இந்திய ஆயுள் காப்பீடு கழகத்தின் மொத்த சொத்து மதிப்பு 2017 செப்டம்பரில் ரூ. 27.26 லட்சம் கோடியாக அதிகரிப்பு
இந்தியாவின் மிகப் பெரிய ஆயுள் காப்பீடு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீடு கழகம்(Life Insurance Corporation of India -LIC of India), 2017 செப்டம்பர் மாதத்துடன் முடிந்த ஆறு மாத காலத்துக்கான தணிக்கை செய்யப்பட்ட நிதி நிலை விவரங்களை அறிவித்துள்ளது.
2017 செப்டம்பர் இறுதி நிலவரப்படி எல்ஐசி ஆஃப் இந்தியாவின் மொத்த பிரீமியம் வருமானம் ரூ. 1,48,037 கோடிக்கு மேல் உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில், ரூ. 1,32,257 கோடியாக இருந்தது. இது 11.95 சதவிகித வளர்ச்சியாகும்.
எல்ஐசி –ன் மொத்த வருமானம் (Gross Total Income) ரூ.2,22,350 கோடியிலிருந்து ரூ. 2,50,267 கோடியாக அதிகரித்துள்ளது. இது 12.56%சதவிகித வளர்ச்சியாகும்.
இந்திய ஆயுள் காப்பீடு கழகத்தின் மொத்த சொத்து மதிப்பு 2017 செப்டம்பரில் ரூ. 27,25,808 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில், ரூ. 23,90,056 கோடியாக இருந்தது. இது 14.04 சதவிகித வளர்ச்சியாகும்.
2017 செப்டம்பர் 30ம் தேதி நிலவரப்படி பாலிசிதாரர்களுக்கு வழங்கப்பட்ட மொத்த தொகை ( policy payouts amount) ரூ. 76,126 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில், ரூ. 73,546கோடியாக இருந்தது. இது 3.51 சதவிகித வளர்ச்சியாகும். இதில் 79,74,383 பாலிசிகளுக்கு இழப்பீடுகளாக (claims) வழங்கப்பட்ட ரூ. 35,482.07 கோடியும் அடங்கும். இது முந்தைய ஆண்டின் இதே காலத்தில் 73,22,250 பாலிசிகளாகவும் ரூ. 35,643.75 கோடி இழப்பீடாக இருக்கிறது.
2017 செப்டம்பர் மாதத்துடன் முடிந்த ஆறு மாதக் காலத்தில் எல்ஐசி-ன் புது வணிக பிரீமியம் அதாவது முதல் ஆண்டு பிரீமியம் 23.68% வளர்ச்சிக் கண்டு ரூ. 68,224.29 கோடியாக அதிகரித்துள்ளது.
புது வணிக பிரீமியம் மூலம் பென்ஷன் மற்றும் குழும வயது முதிர்வு ஓய்வு வணிகம் (Pension &Group Superannuation Business) மூலம் புதிய வணிக பிரீமிய வருமானம் ஆக ரூ. 47,078 கோடி திரண்டிருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில், ரூ. 37,136 கோடியாக இருந்தது. இது 27 சதவிகித வளர்ச்சியாகும்.
இந்த சமூக பாதுகாப்பு திட்டங்கள் (Social Security Schemes) பிரிவின்
கீழ் மொத்தம் 5.81 கோடி நபர்கள் இணைக்கப்பட்டிருக்கிறார்கள்.
எல்ஐசி சேர்மன் வி.கே.சர்மா |
இந்த நிதி நிலை முடிவுகள் குறித்து எல்ஐசி ஆஃப் இந்தியாவின் சேர்மன் திரு. வி.கே.சர்மா (Mr. V.K Sharma, Chairman, LIC of India) கூறும் போது, “எங்களின் செயல்பாடு, எங்களின் எதிர்பார்ப்பை ஒட்டியே அமைந்திருந்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. எல்ஐசி, அதன் வலிமையான அடிப்படை மற்றும் முக்கிய மதிப்பால் ஆரோக்கியமான நிதி நிலை முடிவுகளை கொண்டுள்ளது. நாடு முழுக்க உள்ள நம்பிக்கையான வாடிக்கையாளர்களின் ஆதரவால் இந்தப் பிரமாதமான நிதி நிலை மேம்பாடு சாத்தியமாகி இருக்கிறது. எல்ஐசி வாடிக்கையாளர்கள் திருப்தி மற்றும் லாபம் இரண்டையும் பெற்றிருக்கிறது. தொழில்நுட்ப வசதி மூலம் வாடிக்கையாளர் அனுபவம் சிறப்பாக இருக்க கவனம் செலுத்தி வருகிறோம்.”
இந்திய ஆயுள் காப்பீடு கழகம் பற்றி
எல்ஐசி-ன் தலைமையகம் மும்பையில் இருக்கிறது. இதற்கு 8 மண்டல அலுவலகங்கள், 113 டிவிஷனல் அலுவலகங்கள், 2,048 கிளைகள், 1,408 செயற்கைக்கோள் அலுவலகங்கள் (satellite offices), 1,238 மினி அலுவலகங்கள் மூலம் நாட்டு மக்களுக்கு சேவை அளித்து வருகிறது.
இந்திய ஆயுள் காப்பீடு துறையில் அதிக போட்டி இருந்தாலும், பாலிசி எண்ணிக்கையின் அடிப்படையில் எல்ஐசி 74.75% சந்தைப் பங்களிப்புடன் முக்கிய இடத்தில் இருக்கிறது. முதல் ஆண்டு பிரீமியம் அடிப்படையில் 30.09.2017 நிலவரப்படி 74.10 சதவிகித சந்தை பங்களிப்பை கொண்டிருக்கிறது.
எல்ஐசி ரூ. 5 கோடி முதலீட்டுடன் ஆரம்பிக்கப்பட்டது. இது பின்னர் ரூ. 100 கோடியாக அதிகரிக்கப்பட்டது. இன்றைய இதன் சொத்து மதிப்பு ரூ. 27.26 லட்சம் கோடியாக உள்ளது. இன்றைக்கு எல்ஐசி சுமார் 29 கோடி பாலிசிகளுக்கு சேவை அளித்து வருகிறது. தொழில்நுட்ப வசதி மூலம் எல்ஐசி அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை அளித்து வருகிறது. பிரத்யேக செயல்பாடு மற்றும் பாலிசிதாரர்களின் எதிர்பார்ப்பை செயல்படுத்துவது மூலம் இந்திய ஆயுள் காப்பீடு துறையில் மிகவும் நம்பிக்கையான பிராண்ட் ஆக எல்ஐசி திகழ்ந்து வருகிறது. இந்த நிறுவனம் கடந்த 61 ஆண்டுகளாக இந்த நம்பிக்கையை காப்பாற்றி வருகிறது. கோடிக்கணக்கானவர்களுக்கு ஆயுள் காப்பீடு சேவை அளித்து வரும் எல்ஐசி, நம் நாட்டின் வளர்ச்சிக்கும் பல்வேறு முதலீட்டு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. உள்கட்டமைப்பு மற்றும் சமூகம் சார்ந்த சேவைகள் குறிப்பாக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம், வீட்டு வசதி, தண்ணீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் திட்டங்கள், சாலைகள், பாலங்கள் மற்றும் சாலை போக்குவரத்து போன்றவற்றின் மேம்பாட்டுக்கான முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது.