபிக்ஸட் டெபாசிட்டில் 7% வருமானம் கிடைத்தால், 30% வரி வரம்பில் இருப்பவர்களுக்கு உண்மையில் கிடைப்பது 4.9 சதவிகிதம்தான். ஆனால், பி.பி.எஃப் முதலீட்டில் 7.9 சதவிகித வருமானமும் முழுமையாக கையில் கிடைக்கும்.
2. இ.எல்.எஸ்.எஸ்
இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகளை வாங்குவதற்குப் பல வழிகள் உள்ளன. அவற்றில் எளிதான வழி, ஆன்லைன்மூலம் வாங்குவது. ஃபண்ட் நிறுவனத்தின் இணையதளத்திலோ அல்லது பேங்க் பஜார் போன்ற முதலீட்டுத் திட்டங்களை ஒருங்கிணைத்து வழங்கும் நிறுவனங்களின் இணையதளத்திலோ பதிவு செய்துகொண்டு வாங்கலாம்.
அதில், உங்களுடைய கே.ஒய்.சி விவரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
இரண்டாவது வழி, ஃபண்ட் நிறுவனங்களை நேரடியாக அணுகி கே.ஒய்.சி ஆவணத்தைப் பூர்த்தி செய்து காசோலை மூலம் உங்களுக்கான இ.எல்.எஸ்.எஸ் முதலீட்டுக் கணக்கைத் தொடங்கலாம். இதில் மாதம் ரூ.500-லிருந்து முதலீடு செய்யலாம். இ.எல்.எஸ்.எஸ் திட்டத்தில் வரி சேமிப்பதற்கான வரம்பை அடையும் வகையில் முதலீடு செய்வது கட்டாயம். உதாரணத்துக்கு, ஏற்கெனவே ரூ.1.2 லட்சத்துக்கு முதலீடு செய்திருந்தால், வரி விலக்கு வரம்பை அடைய மீதமுள்ள ரூ.30 ஆயிரத்துக்கு இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட் வாங்கலாம். இதில் மொத்தமாகவோ, எஸ்.ஐ.பி மூலமாகவோ முதலீடு செய்யலாம்.
இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் திரட்டப்படும் நிதி பங்குச் சந்தையிலும் முதலீடு செய்யப்படுவதால், அதன் மீதான வருமானம் தினமும் ஏறி இறங்கிக்கொண்டிருக்கும். ஆனால், குறிப்பிட்ட கால வரம்பில் இந்த ஃபண்டுகள் ஆண்டுக் கூட்டு வளர்ச்சி அடிப்படையில் 15% முதல் 24% வரை கடந்த ஐந்தாண்டுகளில் வருமானம் தந்துள்ளன. இது பி.பி.எஃப் போன்ற திட்டங்களைக் காட்டிலும் அதிக வருமானம் தருவதாகும்.
இதன் கட்டாய இருப்புக் காலம் மூன்றாண்டுகள் ஆகும். இது எஸ்.ஐ.பி முதலீட்டுக்கும் பொருந்தும். உதாரணமாக, செப்டம்பர் 2019 எஸ்.ஐ.பி தொகையை செப்டம்பர் 2022-ல்தான் எடுக்க முடியும்.
இது பங்குச் சந்தை சார்ந்த முதலீடு. எனவே, ஓராண்டுக்குப் பிறகிலிருந்து நிபந்தனைக்கு உட்பட்டு நிதி ஆண்டில் ரூ. 1 லட்சம் வரைக்கும் நீண்டகால மூலதன ஆதாய வரி இதில் இல்லை. அதற்கு மேற்பட்ட ஆதாயத்துக்கு 10% வரி கட்ட வேண்டும்.
இதில் மூன்று வருடங்கள் கட்டாய இருப்புக் காலம் என்பதால், இ.எல்.எஸ்.எஸ் முதலீட்டின் மீதான வருமானத்துக்கு வரி இருக்காது. எனவே, வருமானம் மற்றும் வரி சேமிப்பு அடிப்படையில் சிறந்த முதலீடாக இ.எல்.எஸ்.எஸ் திட்டம் இருக்கிறது.
