Type Here to Get Search Results !

செலவு செய்வதில் கூடுதல் கவனம்.. கடுமையான நிதி, பொருளாதார நெருக்கடி காலங்கள் பராக்..!

செலவு செய்வதில் கூடுதல் கவனம்.. கடுமையான நிதி, பொருளாதார நெருக்கடி காலங்கள் பராக்..!

இந்தியாவில் அறிவிக்கப்படாத நிதி  மற்றும்  பொருளாதாரநெருக்கடி நிலை  தற்போது நிலவி வருகிறது. 

 பொதுமக்களுக்கு இதன் தாக்கம் மிக மெதுவாகத்தான் தெரியவரும். தொடர்ந்து வரவிருக்கும் பெரும் நெருக்கடிகளுக்கு இது ஒரு சாம்பிள் 

 வங்கிகளின் வாராக்கடன்கள் அதிகரிக்கின்றன என்றால் என்ன அர்த்தம்.? புதிய முதலீடுகள் வரவில்லை என்று அர்த்தம்..? 

திவாலானதாக அறிவிக்கும் முறைகள், மற்றும் இந்த கார்ப்பரேட்டுகளின் தொடர்ந்த ஊழல்களால் இது நடக்கிறது.

 கட்டி முடிக்கப்பட்டிருக்கும் வீடுகள் விலை போகவில்லை. வாங்க யாரும் வரவில்லை.. இதன் பொருள் ஸ்டீல், சிமெண்ட்,. பாத்ரூம் ஃபிட்டிங்குகள், கட்டுமானங்கள் ஆகியவை பெரும் சரிவை சந்திக்கப் போகின்றன. 

இதன் காரணமாக வங்கிகளின் வாராகடன்கள் நிச்சயம் மிக மிக அதிகரிக்கப் போகின்றன. 
வெறும் கம்பெனிகள் மட்டுமில்லாமல் தனிப்பட்ட நபர்களும் கடனை கட்ட முடியாமல் வாராக்கடன் பட்டியலில் சேரும் நிலைமை அதிகரிக்கப் போகிறது. ஆக சிக்கல் மேலும் அதிகரிக்கப் போகிறது.

வாகன விற்பனையும் சரிந்து வருகிறது. இந்த நிமிடத்தில் பார்த்தோம் என்றால் இந்திய வரலாற்றில் முதன் முறையாக இரு சக்கர வாகன விற்பனை விகிதம் மைனசில் போய்க் கொண்டிருக்கிறது.
மாருதி தனது உற்பத்தியை 50% குறைத்துவிட்டது. பல வாகன விற்பனையாளர்கள் தங்கள் ஷோரூம்களை மூடி வருகிறார்கள். இதன் விளைவாக ஸ்டீல், டயர்கள் மற்றும் அக்சசரிகளின் விற்பனை படுபயங்கரமா வீழ்ச்சியை சந்திக்கும்.

 மேற்சொன்ன மூன்று காரணங்களின் மூலமாகவே கோடிக்கணக்கான வேலை இழப்புகள் வரப் போகின்றன. 

முக்கியமாக அரசுக்கு வர வேண்டிய வரி வருவாய் கணிசமான அளவுக்கு குறையப்போகிறது. வருவாய் குறைந்தால் அரசு சும்மா இருக்குமா.? இழந்த வருவாயை சரி செய்ய மேலும் மேலும் வரிகளைப் போட்டு மக்களின் முதுகை ஒடிக்கப் போகிறது. 

வரும் வருமானம் அனைத்தையும் அரசு தனியார் கம்பெனிகளிடம் அப்படியே தூக்கிக் கொடுத்து விடுகிறது. வரும் பற்றாக்குறைக்கு மட்டும் மக்கள் மீது வரி போட்டு சுரண்டுகிறது. இந்த மாதிரி பொருளாதார வீழ்ச்சி நேரத்தில் இந்த அரசு என்ன செய்யும்.. 

அரசின் சொத்துகள் அனைத்தையும் கார்ப்பரேட்டுகளுக்கு மிகக் குறைந்த விலைக்கு விற்கத் துவங்கும். அரசின் நஷ்டம் மேலும் மேலும் அதிகரிக்கத் துவங்கும்.

இந்த பொருளாதார சரிவின் தாக்கத்தை பொதுமக்கள் 2020 மார்ச் வாக்கில் உணரத் துவங்குவார்கள். ஏனென்றால் தற்போது சாமானிய இந்தியர்கள் யாருக்கும் இதன் தாக்கம் இன்னமும் உறைக்கவில்லை. 

அன்றாட தேவைகளான குளியல் சோப்பு, ஷாம்பூ, சோப் பவுடர்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களைக் கூட விற்க முடியாத நிலை அல்லது அதை மக்கள் வாங்க முடியாத நிலையும் சீக்கிரம் வரப் போகிறது. 

 கடந்த சில வருடங்களாகவே இந்த FMCG எனப்படும் அன்றாடம் விற்பனையாகும் பொருட்களின் விற்பனை வீழ்ச்சியைத்தான் சந்தித்து வருகிறது. மூச்சுக்கு முன்னூறு தடவை டிவியில் விளம்பரம் வருமே.. 

அந்த பாபா ராம்தேவின் பதஞ்சலி பொருட்களுக்கான விளம்பரங்களை கடைசியாக நீங்கள் டிவியில் எப்போது பார்த்தீர்கள் என்று ஞாபகம் இருக்கிறதா.? 

இரண்டு வருடங்களுக்கு முன்பு பதஞ்சலி டிவி விளம்பரங்களில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருந்தது. ஆனால் கடந்த ஒரு வருடமாகவே பதஞ்சலி இறங்கு முகத்தில் இருக்கிறது. அரசின் சப்போர்ட்டோடு படு வேகமாக முன்னேறி வந்த பதஞ்சலியே வீழ்ச்சியை சந்திக்கிறது என்பதுதான் அபாயத்துக்கான அறிகுறி. 

அன்றாடப் பொருட்களை விடுங்கள்.. பதஞ்சலி ஆயுர்வேதா எனப்படும் பதஞ்சலி மருந்துகளின் விற்பனையே 2018 ல் இருந்து பத்து சதவீதம் வீழ்ச்சியில்தான் இருக்கிறது. பதஞ்சலி போன்ற கம்பெனிகள் மட்டுமல்ல.. ராட்சத நிறுவனமான ஹிந்துஸ்தான் லீவரின் விற்பனையே இறங்குமுகத்தில்தான் உள்ளது. நகர்ப்புறங்களில் அன்றாட பயன்பாட்டுப் பொருட்களான சோப்பு, டூத் பேஸ்ட், தலைக்குத் தேய்க்கும் எண்ணை, பிஸ்கட்டுகள் போன்ற எண்ணற்ற பொருட்களின் விற்பனை பெரும் சரிவை சந்தித்து வருகிறது. 

விற்பனை சரிவதால் கம்பெனிகளின் லாபமும் சரிந்து வருகிறது. இந்த வீழ்ச்சிக்குள்தான் அன்றாட தேவைப் பொருட்களோடு, இரு சக்கர வாகனங்கள், குறைந்த விலை கார்கள் ஆகியவை வருகின்றன.

இப்போது அடுத்த பிரச்னையான போக்குவரத்து வருகிறது. இந்திய போக்குவரத்து ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் அறிக்கையிலிருந்து சிலவற்றைப் பார்ப்போம்..

 நவம்பர் 2018 க்கு மேல் வாடகை லாரிகளின் வருமானம் 15% சரிந்திருக்கிறது என்கிறது அந்த அறிக்கை. பெருமளவு இடமாற்றம் செய்யும் fleet வகை போக்குவரத்து அதை விட அதிகமான சரிவைச் சந்தித்திருக்கிறது. 

 அனைத்து 75 தேசிய வழித் தடங்களிலும் போக்குவரத்து சொல்லத்தக்க அளவு வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் மட்டும் பெருமளவு போக்குவரத்தான fleet transportation கடந்த காலாண்டை ஒப்பிடும்போது 25% முதல் 30% வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது என்றால் நிலைமையின் தீவிரத்தை நீங்களே உணர்ந்து கொள்ளலாம். 

ஆக லாரி ஓனர்களின் வருவாயும் 30%  சதவீதம் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. 

ஆக அடுத்த காலாண்டில் பெரிய பாதிப்பு காத்திருக்கிறது. பெருமளவு இடமாற்றம் செய்யும் பல போக்குவரத்து அதிபர்கள் தங்கள் மாதாந்திர தவணையை கட்ட முடியாமல் போகக் கூடிய ஆபத்து காத்திருக்கிறது. அது மேலும் ஒரு வீழ்ச்சிக்கு வித்திடப் போகிறது.

 சரக்கு இட மாற்றத்தில் நிகழ்ந்திருக்கும் இந்த பெரும் வீழ்ச்சிக்கு காரணம் தொழில்ரீதியான உற்பத்தி பெரும் சரிவை சந்தித்திருப்பதுதான். அதாவது தேவைகள் குறைந்துவிட்டதால் உற்பத்தி குறைந்துவிட்டது. உற்பத்தி இல்லாததால் லாரி போக்குவரத்தின் தேவையும் குறைந்துவிட்டது. அவ்வளவுதான். 

நகரங்களிலும் சரி, கிராமங்களிலும் சரி, நுகர்வோர் (consumers) தங்கள் செலவுகளை குறைத்துக் கொண்டிருக்கிறார்கள். விவசாய உற்பத்தியும் மிக மிக மெதுவாக நடந்து கொண்டிருக்கிறது. ஏப்ரலுக்குப் பிறகு விவசாயப் பொருட்களின் தேவை கூட குறைந்துவிட்டதாக சொல்கிறார்கள். பழம் மற்றும் காய்கறிகளின் தேவை கூட 20% குறைந்துவிட்டது. 


இது வெறும் ஆரம்பம்தான். இன்னும் போகப் போக ஒவ்வொரு துறையாக அடி வாங்கப் போகின்றன. 
ஆகவே மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சிக்கு தயாராக இருங்கள் நண்பர்களே..

கருத்துரையிடுக

0 கருத்துகள்
*.