மொத்தப் பக்கக்காட்சிகள்

வட்டி தொடர்ந்து உயர்ந்தால் வீட்டுக் கடன் வாங்கியவர்கள் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்..!

வட்டி தொடர்ந்து உயர்ந்தால் 
வீட்டுக் கடன் வாங்கியவர்கள் 
செய்ய வேண்டிய 5 விஷயங்கள்..!

+ நிதி சாணக்கியன்

வீட்டுக் கடனுக்கான வட்டி உயர்ந்தால்  ஃப்ளோட்டிங் எனப்ப்படும் மாறுபடும் வட்டி விகிதத்தில் கடன் வாங்கியவர்களின் மாதத் தவணை தொகை  அதிகரிக்கும். இந்தியாவில் சுமார் 80% பேர் ஃப்ளோட்டிங் வட்டி விகிதத்தில் கடன் வாங்கி இருக்கிறார்கள்.

ஓர் உதாரணத்தை பார்ப்போம்.

ஒருவர் 9% வட்டி விகிதத்தில் ரூ. 50 லட்ச கடனை 20 ஆண்டுகளில் திரும்ப கட்டும் விதமாக வாங்கி இருப்பதாக வைத்துக் கொள்வோம்.
 அவர் செலுத்த வேண்டிய மாத தவணை தொகை ரூ.44,990. வட்டி 10.5%க்கு உயர்வதாக வைத்துக் கொள்வோம்.  எனவே, அவர் செலுத்த வேண்டிய மாத தவணைத் தொகை ரூ.49,920 ஆக உயர்ந்துவிடும்.

மாதத் தவணை தொகையை ரூ.44,985 ஆக மாற்றாமல் வைத்து இருந்தால், அவர் கடனை திரும்ப செலுத்த வேண்டிய காலம் 20 ஆண்டுகளிலிருந்து 34 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்களாக அதிகரித்துவிடும்.

இந்த நிலையில் என்ன செய்வது?

1. முன்கூட்டியே பணம் கட்டுவது...! 

கையில் தேவைக்கு போக பணம் இருக்கும்பட்சத்தில் கடனை முன்கூட்டியே செலுத்தி கடன் சுமையை குறைத்துக் கொள்ளலாம். ஃபிக்ஸ்ட் டெபாசிட் மற்றும் கடன் பத்திரங்களில் செய்துள்ள முதலீட்டுக்கு குறைந்த வருமானம்தான் கிடைக்கும்.

இந்த நிலையில், அந்த முதலீடுகளை முடித்து, அதிக வட்டியை சாப்பிடும் வீட்டுக் கடனை அடைப்பது லாபகரமாக இருக்கும். உதாரணத்துக்கு உங்கள் முதலீடு உங்களுக்கு 8.5 - 9% வருமானம் தந்துக் கொண்டிருக்க நீங்கள் வீட்டுக் கடனுக்கு சுமார் 12% வட்டிக் கட்டிக் கொண்டிருப்பீர்கள். எது லாபம் என்று யோசித்து பாருங்கள்.

முழுத் தொகையையும் செலுத்த முடியாதவர்கள், குறிப்பிட்ட தொகையையும் செலுத்தலாம். சில வங்கிகள் ஓர் ஆண்டிற்கு குறைந்தபட்சம் ரூ. 20,000 முதல் ரூ.50,000 செலுத்த அனுமதிக்கின்றன. இதுபோல் ஓராண்டில் 4 முறை செலுத்தலாம். இவ்வாறு சில பத்தாயிரம் ரூபாயை முன்கூட்டியே கட்டும் போது அபராதம் இல்லை

2. மாத தவணையை அதிகரிப்பது...! 

வீட்டு வசதிக் கடன் வட்டிச் சுமையை குறைக்க, மாதத் தவணைத் தொகையை அதிகரிப்பது சிறந்தது வழி. முடியும்பட்சத்தில் அதை மேற்கொள்வது உத்தமம்.

ஒருவரின் மொத்த வருமானத்தில் அவர் செலுத்தும் மாதத் தவணை தொகை 30 -35 சதவிகிதத்துக்கு அதிகமாக இருக்கக்கூடாது என்பது நிதி ஆலோசர்களின் கருத்து.

ஏதாவது அவசர செலவு என்றால் சமாளிக்க இவ்விதம் சொல்லப்பட்டது. நீங்கள் மிகவும் சிக்கனவாதி, அவசர செலவை சமாளிக்க வேறு வழிகள் இருக்கிறது என்கிற போது தாராளமாக இ.எம்.ஐ. கூட்டிக் கட்டலாம்.

3. தவணைத் தொகை காலத்தை உயர்த்துவது..!

இப்படி தவணைத் தொகை காலத்தை உயர்த்துவது என்பது தற்காலிக சமாளிப்புதான். நீண்ட காலத்தில் நஷ்டமாகவே அமையும். இதை ஓர் உதாரணம் மூலம் பார்த்தால் எளிதில் விளங்கும்.

10 சதவிகித வட்டி விகிதத்தில் 15 ஆண்டுகளில் திரும்ப செலுத்தும் வகையில் ரூ. 50 லட்சம் கடன் ஒருவர் வாங்கி இருப்பதாக வைத்துக் கொள்வோம். அதற்கான வட்டி ரூ.47.25 லட்சமாகும். தவணை காலத்தை 25 ஆண்டுகளுக்கு நீடித்தால், செலுத்த வேண்டிய வட்டி ரூ.85.60 லட்சமாக உயர்ந்துவிடும்.

4. வங்கிகளிடம் பேசி பாருங்கள்..! 

பல வங்கிகள் புதிதாக கடன் வாங்குபவர்களுக்கு ஏற்கெனவே கடன் வாங்கியவர்களை விட குறைந்த வட்டியில் கடன் கொடுக்கின்றன.

 உங்கள் வங்கியிலும் இந்த அணுகுமுறை இருந்தால் வங்கியிடம் பேரம் பேசி வட்டியை குறைக்கலாம். நீங்கள் தவணை தவறாமல் கட்டி வருபவர்கள் என்றால், கட்டணம் எதுவும் இல்லாமல் 0.25-0.5% குறைக்க வாய்ப்பு இருக்கிறது. அல்லது இந்த திட்டத்திற்கு மாறுவதற்காக கடன் பாக்கியில் 1-2% கட்டணமாகச் செலுத்த வேண்டி வரும்.

5. வீட்டுக் கடனை வேறு வங்கிக்கு மாற்றுங்கள்..! 

வட்டியை குறைக்க வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனம் ஒத்துக் கொள்ளவில்லை என்றால் அதை விட குறைந்த வட்டியில் கடன் வழங்கும் வேறு வங்கிக்கு கடனை மாற்ற முயற்சி செய்யுங்கள். இந்த விஷயம் தெரிந்து சில வங்கிகள் வட்டியை குறைக்க முன் வரும்.

அப்படி இல்லாவிட்டால் வீட்டுக் கடனை மாற்றுவதை தவிர வேறுவழியில்லை. முன்கூட்டியே கடனை அடைப்பதற்கான அபராத கட்டணம் மற்றும் புதிதாக கடன் பெற செலுத்த வேண்டிய கட்டணம் போன்றவற்றையும் கடன் வாங்கி இருப்பவர்கள் கவனிப்பது அவசியம்.


மிக முக்கிய குறிப்பு:

எந்தக் காரணம் கொண்டும் மாதத் தவணையை அதிகரிக்காமல், தவணைக் காலத்தை அதிகரித்து விடாதீர்கள்.

அப்படி செய்யும்பட்சத்தில் பணி ஓய்வுக்கு பிறகும், ஆயுள் முழுக்க வீட்டுக் கடனை கட்டிக் கொண்டுதான் இருக்க வேண்டும்.

இந்தக் கட்டுரை முதலில் 2011 ஆகஸ்ட் மாதம் வெளியானது. 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அனைத்து நிதித் தேவைகளுக்கும் ஏற்ற மியூச்சுவல் ஃபண்டுகள் Mutual Fund

நாணயம் விகடன் & மிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து `இலக்கு அடிப்படையிலான மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு' என்ற நிகழ்ச்சியை வேலூரில...