நீண்டகால அடிப்படையில் பி.பி.எஃப், இ.எல்.எஸ்.எஸ் இரண்டுமே வரியைச் சேமிக்கத்தக்க சிறந்த முதலீடுகள்தான். நம்முடைய ரிஸ்க் எடுக்கும் தன்மைக்கேற்ப இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்யலாம். ஆனாலும், இரண்டில் குறைவாக மூன்று வருடக் கட்டாய இருப்புக் காலமும், அதிக வருமானமும் கொண்டதாக இருப்பது இ.எல்.எஸ்.எஸ் முதலீட்டுத் திட்டம்தான்.
3. இன்ஷூரன்ஸ்
மேலும், நாம் செலுத்தும் சில கட்டணங்களைக் கணக்கில் காண்பிப்பதன் மூலம் வரியைச் சேமிக்க முடியும். அவை ஆயுள் காப்பீட்டுத் திட்டத்துக்கு நாம் செலுத்தும் ஆண்டு பிரீமியம், இரண்டு குழந்தைகளுக்குச் செலுத்தும் டியூஷன் கட்டணம் மற்றும் வீட்டுக் கடனைத் திரும்பச் செலுத்தும் இ.எம்.ஐ ஆகியவற்றைக் கணக்கில் காட்டி 80சி பிரிவின்கீழ் வரியைச் சேமிக்கலாம்.
வருமான வரிச் சட்டம் 80டி பிரிவின்கீழ், நீங்கள் 60 வயதுக்குக்கீழே இருப்பவர் எனில், ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கு செலுத்திய பிரிமீயத்தில் ரூ.25,000 வரை வருமான வரி விலக்குக்காகக் கோரலாம். 60 வயதுக்குமேல் இருந்தால், ரூ.50,000 வரை வரி விலக்குக் கோரலாம். மேலும், இதில் உங்களுடைய ஹெல்த் பாலிசி மட்டுமல்லாமல், உங்களுடைய வாழ்க்கைத் துணை, குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோரின் ஹெல்த் பாலிசிக்குச் செலுத்திய பிரீமியத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். இதில் நீங்கள், உங்கள் வாழ்க்கைத் துணை மற்றும் குழந்தைகள் ஆகியோர் அனைவரின் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பிரீமியமும் சேர்த்து ரூ.25 ஆயிரம் வரை அதிகபட்சமாக வரி விலக்குக்காகக் கோரலாம். இதுதவிர, கூடுதலாகப் பெற்றோர்களின் ஹெல்த் பாலிசி பிரிமீயத்தில் ரூ.50,000 வரி விலக்குக் கோரலாம். அதாவது மொத்தமாக ரூ.75 ஆயிரம் வரை வரி விலக்குப் பெறலாம்.
4. தேசிய ஓய்வூதியத் திட்டம்
தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (NPS) செய்யப்படும் முதலீட்டுக்கு நிபந்தனைக்கு உட்பட்டு 80சி பிரிவின்கீழ் ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்குக் கோரலாம்.
இதுதவிர, 80 சிசிடி-யின்கீழ் தனியே ரூ.50,000 வரிச் சலுகை பெற முடியும். ஆக, என்.பி.எஸ் முதலீட்டின் மூலம் அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரியை மிச்சப்படுத்த முடியும்.
5. சிறந்த வரி சேமிப்பு – வீட்டுக் கடன்
வீட்டுக் கடனில் வீடு வாங்குவதன் மூலம் வரியைச் சேமிக்க முடியும். இதிலுள்ள சிறப்பு, வீட்டுக் கடன்மூலம் பெரும் தொகையை வரிச் சேமிப்புக்காகக் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல், தற்போது முதல் முறை வீடு வாங்குபவர்களுக்குக் கூடுதல் சலுகையாகப் பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டம் மூலம் வட்டியில் தள்ளுபடியும் கிடைக்கிறது.
வீட்டுக் கடன் மூலம் திரும்பச் செலுத்தும் அசலில் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, 80சி பிரிவின் கீழ் அதிகபட்சம் நிதியாண்டில் ரூ.1.5 லட்சம் சேமிக்கலாம். மேலும் சொத்து வாங்கியதற்கான பத்திரப் பதிவு, முத்திரைத்தாள் கட்டணம் ஆகியவற்றையும் இந்தப் பிரிவின்கீழ் கணக்குக் காட்டலாம். இதற்கு வீட்டுக் கடன் வாங்கியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், வீட்டுக் கடன் வாங்கியிருந்தால் ரூ.1.5 லட்சம் வரை திரும்பச் செலுத்தும் அசல் தொகையில் வரிச் சலுகை பெறலாம்.
ஆனால், சொத்து வாங்கி ஐந்து வருடங்களுக்குள் விற்றால் பெற்ற வரிச் சலுகையைத் திரும்பக் கட்ட வேண்டும்.
வீட்டுக் கடனில் திரும்பச் செலுத்தும் வட்டி யில் வருடத்துக்கு ரூ.2 லட்சம் வரை 24பி பிரிவின் கீழ் வரி சலுகைக்காகக் கோரலாம். ஆனால், கடன் வாங்கிய நிதியாண்டுக்குப் பிறகு மூன்றாண்டுகளுக்குள் வீடு வாங்குவது அல்லது கட்டுவதை நிறைவு செய்ய வேண்டும். கட்டு மானத்தில் இருக்கும் வீடு ஐந்து வருடங்களில் முழுவதுமாகக் கட்டி நிறைவு செய்யப்பட வேண்டும். இல்லையென்றால் வருடத்துக்கு ரூ.30 ஆயிரமாக வரிச் சலுகை வரம்பு குறைந்துவிடும்.
இவை அனைத்தும் வீட்டை உரிமையாளர் பயன்படுத்தும் பட்சத்தில் மட்டுமே பொருந்தும். வீட்டை வாடகைக்கு விட்டிருந்தால் வரி சலுகைக்கு எந்த வரம்பும் இல்லை என இருந்தது, 2017-18-ம் நிதியாண்டிலிருந்து, வீட்டுக் கடன் வட்டியில் அதிகபட்ச வரிச் சலுகை வரம்பு ரூ.2 லட்சமாக மாற்றப்பட்டுள்ளது.
வீட்டுக் கடன் வட்டி விகிதம் குறைந்துகொண்டே இருப்பதாலும், பெரும்பாலான கட்டுமானங்கள் விற்காமல் இருப்பதாலும் வீடு வாங்க சரியான நேரம் உருவாகியிருக்கிறது.
இந்தத் திட்டங்களைப் பயன்படுத்தி, வரிச் சலுகையைப் பெறுவது உங்கள் கடமை.
கூடுதல் வரிச் சலுகை தரும்
பிரதம மந்திரி அவாஸ் யோஜனா!
வீட்டுக் கடனில் வீடு வாங்குவதன் மூலம் வருமான வரியாகப் பெரும் தொகையைச் சேமிக்க முடியும் என்பது பலருக்கும் தெரிந்ததே. முதல் முறை யாகச் சொந்த வீடு வாங்கு பவர்களுக்குப் பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீட்டுக் கடன் மீதான வட்டி விகிதங்களுக்குக் கூடுதல் மானியம் கிடைக் கிறது.
இந்த மானியம் குடும்பத் தின் வருமானம், சொத்தின் அளவு மற்றும் கடன் பெறும் தொகையின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து நிர்ணயிக்கப் படும். தற்போதுள்ள திட்டத்தின்படி மார்ச் 31, 2019 வரையில் வாங்கப் படும் வீடுகளுக்கு இந்தச் சலுகை உண்டு. தகுதியுள்ளவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.